பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளியில் செல்லும் இவ்வானூர்தியில் இருந்து பூமியின் பூகோளத்தை அவதானிக்க முடிவதோடு, முதல் முறையாக புவி ஈர்ப்பு சக்தியற்ற அண்டவெளியில் நாம் மிதக்கும் அனுபவமும் எமக்குக் கிடைக்கும். ஆசனப் பட்டிகளை விலக்கி, வானூர்தியினுள் மிதக்கவும் முடியும்.
VIRGIN ATLANTIC நிறுவனதின் திட்டப்படி, இந்த விண்வெளி சுற்றுலா என்பது இரண்டு கட்டப் பயணம். ஒன்று White Knight Two எனப்படுகிறது. இது விண்வெளியில் பறக்காது. மற்றது SpaceShipTwo எனப்படும் இன்னொரு குட்டி வானூர்தி. White Knight Two இன் கீழ்ப் பகுதியில் SpaceShipTwo பொருத்தப்பட்டிருக்கும். விண்வெளி சுற்றுலா போகும் பயணிகள், SpaceShipTwo இல் தான் இருப்பார்கள். பயணிகளோடு SpaceShipTwo வையும் சுமந்துகொண்டு, White Knight Two பறக்கத் தொடங்கும். சுமார் 52 ஆயிரம் அடி உயரத்துக்குப் போனதும், White Knight Two நிதானமாக பறந்துகொண்டிருக்க சேர்ந்து வந்த SpaceShipTwo தனித்து இயக்க ஆரம்பித்து, கணப்பொழுதில் White Knight இல் இருந்து விடுபட்டு அசுர வேகத்தில் பறக்கத் தொடங்கும்.
பூமியிலிருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ள பகுதியைத்தான் விண்வெளி (Space) என்கிறார்கள். (சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றுவது சுமார் 150 கி.மீ. உயரத்தில்) அந்த உயரம் வரை சென்று விண்வெளியை சுற்றிக்காட்டிவிட்டு, SpaceShip பூமிக்கு திரும்பிவிடும். மேலே செல்வதற்கு மட்டுமே White Knight இன் உதவி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் சேர்த்து மொத்தம் இரண்டரை மணி நேரப் பயணம். அதில் விண்வெளியைத் தொடும் நேரம் 6 நிமிடங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எடையில்லாத் தன்மையை பயணிகள் அப்போது மட்டும் உணர்வார்கள்.
SpaceShipTwo குட்டி வானூர்தி என்பதால் அதில் 6 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.