பழமொழி.....

Saturday, November 9, 2013

RQ-4 GLOBAL HAWK....


எதிரி நாடுகளை வேவு பார்ப்பது என்பது பாதுகாப்பு உத்திகளுள் மிக முக்கியமான ஒன்று. ஒற்றர்கள் மூலமாக மட்டுமே எல்லாவற்றையும் வேவு பார்த்துவிடமுடியாது. ஒற்றர்கள் நுழைய முடியாத இடத்திலும் தொழில்நுட்பம் நுழைந்து விடுகிறது.

உலக நாடுகள் அனைத்தையும் தனது ஆயுத பலத்தால் கட்டி வைத்திருக்கும் அமெரிக்காவின் அதி நவீன கண்காணிப்பு வானூர்திகளுள் ஒன்று RQ-4 GLOBAL HAWK எனப்படும் இந்த ஆளில்லா வானூர்தி. பயணிகள் வானூர்திகளைக் காட்டிலும் 2 மடங்கு உயரத்தில் பறந்தபடி, ஒரே நாளில் சுமார் 40000 சதுர மைல் பரப்பைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டது இந்த வானூர்தி.


ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் உலகின் மேற்பரப்பில் பாதியைச் சுற்றி வந்துவிடலாம். எவ்வளவு அடர்த்தியான மேக மூட்டம் இருந்தாலும் பூமியில் நடப்பவற்றைத் கண்காணிக்கும் திறன் இந்த ஆளில்லா வானூர்திக்கு உண்டு. இந்தத் திறன்கள் காரணமாக, எதிரி நாட்டின் வான் எல்லைக்குள் செல்லாமலேயே அந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் நேரலையாக அமெரிக்காவில் உள்ள பென்டகனுக்கு அனுப்பிவிடும்.

இந்த வானூர்தியின் உயரம் 15 அடி, நீளம் 48 அடி. சிறகுப் பகுதியின் அகலம் 132 அடி. இந்த வானூர்தியில் 1360 கிலோ எடை கொண்ட மின்னணுக் கருவிகளை எடுத்துச் செல்ல முடியும். இந்த வானூர்தி பற்றிய முக்கியமான பல தகவல்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.


அண்மைக்கால மதிப்புப்படி, ஒரு RQ-4 GLOBAL HAWK வானூர்தியைத் தயாரிப்பதற்கு ஆகும் செலவு மட்டும் சுமார் 5000 கோடி ரூபாய். அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை இது போன்ற 45 வானூர்திகளைப் பயன்படுத்தி வருகின்றன.

போர்க்காலங்கள், ஆய்வுப் பணி, உளவு பார்ப்பது தவிர, அணுஉலை வெடிப்பு, கலிபோர்னியா காட்டுத் தீ உள்ளிட்ட பேரிடர்க் காலங்களிலும் இந்த வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் நேட்டோ நாடுகள் சார்பில் இதுபோன்ற 5 வானூர்திகள் வாங்கப்பட்டுள்ளன.


தற்போது தென் கொரியாவும் ஒரு வானூர்தியை வாங்க முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதையும் ஒரே நேரத்தில் பார்க்கும் அமெரிக்காவின் கண்கள் என்றே இந்த ஆளில்லா வானூர்திகளைக் கூறலாம்.



Thursday, October 31, 2013

விண்வெளியில் VIRGIN ATLANTIC...


VIRGIN ATLANTIC நிறுவனம் விண்வெளிக்கு செல்வதற்கு விசேட வானூர்தியை வடிவமைத்து அதனை வெள்ளோட்டம் விடவும் தயாராகிவிட்டது. VIRGIN ATLANTIC நிறுவனத்தின் உரிமையாளர் ரிச்சாட் பிரான்சன் அவர்கள் இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பூமிக்கு வெளியே இவ் வானூர்தி பறப்பில் ஈடுபட்டு பின்னர் பூமியை வந்தடையும் எனவும் மிகவும் பாதுகாப்பாகவும் நேர்த்தியாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளியில் செல்லும் இவ்வானூர்தியில் இருந்து பூமியின் பூகோளத்தை அவதானிக்க முடிவதோடு, முதல் முறையாக புவி ஈர்ப்பு சக்தியற்ற அண்டவெளியில் நாம் மிதக்கும் அனுபவமும் எமக்குக் கிடைக்கும். ஆசனப் பட்டிகளை விலக்கி, வானூர்தியினுள் மிதக்கவும் முடியும். 


VIRGIN ATLANTIC நிறுவனதின் திட்டப்படி, இந்த விண்வெளி சுற்றுலா என்பது இரண்டு கட்டப் பயணம். ஒன்று White Knight Two எனப்படுகிறது. இது விண்வெளியில் பறக்காது. மற்றது SpaceShipTwo எனப்படும் இன்னொரு குட்டி வானூர்தி. White Knight Two இன் கீழ்ப் பகுதியில் SpaceShipTwo பொருத்தப்பட்டிருக்கும். விண்வெளி சுற்றுலா போகும் பயணிகள், SpaceShipTwo இல் தான் இருப்பார்கள். பயணிகளோடு SpaceShipTwo வையும் சுமந்துகொண்டு, White Knight Two பறக்கத் தொடங்கும். சுமார் 52 ஆயிரம் அடி உயரத்துக்குப் போனதும், White Knight Two நிதானமாக பறந்துகொண்டிருக்க சேர்ந்து வந்த SpaceShipTwo தனித்து இயக்க ஆரம்பித்து, கணப்பொழுதில் White Knight இல் இருந்து விடுபட்டு அசுர வேகத்தில் பறக்கத் தொடங்கும்.


பூமியிலிருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ள பகுதியைத்தான் விண்வெளி (Space) என்கிறார்கள். (சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றுவது சுமார் 150 கி.மீ. உயரத்தில்) அந்த உயரம் வரை சென்று விண்வெளியை சுற்றிக்காட்டிவிட்டு, SpaceShip பூமிக்கு திரும்பிவிடும். மேலே செல்வதற்கு மட்டுமே White Knight இன் உதவி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் சேர்த்து மொத்தம் இரண்டரை மணி நேரப் பயணம். அதில் விண்வெளியைத் தொடும் நேரம் 6 நிமிடங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எடையில்லாத் தன்மையை பயணிகள் அப்போது மட்டும் உணர்வார்கள்.


SpaceShipTwo குட்டி வானூர்தி என்பதால் அதில் 6 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.





Tuesday, October 29, 2013

Improved Gray Eagle..


மேம்படுத்தப்பட்ட சாம்பல் நிறக் கழுகு (Improved Gray Eagle) என்னும் பெயருடைய ஆளில்லாப் போர் வானூர்தி தொடர்ந்து 45.3 மணித்தியாலங்கள் பறந்து சாதனை படைத்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை நிறுவனமான General Atomics Aeronautical Systems இந்த Gray Eagle வானூர்தியை உருவாக்கியுள்ளது.


Improved Gray Eagle நீண்ட தூரம் மற்றும் அதிக நேரம் தாக்குப் பிடிக்கக் கூடிய ஆளில்லா வானூர்தியாகும். A Medium-Altitude Long-Endurance (MALE) . 1.7கனமுடைய டீசல் பிஸ்டன் பொறியில் இது இயங்குகிறது. 25ஆயிரம் அடிகள்(7600மீ) உயரத்தில் பறக்கக் கூடியது. 

நிலத்தில் நகரும் பொருட்களை துல்லியமாக இனம் காணும் தூரப்புல மானி (Synthetic Aperture Radar) பொருத்தக் கூடிய வகையில் Gray Eagle ஆளில்லாப் போர் வானூர்தியின் மூக்கு பெரிதாக்கப்பட்டுள்ளது. இது எண்ணூறு இறாத்தல்(360கிலோ) எடையுள்ள குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியது. 


Gray Eagle ஆளில்லாப் போர் வானூர்தி AGM-114 Hellfire missiles என்னும் ஏவுகணைகளையும் GBU-44/B Viper Strike guided bombs என்னும் வழிகாட்டப்பட்டுச் செல்லும் குண்டுகளையும் தாங்கிச் சென்று தாக்கக் கூடியவை. 

                                             The AGM-114 Hellfire

The AGM-114 Hellfire ஏவுகணைகள் தரையிலிருந்து தரைக்கும் வானூர்திகளில் இருந்து தரைக்கும் ஏவக் கூடியவை (ASM). பலதரப்பட்ட இலக்குகளையும் இவை தாக்கி அழிக்கக் கூடியவை. 

                                  GBU-44/B Viper Strike guided bombs            

GBU-44/B Viper Strike guided bombs என்னும் குண்டுகளை GPSமூலமாகவும் laser-guidance மூலமாகவும் வழிகாட்டி இலக்குகளைத் தாக்கலாம்.

அமெரிக்கா தீவிரவாதிகளைக் கொல்லும் நடவடிக்கைகளுக்கு ஆளில்லாப் போர் வானூர்திகளில் பெரிதும் தங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல அது தனது எதிர்காலப் போர் நடவடிக்கைகளுக்கும் போர் முனை உளவு பார்த்தல் நடவடிக்கைகளுக்கும் ஆளில்லாப் போர் வானூர்திகளையே நம்பியிருக்கிறது.

Thursday, October 17, 2013

Airbus A350 XWB..


அமெரிக்க தயாரிப்பான போயிங் ரீம்லைனர் (Boeing Dreamliner 787-9) வானூர்திக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்கள் கொண்ட புதிய வானூர்தியை ஏர்பஸ் (Airbus) நிறுவனம் முதல்முறையாக பிரான்ஸ்சில் உள்ள Toulouse-Blagnac Airport இல் பறக்கவிட்டுள்ளது. A350 XWB என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வானூர்தி அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏர் பஸ்ஸின் புதிய A350 XWB வானூர்தி 400க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவுக்கு பெரியது. அத்துடன் புதிய காற்றியக்கவியல் (Aerodynamics) வடிவமைப்பு மற்றும் நவீன தொழிநுட்பங்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் Airframe டைட்டானியம் மற்றும் அலுமினிய கலவைகள் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வானுடல் (Fuselage) Carbon Fibre Reinforced Plastic (CFRP) என்ற நிறை குறைந்த Plastic ஆல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் செலவும் குறைவு, பராமரிப்பும் எளிது.


இவ் வானூர்தியில் முழுமையாக எரிபொருள் நிறப்பினால், 8,400 மைல் பறக்கக்கூடியது. அதாவது, Toronto - Hong kong தொடர்ச்சியாக சிக்கல் எதுவுமின்றி பறக்கக் கூடியது.



Wednesday, October 16, 2013

New Dreamliner 787-9


அமெரிக்காவில் போயிங் (Boeing) நிறுவனத்தின் புதிய வகை கனவுவானூர்தியின் 787-9 (New Dreamliner 787-9) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

போயிங் வானூர்திகள் குறிப்பாக Dreamliner எனப்படும் கனவு வானூர்திகள் பயணிகள் போக்குவரத்திற்கு மிகவும் வசதியானதாகும். குறைந்த எரிபொருளில் நீண்ட தூரம் பயணிக்கக் கூடியதாகவும், நடுத்தர அளவு கொண்டவையாகவும் தயாரிக்கப்படுகின்றன.


787-8 வகையைச் சேர்ந்த, போயிங் வானூர்தி கடந்த 2011-ம் ஆண்டு, சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 290 இருக்கைகளைக் கொண்ட இந்த வானூர்தியை விட மேம்பட்டதாக, 787-9 வகை போயிங் வானூர்தி தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. 

இது 310 இருக்கைகளைக் கொண்டதுடன் 250 knots வேகத்திலும் செல்லக்கூடியது (இது ஒலியின் வேகத்தை விட சற்று குறைவானது), இதன் வெள்ளோட்டம் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள எவரெட் பகுதியில் Paine Field என்னுமிடத்தில் போயிங் தொழிற்சாலைக்கு வெளியில் எடுத்துவரப்பட்டு வானோடிகள் Mike Bryan மற்றும் Randy Neville ஆகியோரின் தலைமையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இவ் வெள்ளோட்டம் செப்டம்பர் 17ஆம் திகதி நடத்தப்பட்டது. வெள்ளோட்டதின் போது இவ் வானூர்தி 20,400 அடி உயரத்தில் 5 மணி 16 நிமிடம் வெற்றிகரமாக பறந்து தனது புதிய வரவை உலகுக்கு அறிவித்தது.

இப்புதிய வரவு 2014 மத்தியில் Air New Zealand வானூர்தி நிறுவனமூடாக வான் பயணிகளுக்காக சேவையில் ஈடுபடவுள்ளது. இப்போது போயிங் (Boeing) நிறுவனம் தனது மூன்றாம் பதிப்பான Dreamliner 787-10 இல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.


Seating: 
250 to 310 passengers

Range:
8,000 to 8,500 nautical miles (14,800 to 15,750 kilometers)

Cross Section:
226 inches (574 centimeters)

Wing Span:
197 feet (60 meters)

Length:
206 feet (63 meters)

Height:
56 feet (17 meters)

Cruise Speed:
Mach 0.85

Maximum Takeoff Weight:
553,000 lbs (250,836 kg)

Total Cargo Volume:
5,400 feet3 (153 m3)

Program Milestones:
Final assembly: May 2013
First flight: Sept. 17, 2013
First delivery: Mid-2014



Monday, October 14, 2013

மாற்றி அமைக்கப்பட்ட F-16


வானூர்திப் படையில் இருந்து ஒய்வு கொடுத்து அனுப்பப்பட்ட ஜெட் போர் வானூர்திகளை மீண்டும் புதுப்பித்து ஆளில்லா வானூர்தியாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கும் போயிங் (Boing ) வானூர்தி நிறுவனம் Lockheed Martin F-16 ரக வானூர்தி ஒன்றை ஆளில்லா வானூர்தியாக ஆக்கியிருப்பதாகக் கூறியிருக்கிறது

Lockheed Martin F-16 ரக வானூர்திகள் தரத்திலும் திறனிலும் சிறந்தவை என்றாலும் இப்பொழுது அவை தயாரிக்கப்படுவதில்லை.


இந்த F-16 ரக போர் வானூர்தி வானோடிகள் இல்லாமல், கடந்த மாதம் அமெரிக்காவில் பறக்கவிடப்பட்டது. அமெரிக்க மாநிலமான புளோரிடாவில் இருந்து மெக்ஸிகோ வளைகுடாவிற்கு பறந்த இந்த ஆளில்லா எப்.16 வானூர்தியை , தரையிலிருந்து இரண்டு அமெரிக்க வான்படை வானோடிகள் இயக்கினர்.

கடந்த 15 ஆண்டுகளாக அரிஸோனா மாநிலத்தின் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் பழைய வானூர்தி மணிக்கு 1800 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்தது.

இந்தப் பறத்தலின் போது,அது தலைகீழாகப் பறப்பது உள்ளிட்ட பல வான் சாகசங்களையும் செய்தது.




Wednesday, October 2, 2013

Clip Air...

தொடரூந்தை தூக்கிச் செல்லும் வானூர்தி....


E.P.F.L என்ற சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் CLIP AIR, இதன்படி தொடரூந்து பாதையில் சென்று கொண்டிருக்கும் தொடரூந்து பெட்டிகளை பறந்து செல்லும் வானூர்தி, தூக்கிச் சென்று சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லும்.


ஒரு நேரத்தில் 3 பெட்டிகளை இந்த வானூர்தியால் கொண்டு செல்ல முடியும். பயணிகள், பொருட்கள், மசகு எண்ணெய் போன்றவற்றை இந்த வானூர்திகள் எடுத்துச் செல்லும். இந்த வானூர்தி மாதிரியின் மூலம் தொடரூந்து, தரை மற்றும் வான்வழிப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் முறை சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற வானூர்திகளுக்காக இப்போது வானூர்தி நிலையம் (Airport) இருப்பதைப் போன்று வருங்காலத்தில் விண் நிலையங்கள் (Sky Stations) என்பவை அமைக்கப்படும்.


அங்கு தொடரூந்துகளில் ஏறினால் செல்ல வேண்டிய இடத்துக்கு வானூர்திகளே வந்து ரயில்பெட்டிகளைத் தூக்கிச் சென்று இறக்கிவிடும். ரயில் பெட்டிகள் தூக்கப்படும்போதும், இறக்கிவிடப்படும்போதும் மட்டும் பயணிகள் தங்களது இருக்கைகளில் அமர வேண்டும். மற்ற நேரங்களில் ரயில் பெட்டிகளுக்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். தற்போதுள்ள ரயில்பெட்டிகளைப் போல் இல்லாமல், சக்கரங்கள் இல்லாத பெட்டிகளாக இவை இருக்கும். CLIP AIR போன்றே, பிரிட்டனின் கிளஸ்கோ (Glasgow) பல்கலைக்கழக மாணவர்களும் இதுபோன்ற தொடரூந்துதை தூக்கிச் செல்லும் வானூர்தி மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

இது CLIP AIR ஐ விட கூடுதல் பெட்டிகளைத் தூக்கிச் செல்லும் வசதியுடன் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பறக்கும் தொடரூந்துகள் நடைமுறைக்கு வந்தால், வானூர்தி நிலையத்துக்கு காரில் செல்வது, வானூர்தி நிலையத்தில் காத்திருப்பது போன்ற பயண நேரங்கள் மிச்சமாவதுடன், செல்ல வேண்டிய இடத்துக்கும் நேரடியாகச் சென்று சேர முடியும்.


Wednesday, August 14, 2013

Hyperloop..


போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தொடருந்து போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் கன்கார்டு (Concorde Aircraft) வானூர்தியின் தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார்.



மின்காந்த அலைகளை கொண்டு இயங்கும் இந்த வாகனம் தரையை தொடாமல் காற்றின் மேல் வழுக்கிக் கொண்டும் செல்வதாக இருக்கும். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் ஃபிரான்சிஸ்கோவுக்கும் லாஸ் ஏஞ்சலிசுக்கும் இடையிலான 600 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வாகனம் அரை மணி நேரத்தில் கடக்கும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார்.

இது வானூர்தி பயணத்தை விட இரு மடங்கு வேகமானதாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் (Elon Musk) கூறினார். மணிக்கு 800 மைல் வேகத்தில் செல்லும் இந்த வாகனம் செலவு குறைவானதாகவும் பாதுகாப்பு மிக்கதாகவும் இருக்கும் என்றும் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார்.


Saturday, August 3, 2013

XB-70 வானூர்தி..



அமெரிக்க ராணுவம் கடந்த 1950 இல் எதிரிகளின் இலக்கை தாக்குவதற்கு பலம் வாய்ந்த பி-52 என்ற (Boeing B-2) போயிங் ரக வானூர்தியை பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் தனது அணு ஆயுத பலத்தை பெருக்கும் வகையில் உயரத்தில் பறந்து சென்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் வாய்ந்த வானூர்திகளை உருவாக்க முடிவு செய்தது.


இதற்காக உருவாக்கப்பட்டது தான் உலகின் முதல் அணு ஆயுத வானூர்தி என கருதப்படும் XB-70 Valkyrie என்ற அதி நவீன வானூர்தி ஆகும். எதிரி வானூர்திகளின் தாக்குதலில் இருந்து எளிதில் தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வானூர்தி சுமார் 70,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது. இது North American Aviation என்ற அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது1950 இல் இது உருவாக்கப்படும்போது பிரபலமாகவில்லை. ஆனால் 80 மற்றும் 90களில் மிகவும் பிரபலமாக இருந்தது. 


வானூர்தியின் பாகங்கள் துருபிடிக்காத உலோக கலவையால் உருவாக்கப்பட்டன. அதிக வெப்பத்தை வெளியிடும் இந்த சூப்பர்சோனிக் வானூர்தியின் சில பாகங்கள் ரெனி 41 (Rene-41) என்ற உலோக கலவையை கொண்டும் உருவாக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக இவ் வானூர்தியின் கதை நடுவானிலேயே முடிந்து போனது. 1966 இல் F-104 வானூர்தி பறந்து செல்லும் போது அதனுடன் விபத்துக்குள்ளாகி XB-70 வெடித்து சிதறியது. தயாரிக்கப்பட்ட இரு வானூர்திகளில் தற்போது ஒன்று மட்டுமே மீதமுள்ளது. இது பற்றிய விவரங்களை அமெரிக்காவின் ஓகியோ (Ohio) மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க விமான படை தேசிய அருங்காட்சியகத்தில் காணலாம்.

XB-70 விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறும் காணொளி....



Tuesday, July 30, 2013

AWACS தொழிநுட்பம்..





அவாக்ஸ்' (AWACS) airborne warning and control systems (வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு) எனப்படும் நவீன தொழிநுட்பமானது இன்று பலவகை வானூர்திகளில் மற்றும் உலங்கு வானூர்திகளில் பயன்படுத்தப்படுகிறது. எதிரிநாட்டு போர் வானூர்திகள் வந்தால் அதனை கண்டறிந்து எச்சரிகை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை இவ்வகை தொழிநுட்பத்தின் சிறப்பம்சமாகும்.

'வானத்தில் இருக்கும் கண் ' என்று அழைக்கப்படும் இந்த தொழிநுட்பம், எதிரிநாட்டு வானூர்திகள் ஆயுதங்களை சுமந்துகொண்டு நாட்டின் எல்லைக்குள் நுழைந்தால் அதனை கண்டறிந்து வானூர்தி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கும் திறன் கொண்டது. அத்துடன் வான்வழி தொடர்புகளையும் கவனிக்கும் திறன் கொண்டது.




எதிரி படைகளை கண்காணிக்க வானூர்திப் படையில் ‘அவாக்ஸ்' பயன்படுத்தப்படுகின்றன. இது வானூர்தியின் மேல் பகுதியில் (Dish Antenna) செய்மதி ஆண்டனா வடிவில் ரேடார் பொருத்தப்பட்டிருக்கும். இந்த வானூர்திகள் மூலம் வானில் மிக உயரத்தில் பறந்தபடியே, வெகு தொலைவில் உள்ள எதிரிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கணக்கிட்டு தகவல் அனுப்ப முடியும்.





அவாக்ஸ்' (AWACS) தொழிநுட்பத்தின் சிறப்பம்சங்கள்......

  1. எல்லை தாண்டி வரும் வானூர்திகள், உலங்கு வானூர்திகள், கப்பல்கள் போன்றவற்றை பல மைல் தூரத்தில் கண்டறிந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுக்கிறது. 
  2. இத் தொழிநுட்பமானது தற்காப்பு தாக்குதல் மற்றும் வானூர்தித் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் (Defensive and Offensive air operations) பயன்படுத்தப்படுகிறது.
  3. இதன் மூலம் பாரிய பிரதேசத்தை கண்காணிக்க மற்றும் கட்டுப்பாடில் வைத்திருக்கமுடியும். ( 30,000 அடி உயரத்தில் பறக்கும் ஒரு அவாக்ஸ் வானூர்தியால் 120,460 சதுர மைல் பரப்பை (312,000 சதுர கிலோமீட்டர்) கண்காணிக்கமுடியும் )



Tuesday, June 25, 2013

நுளம்பு உளவாளி..



அமெரிக்க விஞ்ஞானிகள் நுளம்பு வடிவிலான வானூர்தி ஒன்றைத் தயாரித்துள்ளனர். இது முற்றிலும் ஒரு உளவாளியைப் போல் கண்காணிக்கும் திறனுள்ள மிகச் சிறிய ஆளில்லா
வானூர்தியாகும்.

இதனை இன்னும் தயாரித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து தூர இயக்கி (Remote Control) மூலமாக விரும்பியவாறு இயக்கலாம்.

இந்த நுளம்பு நவீனரக மிகச் சிறிய ஒளிப்படக்கருவி (Camera) மற்றும் ஒலிவாங்கி (Microphone) ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
நுளம்பு போன்று பறக்கும் மேற்ப்படி வானூர்தியை Remote மூலமாக நுளம்பைப் போலவே பறக்கச் செய்து கச்சிதமாக மனிதர்கள் மீது உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம்.

பின்னர் தமது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்தியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதி) எடுத்து விடலாம். முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரைப் பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFID Nanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த நுளம்பு வானூர்தியால் முடியும்.

சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடகவே பறந்து சென்று ஒருவரின் வீட்டிற்குள் நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.
அத்துடன், இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஓட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டுக்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.

மேலும், அதிக திறமை வாய்ந்த இவ்வகை வானூர்திகள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும் தான் பெரிதும் பயன்படுகின்றன.

Wednesday, June 19, 2013

அதி வேக உலங்கு வானூர்தி


தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியுடன் இணைந்து பிரான்சின் உலங்குவானூர்தித் தயாரிப்பான EUROCOPTER தனது புதிய X3 (X-cube) எனும் உலங்குவானூர்தியை அறிமுகம் செய்துள்ளது. இந்த X3 உலங்குவானூர்தி இதுவரை உலகிலுள்ள அனைத்து உலங்குவானூர்திகளையும் விட அதி வேகமாகச் செல்லக் கூடியது. இப்புதிய உலங்கு வானூர்தியானது EC155 எனும் பழைய உலங்கு வானுர்தியின் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


இது வரை வேகத்தில் சாதனை படைத்து மணிக்கு 460 கிலோமீற்றர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருந்த அமெரிக்காவின் Sikorsky X2 உலங்குவானூர்தியின் சாதனையை முறியடித்து மணிக்கு 472 கிலோமீற்றர் ( 255 knots) வேகத்தில் இந்த புதிய X3 சென்றுள்ளது. Hybrid எனப்படும் வானுர்தி மற்றும் உலங்கு வானூர்தித் தொழில் நுட்பத்தை உள்ளடக்கிய இந்த X3 பத்தாயிரம் அடி உயரத்தில் அதாவது 3,048 மீற்றர் உயரத்தில் தனது உச்ச வேகத்தைத் அடைந்துள்ளது. இதுவே உலகின் மிக வேகமான உலங்குவானூர்தியாக உள்ளது.

தற்போது இது 19 இருக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் 2020ம் ஆண்டளவில் 30 தொடக்கம் 40 வரையான இருக்கைளை உடையதாக மெருகூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


லூ பூர்ஜே (Le Bourget) வானுர்திக் கண்காட்சியில் பங்குபற்றும் இந்த உலங்கு வானூர்திக்கான கொள்வனவுக் கட்டளைகள் பல நாடுகளிடமிருந்து கிடைத்துள்ளதாக EUROCOPTER நிர்வாகம் கூறியுள்ளது.


Monday, June 17, 2013

அவசரகால தரையிறக்கம்..


வானூர்தியின் அவசரகால தரையிறக்கம் (Emergency landing or Crash landing) என்பது வானூர்தியை விபத்திலிருந்து தவிர்ப்பதர்காகவும், பயணிகளின் உயிரிழப்புக்கள் மற்றும் வானூர்திக்கு ஏற்படவிருக்கும் சேதங்களை தடுப்பதற்காகவும் வேறு வழியில்லாமல் வானூர்தியை உடனடியாக தரைக்கு கொண்டுவருதல்.

வானூர்தியின் அவசரகால தரையிறக்கத்தின் வகைகள்...

கட்டாயத் தரையிறக்கம் (Forced Landing)


கட்டாயத் தரையிறக்கமானது வானூர்தியை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எவ்வித திட்டமிடலுமின்றி தரையிறக்குதலாகும். இயந்திரங்கள் (Engines), Hydraulic System , Landing Gears போன்ற முக்கிய பாகங்கள் பழுதடைதல் அல்லது செயல்ப்படாமை போன்ற காரணங்களால் இப்படியான தரையிறக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் போது அண்மையில் உள்ள ஓடுபாதையில் தரையிறக்க வேண்டும், அல்லது பயணிகள் மற்றும் வானூர்தி போன்றவற்றுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்த்து பாதுகாப்பான நிலத்தில் தரையிறக்க வேண்டும்.

முன் எச்சரிக்கைத் தரையிறக்கம் (Precautionary landing)


இது திட்டமிடலுடன் கூடிய ஓர் அவசர தரையிறக்கமாகும். மருத்துவ உதவி, பயணி வானூர்தியில் குழப்பம் விளைவித்தல், காலநிலை மாற்றம், தொழிநுட்பக் கோளாறு, எதிர்பாராத மாற்றங்கள் போன்ற காரணங்களால் இப்படியான தரையிறக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் போது வானோடி பாதுகாப்பான ஓர் ஓடுபாதையை தெரிவு செய்து கட்டுப்பாட்டு கோபுரத்தின் அறிவுறுத்தல்ப் படி தரையிறக்க வேண்டும்.


நீர்த் தரையிறக்கம் (Ditching)


நீர்த் தரையிறக்கம் என்பதும் கட்டாயத் தரையிறக்கம் போன்றது தான். ஆனால் இது கடல், சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில் மேற்கொள்ளப்படும் தரையிறக்கமாகும். வானூர்திகள் மிதக்கும் தன்மை கொண்டவை அல்ல. ஆனாலும் நீர்த் தரையிறக்கத்தை சரியாக செய்தால் வானூர்தி நீரில் மூழ்க சில மணித்தியாலங்கள் ஆகும். அந்நேரத்தில் பயணிகளையும், வானூர்தி ஊழியர்களையும் மீட்க முடியும். (நீர்த் தரையிறக்கத்தின் போது வானூர்தி நீரில் மூழ்கிவிடும்)


வானூர்தியின் அவசரகால தரையிறக்கத்தின் போது,
  1. வானூர்தி பறக்கும் உயரமும், வேகமும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
  2. வானோடி (Simulated Forced Landings) என்பதில் சிறப்பு பயிற்சி பெற்றுக்கவேண்டும்.
  3. பயணிகள் மற்றும் வானூர்தி போன்றவற்றுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்த்து தரையிறக்க வேண்டும்.



Saturday, June 15, 2013

Bag 2 Go..


தற்காலத்தில் வெளிநாடு செல்பவர்களுக்கு வானூர்திப் பயணம் மட்டும் தான் ஒரே தெரிவு . இதற்காகவே பல வானூர்தி நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் வானூர்திப் பயணத்தில் உள்ள பிரச்சினைகளில் ஒன்று (Baggage) பயணப்பொதிகள். நாம் வானூர்தியில் ஏற முன்னர் Check-in Counter இல் எமது பயணப்பொதிகளை கையளிப்போம். பல நேரங்களில் அந்தப் பயணப்பொதிகள் மீண்டும் நம் கைக்கு வராமல் போகின்றன. 

இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக ஏர் பஸ் (Air Bus) நிறுவனம் ஒரு புது வித பயணப்பொதியைக் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பெயர் "Bag 2 Go".


இதன் மூலம் உங்கள் பயணப்பொதியை Check-in செய்த உடன் உங்களது கைப்பேசியில் உடனே Track செய்து கொள்ளலாம்.

இதன் உதவியுடன் நீங்கள் வானூர்தியில் ஏறும்போது கூட உங்கள் பயணப்பொதி வானூர்தியில் ஏற்றப்பட்டுவிட்டதா என தெரிந்து கொள்ளலாம்.

பின்னர் வானூர்தியிலிருந்து இறங்கிய பின்னரும் Track செய்து பயணப்பொதி எங்குள்ளது அல்லது யாராவது எடுக்கிறார்களா என கூடப் பார்க்க முடியும்.


Thursday, May 30, 2013

சூரியக் கப்பல்...


இறக்கைகள் மற்றும் எரிபொருட்கள் இல்லாமல் வானூர்தியோ அல்லது உலங்கு வானூர்தியோ பறக்க இயலாது. ஆனால் இந்த வானூர்தி இறக்கைகள் மற்றும் எரிபொருட்கள் இல்லாமல் பறக்கக் கூடியது இதன் பெயர் தான் (Solar Ship) சூரியக் கப்பல்.

இந்த வானூர்தியின் மேற்ப்பகுதியில் ஹீலியம் (He) வாயு நிரப்பப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் தான் சூரியக் கப்பல் மேலே மிதந்து பறக்கிறது. ஹீலியம் வாயு அடங்கியது என்பதால் அது வடிவில் பெரியதாகவும் இருக்கிறது சூரியக் கப்பலின் மேற்புறத்தில் நிறைய சூரிய சக்திப் பலகைகள் (Solar panels) பொருத்தப்பட்டுள்ளன .இவை மின்சாரத்தை அளிக்கும். சூரியக் கப்பல் வானில் முன்னோக்கிச் செல்வதற்கு வலு கொடுக்கும் இயந்திரங்கள் இயங்க இந்த மின்சாரம் உதவும். சூரியக் கப்பலில் குளிர் சாதனப்பெட்டி இருக்கும். விசேஷ வகை மருந்துகளை இதில் எடுத்துச் செல்லலாம்.


சூரியக் கப்பல் தரையிலிருந்து கிளம்பவோ தரை இறங்கவோ நீண்ட ஓடுபாதை தேவையில்லை. பள்ளிக்கூட சிறிய மைதானம் அளவுக்குத் திறந்த வெளி இருந்தால் போதும்.சிறியது, நடுத்தரம், பெரியது என மூன்று ரகங்களில் இவை தயாரிக்கப்படும். சிறிய வானூர்தி ஒரு தொன் பொருட்களை ஏற்றிக்கொண்டு, அதிகபட்சம் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியது. பெரிய வானூர்தியில் 30 தொன் அளவுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லலாம்.


பூகம்பத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்ல சூரியக் கப்பல் ஏற்றதாக விளங்கும். அத்துடன் தகுந்த சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு வானூர்திகளோ அல்லது உலங்கு வானூர்திகளோ போய் இறங்க முடியாத பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பவும் நிபுணர்கள் செல்லவும் இந்த வாகனம் உதவியாக இருக்கும்.

கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சூரியக் கப்பலை உருவாக்கியுள்ளது. இதன் நிறுவனரான ஜே காட்சால் (Jay Godsall) ஆப்பிரிக்காவில் மருந்து விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இப்படியான ஒரு வானூர்தியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குது தோன்றியது. பல முயற்சிகளுக்குப் பிறகு அவரது கனவு நனவாகியது.


சூரியக் கப்பல் சோதனை ஓட்டமாகப் பல தடவைகள் பறந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் இணையதளம்  http://solarship.com





Wednesday, May 29, 2013

உடற் தரையிறக்கம்... (belly landing)


வானூர்தியின் "உடற் தரையிறக்கம்" (belly landing or gear-up landing) என்பது வானூர்தியின் உடலால் தரையிறங்குவது அதாவது வானூர்தியின் வயிற்றுப்பகுதியை (கீழ்ப்பகுதி) ஓடுபாதையில் (Run Way) தேய்த்துக்கொண்டு தரையிறக்குவதாகும்.

‘belly landing’ என்பது மிகவும் ஆபத்தான நடைமுறை. ஆனால் வானோடிக்கு வேறு வழியில்லை என்றால் தரையிறங்க இதைவிட வேறு வழியுமில்லை. இப்படி தரையிறங்குவதன் காரணம் வானூர்தியின் சில்லுகள் (undercarriage or landing gear) வெளியே வராமல் வானூர்திக்கு உள்ளே சிக்கியிருப்பது தான்.



இதில் என்ன பயமென்றால்,

  1. தரையிறங்கிய வானூர்தி ஓடு பாதையில் உராய்வதால் தீப்பற்றிக் கொள்ளலாம். 
  2. வானூர்தி ஒரே மட்டத்தில் தரையில் தொடாவிட்டால் கவிழ்ந்து போகலாம். 
  3. காற்று வேகமாக அடித்தால் வானூர்தியின் இறக்கை தரையில் மோதி உடையலாம் (இறக்கையில் தான் எரிபொருள் சேமிப்பகம் உள்ளது) 

belly landing மூலம் தரையிறங்கும் போது,
  1. வானூர்தியில் இறங்குவதற்கான எரிபொருளுடன் மட்டும் தரையிறக்க வேண்டும்.
  2. கட்டுப்பாட்டு கோபுரத்துடன் துல்லியமான தொடர்பை பேணவேண்டும்.
  3.  வானூர்தி நிலையத்தில் Runway மற்றும் Taxiway எந்தவொரு வானூர்தியும் இல்லாது பார்த்துக் கொள்ளப்படவேண்டும்.
  4. தீயணைப்பு வண்டிகள் மற்றும் மருத்துவ வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளப்படவேண்டும.
  5. வானோடி மிகத் திறமையுடன் வேகம் மற்றும் உயரத்தைக் கணித்து ஓடுபாதையில் தரையிறக்க வேண்டும்.
  6. ஓடுபாதையின் மீதான வானூர்தியின் தொடுகை மிக முக்கியம். அதில் தவறு ஏற்பட்டால் வானூர்தி சறுக்கி விபத்து ஏற்படும்.

belly landing தரையிறக்க நிலைமையை ஏற்ப்படுத்தும் காரணிகள், 
  1. வானோடிகளின் தவறுகள். (வானோடிகள் அறிவித்தல் பட்டியல் படி(Checklist) செயற்ப்படமை)
  2. காலநிலை. (வானூர்தியின் landing gears அமைப்பின் உள்ளே பனிக்கட்டிகள் உருவாகி landing gears செயற்படாமல் இருத்தல்)
  3. இயந்திரக் கோளாறு. (வானூர்தியின் landing gears அமைப்பைக் கட்டுப்படுத்தும் electric motors (மின் இயந்திரங்கள்) or hydraulic actuators (நீரியல் முனைப்பிகள்) பழுதடைதல் அல்லது செயற்ப்படாமை)
ஆனால் A-10 Thunderbolt II போன்ற சில வானூதி வகைகள் பாதுகாப்பாக
belly landing மூலம் தரையிறக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


Thursday, May 9, 2013

Solar Eagle..


ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு வானூர்தி ஒன்றை போயிங் (Boing) நிறுவனம் தயார் செய்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் இந்த உளவு வானூர்தியை தயாரிக்க அமெரிக்க இராணுவம் போயிங் நிறுவனத்திடம் அனுமதி வழங்கியது.
 
சோலார் ஈகிள் (Solar Eagle) ன்ற பெயரில் உளவு வானூர்தியைத் தயாரித்துள்ள போயிங் நிறுவனம் அதைப் பரிசோதித்து வருகிறது. இந்த வானூர்தி நிற்காமல் விண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்குமாம்.

இந்த வானூர்தியின் இறக்கையில் உள்ள சூரியத் தகடுகள் (Solar Impulse) பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும். இதன் மூலம் வானூர்தியின் மின்னியல் இயந்திரங்கள் (Electric Motors) மற்றும் உந்துகணைகள் (Propellers) இயங்கும். வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து படங்கள் மற்றும் உளவுத் தகவல்களைத் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த வானூர்தி அனுப்பிக் கொண்டிருக்கும்.

முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் வானூர்தி 30 நாள் தொடர்ந்து பறக்கவுள்ளது. இந்த சோலார் ஈகிள் வானூர்தி 2014ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.




Friday, April 19, 2013

Laser Jumbo...


எதிரி நாட்டு ஏவுகணைகளை பல்வேறு நிலைகளிலும் வைத்து தாக்கி அழித்தொழிக்கும் வகையில் மிகவும் சக்தி வாய்ந்த இரசாயன சீரொளிக் கதிர்களை (Chemical Laser) பாய்ச்சக் கூடிய நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்து அதனை போயிங் 747 வானூர்தியில் பொருத்தி, வானூர்தியின் மூக்குப் பகுதியில் உள்ள விசேட கட்டுப்பாட்டுக் கருவி மூலம் சீரொளியை தேவைக்கு ஏற்ப பாய்ச்சி எதிரி நாட்டு ஏவுகணைகளை கண்டறிந்து அழிக்க முடியும்.


இதில் பயன்படுத்தப்படும் உயர் சக்தி இரசாயன ஒக்சிசன் அயடீன் சீரொளி (Chemical Oxygen Iodine Laser) பல ஆயிரக்கணக்கு அலகுள்ள வலுவை உருவாக்கக் கூடியது. அவ்வலுவைப் பயன்படுத்தி எதிரி நாடுகளின் அனைத்து வகை ஏவுகணைகளையும் தாக்கி அழிக்க முடியும் என்று இதனை வடிவமைத்துள்ள அமெரிக்க இராணுவ பொறியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த அதி நவீன இரசாயன லேசர் வானூர்தியைக் கொண்டு எதிரி நாட்டு திரவ எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 600 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும்.. திண்ம எரிபொருள் கொண்டியங்கும் ஏவுகணைகளை அவற்றின் இலக்கில் இருந்து 300 கிலோமீற்றர்களுக்கு அப்பாலும் வைத்து தாக்கி அழிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.


ஈரான் மற்றும் வட கொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக எழக் கூடிய ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தலை சமாளிக்க இது அவசியம் என்று அமெரிக்க பெளதீகத்துறை இராணுவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கையும் பலத்தையும் இந்த தொழில்நுட்பம் இன்னும் அமெரிக்கா பக்கம் உயர்த்தவே வழி செய்யும்..