பழமொழி.....

Sunday, July 10, 2011

உளவு குருவி...



பதினாறு செண்டிமீட்டர் அளவுள்ள சிறு குருவி இயந்திரம் ஒன்றை அமெரிக்க பாதுகாபபுத் துறையின் பெண்டகனுக்கு உருவாக்கப் பட்டுள்ளது. 


நாலு மில்லியன் டொலர் செலவழித்து உருவாக்கப்பட்ட இந்தக் குருவி போர் முனையில் எதிரிகளின் கண்ணுக்குப்படாமல் அதில் பொருத்தப்பட்டுள்ள சிறு ஒளிப்பதிவுக் கருவி மூலம் எதிரியின் நிலைகளைப் படம் பிடித்துவிடும்.
 
இச்சிறு விமானம் மணிக்கு பதினொரு மைல் வேகத்தில் பறக்க வல்லது. ஏற்கனவே உள்ள சிறு உளவு விமானங்கள் காற்றாடிகளுடன் பறப்பதால் எதிரிகள் அவற்றை அடையாளம் கண்டு விடுகின்றனர்.
இந்தக் குருவி விமானம் சிறகடித்துப் பறக்கும். மேலும் கீழும் பக்கவாட்டிலும் பறக்க வல்லது. இந்தச் சிறு இயந்திரக் குருவி திறந்த சாளரங்களுடாகவும் நுழையக் கூடியது. உண்மையான குருவிகள் போலவே மின்சாரக் கம்பிகளிலும் உட்காரும். சிறு விமானங்கள் உருவாக்கலில் இந்தக் குருவி விமானம் ஓரு புதிய பரிமாணத்தை கொண்டுவந்துள்ளது. இதை தொடர்ந்து வரும் கருவிகள் உளவுத் துறையில் பெரும் பங்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.




  இந்த காணோளியைப் பாருங்கள்.....

Saturday, July 9, 2011

Stealth மாயாவி வானூர்தி



ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா. இந்த விமானம் குறித்த படங்கள் சீன இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது தற்போது சோதனைக் கட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது.

stealth எனப்படும் யார் கண்ணிலும் (ரேடார், சோனார், அகச்சிவப்பு கதிர்) படாமல் செயல்படும் தொழில்நுட்பம், 2வது உலகப் போரின்போதுதான் முதல் முறையாக நடைமுறைக்கு வந்தது. இத்தகைய தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானங்களை எதிரிகளால் கண்டுபிடிக்கவே முடியாது. இதனால் இவற்றுக்கு மாயாவி விமானங்கள் என்றும் செல்லப் பெயர் உண்டு.
இத்தகைய விமானத்தைத்தான் இப்போது சீனா உருவாக்கியுள்ளதாம். இந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள படங்களைப் பார்க்கும்போது அது சோதனை ரீதியான விமானமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள முதல் பக்கச் செய்தியில், ஜே20 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம், சோதனைக் கட்டத்திற்கு முந்தைய கட்டமான ஹை ஸ்பீட் டாக்சி டெஸ்ட் நிலையில் இருப்பதாக தெரிகிறது.



இந்த போர் விமானத் தயாரிப்பு உண்மையாக இருக்குமானால், சீனாவின் அதிவேக வளர்ச்சியை இது நிரூபிப்பதாக அமையு்ம். ஏற்கனவே விண்வெளித்துறையிலும், ரயில்வே துறையிலும் மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது சீனா. இந்த நிலையில் மாயாவி போர்விமானங்களை அது வெற்றிகரமாக தயாரித்து விட்டால் மிகப் பெரிய வல்லரசாக அது உயரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகிலேயே இப்போதைக்கு ஒரே ஒரு மாயாவி போர்விமானம்தான் செயல்பாட்டில் உள்ளது. அது அமெரிக்காவின் எப்-22 போர் விமானமாகும். அந்த விமானத்துக்குப் போட்டியாக சீனாவின் ஜே20 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் அதிகரித்துள்ளது.


ஆனால் இதை மறுக்கிறார் சீன பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர். இதுகுறித்து சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக நிபுணர் லி டகுவாங் கூறுகையில், இந்த செய்திகள் வெறும் யூகச் செய்திகளே. எப்22 விமானத்தைப் பொறுத்தவரை அது ஒரு ஆக்கிரமிப்பு போர் விமானம். உலகத்தை தனது கையில் வைத்துக் கொள்ள நினைக்கும் ஒரு சக்தியின் கையில் இருக்கும் அபாயகரமான ஆயுதம்.
ஆக்கிரமிப்பு மனோபாவத்தில் வளர்ந்தது அமெரிக்காவின் ஆயுத பலம். ஆனால் சீனாவின் ராணுவ வளர்ச்சி என்பது இயற்கையானது, சுய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டது. எனவே எங்களுக்கு மிகப் பெரிய அளவிலான போர் விமானங்கள் தேவை இல்லை என்கிறார் அவர்.
இவர் இப்படிச் சொன்னாலும் கூட ஸ்டெல்த் போர் விமானத் தயாரிப்பில் சீனா படு மும்முரமாக இருப்பது உண்மைதான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பல சீன இணையதளங்களில் ஜே20 போர் விமானம் ரன்வேயில் செல்வது போன்றும், அதன் முன்பக்கத்தில் பாராசூட்கள் விரிவது போன்றும் உள்ள செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சீனாவின் இந்த மாயாவி விமானத்தால் அமெரிக்கா பயப்படுகிறதோ இல்லையோ நிச்சயம் இந்தியா கவனமுடன் இருந்தாக வேண்டும்.


இது விரைவில் ஸ்ரீலங்காவின் அம்பாந்தோட்டை வீரவில வானூர்தி நிலையத்திற்கும் வந்து போகலாம். அங்கிருந்தும் இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம்.


இந்த காணோளியைப் பாருங்கள்.....


வெளியாகியுள்ளன.

Friday, July 8, 2011

லேசர் பீரங்கி..



லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் சோதனையில் அமெரிக்கா கடந்த 1970ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்க, இலக்கை தாக்குவதற்கு மட்டுமே இதுவரை லேசர் தொழில்நுட்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது முதல் முறையாக எதிரிகளின் படகுகளை செயல் இழக்கச் செய்யும், லேசர் பீரங்கியை அமெரிக்கா சோதனை செய்துள்ளது






இந்த சோதனை அமெரிக்காவின் கலபோர்னிய கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது. போர்க்கப்பலில் இருந்து இயக்கப்பட்ட பீரங்கியிலிருந்து சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள் வெளிப்படும். இது எதிரி படகின் இன்ஜினை தீப்பிடிக்க வைத்து செயல் இழக்கச் செய்து விடும் திறன் கொண்டது. அமெரிக்க கடற்படை லேசர் பீரங்கியை சோதனை செய்தது இதுவே முதல் முறை.

நிலப் பகுதியில் வெற்றிகரமாக செயல்பட்ட லேசர் ஆயுதங்கள், கடல் பகுதியில் சோதித்தபோது, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கடல் காற்றில் உள்ள ஈரப்பதம் லேசர் சக்தியை குறைத்தது. அதனால் அதிக சக்தி வாய்ந்த லேசர்களை பயன்படுத்தி தற்போது நவீன பீரங்கி சோதனை செய்யப்பட்டுள்ளது. இச்சோதனை வெற்றியா, தோல்வியா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. 




Thursday, July 7, 2011

புதுவகை லேசர் தொழினுட்பம்..

       அமெரிக்க இராணுவத்தினரின் புதிய லேசர் தொழினுட்பதால் விண்ணில் பறந்தது கொண்டிருக்கும் விமானத்தை தாக்க வரும் ஏவுகணையை விண்ணிலேயே தாக்கியளிகலாம்.

      இதை அந்த விமானத்தில் பணிபுரியும் பொறியியலாளரால் தாக்க வரும் ஏவுகணையின் தரவுகள் கணிக்கப்பட்டு விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லேசர் கருவியினால் அலைகள் பாய்ச்சப்பட்டு அதை தகர்க்கலாம். 
      இது தற்போதைய சர்வதேச நெருக்கடிக்கு தீர்வாக அமையலாம் என்று கூறபடுகிறது.

இந்த காணோளியைப் பாருங்கள்......
 

Wednesday, July 6, 2011

புதிய வானூர்தி Hypersonic



அதிபயங்கர வேகத்தில் பறக்கும் விமானத்தை ஏர்பஸ் குழுமம் உருவாக்கியுள்ளது. ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ராம்ஜெட் இன்ஜின்கள் இதில் பொருத்தப்படுகின்றன.

ஹாலந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் யூரோப்பியன் ஏரோநாட்டிக் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் கம்பெனி (இஏடிஎஸ்). ஏர்பஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பு. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு மாடல்களில் விமானங்களை உருவாக்கி வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்துவரும் சர்வதேச விமான கண்காட்சியில் ஹைலைட்டாக இடம் பிடித்திருப்பது இஏடிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேக்4’ எனப்படும் ஹைப்பர்சானிக் விமானம்.

 ஒலியின் வேகம் மணிக்கு 1,236 கி.மீ. இதைவிட வேகமாக செல்பவை ‘சூப்பர்சானிக்’ விமானங்கள். ரஷ்யாவின் டுபோலவ் நிறுவனம் ‘டியூ 144’ என்ற சூப்பர்சானிக் விமானத்தை 1968ல் அறிமுகப்படுத்தியது. 1978 ம் ஆண்டு வரை இது இயக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ‘கன்கார்டு’ சூப்பர்சானிக் விமானம் 1976ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது. அதிக செலவு, அதிக விபத்து வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இதுவும் 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பயணிகள் போக்குவரத்துக்கு சூப்பர்சானிக் விமானங்கள் தற்போது இயக்கப்படுவது இல்லை.

இந்நிலையில், ஒலியைவிட சுமார் 4 மடங்கு அதிகமாக, மணிக்கு 4,800 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சானிக் விமானத்தை இஏடிஎஸ் வடிவமைத்துள்ளது. சென்னையில் இருந்து சுமார் 1,800 கி.மீ. தூரத்தில் உள்ள டெல்லிக்கு இந்த விமானத்தில் 20 நிமிடத்தில் போய்விடலாம். இந்த விமானத்தில் 3 இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை செல்ல 2 இன்ஜின்களும் அதன் பிறகு ‘ஹைப்பர்சானிக்’ வேகத்தில் பறக்க இன்னொரு ராம்ஜெட் எனப்படும் இன்ஜினும் பயன்படுத்தப்படுகிறது. இது ஏவுகணை, ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் இன்ஜின். வழக்கமான விமான ஓடுதளத்தில் இருந்தே இந்த விமானத்தை இயக்க முடியும். எரிபொருளாக ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலவை பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலை பாதிக்காது. ஹைப்பர்சானிக் விமானத்துக்கான டிசைனிங் முடிந்துவிட்டது. 100 பயணிகள் செல்வதற்கு ஏற்ப விமானம் கட்டப்படும் என்கின்றனர் இஏடிஎஸ் விஞ்ஞானிகள்.

Tuesday, July 5, 2011

மசகு எண்ணெய்.. (Fossil Fuel)



இந்த ஃபாசில் எரிபொருட்கள் (Fossil Fuel) எங்கிருந்து வருகிறது? பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த தாவர மற்றும் விலங்குகள் மாண்டழியும் பொழுது அவைகள் புதையுண்டு பலவேறுபட்ட நிலைகளில் பல வேதி மாற்றங்களினூடே பயணித்து இன்று நமக்குப் பயன்படும், எரிவாயுவாகவும், நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும் கிடைக்கிறது.
ஒரு லிட்டர் பெட்ரோலியம் கிடைக்க ஒரு காலத்தில் பல ஆயிரம் நிலப்பரப்பில் இருந்த வனம் அழிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாம். ஏன் அவ்வளவு, ஒரு அடி நிலக்கரி கிடைக்க பத்து சதுர அடி தாவரப் பொருள் அவசியமாம், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள், எவ்வளவு இயற்கைவளம் அழிந்திருந்தால் நாம் இன்று அழித்துத் தீர்க்கும் இந்த வளங்கள் கிடைத்திருக்கக் கூடுமென்று.

இந்த நிலையில் எண்ணெய்க்கென பூமியைத் துளை போட ஆரம்பித்த 19ஆவது நூற்றாண்டிலிருந்து நாம் 100 பில்லியன் டன் கச்சா எண்ணெயைத் தோண்டி எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
நாம் இது போன்ற பெட்ரோலியப்பொருட்களின் பயன்படுத்தும் வேகத்தினை வைத்துப் பார்க்கும் பொழுது மிக விரைவிலேயே, உலகம் தழுவிய முறையில் எண்ணெய்க்கான தட்டுப்பாடு வெளிக்கிளம்பப் போவதாக பல ஆண்டுகளாகவே அச்சம் இருந்து வருகிறது.
மாண்டழிந்து போன தொன்மையான தாவர/விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியானதாகக் கருதப்படும் பெட்ரோலியமும், இயற்கை வாயுவும் உருவாவதற்கு இது போன்ற இயற்கை கச்சா பொருட்களின் தேவை இல்லை என்று இப்பொழுது ஓர் ஆய்வின் மூலமாக முன்மொழியப் பட்டுள்ளது.

இது போன்ற தர்க்கம் அறிவியல் உலகில் முன்பிலிருந்தே நடந்து வருவதாக தெரியவரும் நிலையில் அண்மைய ஆராய்ச்சி இதனை மேலும் உறுதிப் படுத்துகிறது. அதாவது பூமியின் மேல் ஓட்டிலிருந்து 10 கிலோ மீட்டர்களுக்குக் கீழேயுள்ள பாறைப் படிமங்களின்(bedrock) ஊடாக நிகழும் வெப்பமும், அழுத்தமும் பெட்ரோலியப் பொருட்களின் அடிப்படை மூலமான ஹைட்ரோ கார்பன்களை உருவாக்குவதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் கொண்டிருப்பதாக ஸ்வீடனைத் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு ஆதாரமாக அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் 10.5 கிலோமீட்டர்களுக்கு கீழ் ஊடுருவிச் சென்றிருக்கும் இந்தப் பெட்ரோலிய கச்சா எண்ணெய்வளம் கண்டிப்பாக ஈர்ப்புச் சக்தியாலோ அல்லது வேறு சில ஆற்றல்களாலோ நிகழ்ந்திருக்க முடியாது எனவும், பாறைகளுக்கிடையே நிலவிய வெப்ப மற்றும் அழுத்தம் காரணமாகவே உருவாகியிருக்கக் கூடும் என்றும் கருதுகிறார்கள்.
அப்படியாக இருக்கும் பட்சத்தில் உலகத்தின் எல்லா இடங்களிலும் இது போன்ற எண்ணெய் வளம் இருக்க அனேக வாய்ப்பும் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. 61 விழுக்காடுகள் இன்றைய அளவில் நம்மின் எரிபொருள் தேவை இது போன்ற இயற்கை ஃபாசில் எண்ணைகளைக் கொண்டே இயங்கி வருவதால் இந்தக் கண்டுபிடிப்பு உண்மையாகி நடைமுறைப்படுத்தப்பட்டு, சாத்தியப்படும் நிலையில் நம் எதிர்கால எரிபொருள் தேவைக்கு உகந்ததாக அமையும்.
நாம் இது போன்ற பெட்ரோலியப்பொருட்களின் பயன்படுத்தும் வேகத்தினை வைத்துப் பார்க்கும் பொழுது மிக விரைவிலேயே, உலகம் தழுவிய முறையில் எண்ணெய்க்கான தட்டுப்பாடு வெளிக்கிளம்பப் போவதாக பல ஆண்டுகளாகவே அச்சம் இருந்து வருகிறது
இருப்பினும் என்னுடைய தர்க்க எண்ணம் இது போன்ற ஃபாசில் எரிபொருட்கள் அதிக அளவில் தோண்டி எடுக்கப்படும் இடங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது, அவைகள் பாலைவனம், கடல், பனிப் பிரதேசம் போன்ற இடங்களிலேயே அதிகமாக நடைபெறுவதாகப் படுகிறது (உ. தா: பாலை வன மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா, அமெரிக்காவில் டெக்சாஸ், அரிசோனா, அலாஸ்கா, ரஷ்யாவில் வடதுருவப் பனிப் பிரதேசங்கள்...).
இது போன்ற பூமிப் பகுதிகள் ஒரு காலத்தில் நல்ல மரங்களடர்ந்த, ஜீவராசிகள் கொழித்து வளர்ந்த இடங்களாக அமைந்து பிறிதொரு காலகட்டத்தில் அழிந்து போயிருக்கலாம் என்றே எண்ணச் செய்கிறது. அவைகளே இன்று நமக்கு பெட்ரோலிய கச்சா பொருட்களைத் தந்து கொண்டிருப்பதற்கான அடிப்படையாகவும் கருதச் செய்கிறது. எப்படி இருப்பினும் இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலமாக அது போன்ற தாவர/விலங்குகளின் தேவையில்லாமல் இயற்கையில் எரி பொருள் கிடைப்பதற்கான வாய்ப்பிருந்தால் இன்னும் கொண்டாட்டம்தான்.
எது எப்படியாகினும் இது போன்ற எரி பொருட்களால் இயற்கை விரைந்து மாசுபடுவதனையும் ஒதுக்கிப் புறந்தள்ளுவதற்கில்லை.

Sunday, July 3, 2011

புவிசார் நிலைகாண் தொகுதி Global Positioning System



உயிர்வாழும் கிரகம் (Living Planet) என்றறியப்படும் பூமியில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியென்பது அவற்றின் இடப்பெயர்ச்சி முலமாகவே சாத்தியமாயிற்று. மனிதகுலத்தின் நாகரீகம் மனிதர்களின் இடப்பெயர்ச்சி மூலமாகத்தான் வளர்ச்சிபெற்றது. தொடக்க காலத்தில் கால்போன போக்கில் இடம்விட்டு இடம் நகர்ந்த மனிதன் அவனது தேவைகளும் அறிவும் வளர்ந்தபோது தன்னுடைய இடப்பெயர்ச்சியை இலகுவாக்குவதற்கான வழிவகைகளைத் தேடத் தொடங்கினான்.
காடுகளிலுள்ள பெருமரங்கள், நீர்நிலைகள், சிற்றோடைகள், பெருநதிகள், மலைகள், பறவை மற்றும் விலங்குகளின் அசைவியக்கங்கள், நட்சத்திரங்கள் எனத் தன்னுடைய நகர்வுகளுக்கும் பயணங்களுக்கும் இயற்கையை நம்பியிருந்த, இயற்கையைப் பயன்படுத்திக்கொண்ட மனிதன் தன்னுடைய அறிவின் திறன்கொண்டு தனக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கிய கருவிதான் இந்த புவிசார் நிலைகாண் தொகுதி (Global Positioning System). பல்வேறு தேவைகளுக்காகப் பல்வேறுபட்ட கருவிகளை உருவாக்கிய மனிதனின் அறிவுக்குழந்தையான இந்த புவிசார் நிலைகாண் தொகுதி மனிதனை அவனது சரியான பயணப்பாதையில் அழைத்துச்செல்கின்றது.
gpsதற்காலப் பயன்பாட்டிலுள்ள நவீன போக்குவரத்து ஊர்திகளில் வழிகாட்டும் தொகுதி (Navigation System) என்பது ஓர் இன்றியமையாத கருவியாகிவிட்டது. நாம் போகவேண்டிய இடத்தின் முகவரியை வழிகாட்டும் கருவியினுள் உள்ளீடு செய்ததும், நாம் பயணிக்கவேண்டிய பாதையினைத் திரையில் தோன்றும் வரைபடத்திற் குறித்துக் காட்டுவதுடன் நமது பயணத்தின்போது வீதியில் எமது நகர்வினையும் தொடர்ந்து குறித்துக்காட்டும் வேலையினையும் இக்கருவி செய்கின்றது. இச்செயற்பாடுகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதையும் அவற்றின் பின்னணி மற்றும் வரலாறு என்பவற்றையும் இங்கு மேலோட்டமாகப் பார்ப்போம்.
GPS என்று சுருக்கமாக அழைக்கப்படும் இப் புவிசார் நிலைகாண் தொகுதியானது, வானவெளியில் வலம்வந்துகொண்டிருக்கும் அமெரிக்க நாட்டுக்குச் சொந்தமான ஒரு தொகுதி செய்மதிகளின் துணையுடன் இயங்குகின்றது. இத்தொகுதியானது புவியிலோ அல்லது புவியை அண்மித்த வான்பரப்பிலோ அமைவிடம் மற்றும் நேரம் போன்ற தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படுவதுடன் வழிகாட்டும் செயற்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இக்கருவியானது புவியின் காலநிலை மாற்றங்கள் மற்றும் இரவு பகல் போன்றவற்றால் பாதிக்கப்படாது செயற்படவல்லது.
புவிசார் நிலைகாண் தொகுதியின் செயற்பாடானது பிரதானமாக பின்வரும் மூன்று கட்டமைப்புக்களைக் கொணடிருக்கின்றது.
1. 24 தொடக்கம் 32 வரையிலான வழிகாட்டும் செய்மதிகள் (Navigation Satellites)
2. புவியின் நான்கு அமைவிடங்களில் அமைந்திருக்கும் செய்மதிக் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் (Control and monitoring stations)
3. பாவனையாளருக்கு வழிகாட்டும் GPS அலைவாங்கிக் கருவி (GPS receiver)
ConstellationGPSவழிகாட்டும் செய்மதிகளால் வானவெளியிலிருந்து அலைபரப்பப்படும் மின்காந்தச் சமிக்கைகள் GPS அலைவாங்கியினால் உள்வாங்கப்பட்டு புவிநிலைப் புள்ளியான அகலாங்கு (latitude), நெட்டாங்கு (longitude) மற்றும் கடல்மட்ட உயரம் (altitude) என்பவற்றுடன் நேரமும் (time) கணிப்பிடப்படுகின்றன. 1995 April மாதத்தில் முழுமையான செயற்பாட்டு நிலையை எட்டியபின்னர், இத்அதாகுதியின் பயன்பாடானது உலகில் பரந்துபட்டளவில் விரிவடைந்தது. உலகளாவிய வழிகாட்டும் செயற்பாடடின் பிரதான பாத்திரத்தை இத்தொகுதி பெற்றுக்கொண்டது. அத்துடன் மட்டுமல்லாது வரைபட உருவாக்கம், நில அளவை, வர்த்தகம், விஞ்ஞானச் செயற்பாடுகள், அத்தோடு வாகனம் மற்றும் நபர்களைப் பின்தொடர்தல் போன்ற செயற்பாடுகளிலும் இத்தொகுதி பயன்படுத்தப்படுகின்றது. இத்தொகுதியின் அணுக்கடிகாரத்தின் மூலமான துல்லியமான நேரக்கணிப்பீடானது நிலநடுக்கம் தொடர்பான விஞ்ஞான ஆய்வு மற்றும் கைத்தெலைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
தரை, கடல் மற்றும் வான் வழிகாட்டற் செயற்பாட்டில் GPS ஆனது பிரதான கருவியாக இடம்பிடித்துள்ளது. இடர்கால மீட்புப்பணி மற்றும் அவசரகாலப் பணி என்பவற்றில இதன் பங்களிப்பானது அளப்பரியது. GPS கருவியின் துல்லியமான நேரக் கணிப்பீடானது எமது நாளாந்தச் செயற்பாடுகளான வங்கி, கைத்தொலைபேசிச் சேவை மற்றும் மின்னிணைப்பு என்பவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்கக் கடற்படையால் பயன்படுத்தப்பட்ட உலகின் முதலாவது வழிகாட்டற் செய்மதித் தொகுதியானது 1960 ஆம் ஆண்டில் பரீட்சிக்கப்பட்டது. அண்ணளவாக மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அளவில் புவிநிலைப் புள்ளிகளுக்கான (fix) தரவுகளைத் தரவல்ல இந்த வழிகாட்டல் தொகுதி ஐந்து செய்மதிகளைக் கொண்டது. 1967 இல் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட Timation எனப் பெயரிடப்பட்ட செய்மதியே முதன்முதலில் விண்வெளியில் - இன்றைய புவிசார் நிலைகாண் தொகுதியில் பயன்படுத்தப்படும் தொழிநுட்பத்திலமைந்த - துல்லியமிக்க நேரக்கணிப்புக் கருவியைக் கொண்டிருந்தது.
1940 களின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு இரண்டாம் உலகப்போர் காலத்திற் பயன்படுத்தப்பட்ட LORAN மற்றும் Decca Navigator ஆகியவற்றை இவ் வழிகாட்டற் தொகுதியின் முன்னோடியாகக் கொள்ளமுடியும். இவற்றில், புவியில் நிலையாக அமைக்கப்பட்ட நிலையங்களிலிருந்து அலைபரப்பப்பட்ட சமிக்கைகள் பிறிதொரு கருவியினால் உள்வாங்கப்பட்டு அக்கருவியின் அமைவிடம் கணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1957 இல் சோவியத் ஒன்றியத்தினால் விண்ணில் செலுத்தப்பட்ட உலகின் முதற் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் (Sputnik), அதன் மின்காந்த அலைகளைக் கண்காணிக்கும் பணியிலீடுபட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்றிற்கு செய்மதியினைப் பயன்படுத்திப் புவிசார் நிலைகாண் தொகுதியினை வடிவமைக்கும் எண்ணக்கருவை ஏற்படுத்தியது.
இப்போது GPS அலைவாங்கிக் கருவி ஒன்று எவ்வாறு புவிநிலைப் புள்ளியினைக் கணிப்பிடுகின்றது என்பதனைப் பார்ப்போம்.
ஒரு GPS அலைவாங்கியானது விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் வழிகாட்டல் தொகுதிச் செய்மதிகளிலிருந்து (Navigation Satellite) கிடைக்கும் சமிக்கைகளை உள்வாங்கி அச்சமிக்கைகளின் நேரத்தினைக் கணிப்பிடுவதன் மூலம் அமைவிடத்தைக் கண்டறிகின்றது. ஒவ்வொரு வழிகாட்டல் தொகுதிச் செய்மதியிலிருந்தும் அனுப்பப்படும் சமிக்கைகள் பின்வரும் மூன்று தகவல்களை உள்ளடக்கியதாகக் காணப்படும்.
1. செய்மதியிலிருந்து தகவல் அனுப்பப்பட்ட நேரம்
2. செய்மதிச் சுற்றுவடட்டப் பாதையில் செய்மதியின் அமைவிடம்
3. தொகுதியின் செயற்றிறன் மற்றும் தொகுதியிலுள்ள ஏனைய செய்மதிச் சுற்றுவட்டப்பாதையின் அண்ணளவான தகவல்கள்

180px-GPS_Satellite_NASA_art-iifஉள்வாங்கப்படும் சமிக்கையிலுள்ள நேரத் தகவல்களைக் கொண்டு GPS அலைவாங்கியானது குறித்த சமிக்கையை அனுப்பிய செய்மதியின் அமைவிடத்தைக் கணிப்பிடும். இவ்வாறு பல செய்மிதிகளிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளின் மூலம் அச்செய்மதிகளின் அமைவிடத்தைக் கணிப்பிட்டு கிடைக்கும் தரவுகளைக் கேத்திரகணிதக் கணிப்பீட்டுக்கு உட்படுத்துவதன் மூலம் அலைவாங்கியானது அதனது அமைவிடத்தைக் கண்டறிகின்றது. இவ்வாறு கணிப்பிடப்படும் அமைவிடம் எண்களாகவோ அல்லது வரைபடம் ஒன்றின்மீதோ பாவனையாளருக்குக் குறித்துக்காட்டப்படுகின்றது. மேலே சுட்டிக்காட்டப்பட்டது போன்று பொதுவாக புவிநிலைப் புள்ளிகள் புவியின் மேற்பரப்பு அமைவிடத் தகவல்களான அகலாங்கு, நெட்டாங்கு மற்றும் கடல்மட்ட உயரம் என்பவற்றைக் கொண்டிருக்கும். வாகனங்களில் பயணிக்கும்போது GPS அலைவாங்கிகள் பயணிக்கும் வேகத்தினையும் கணிப்பிடவல்லதாக இருக்கும்.
வாகனத்தில் பயணிக்கும்போது புவிநிலைப் புள்ளிகள் தொடர்ச்சியாக மாற்றமடைந்த வண்ணமிருக்கும். இவ்வாறு புள்ளிகள் மாற்றமடையும்போது இருவேறு புள்ளிகளைக் கணிப்பிடுவதற்கான நேர இடைவெளியை அடிப்படையாகக் கொண்டே அலைவாங்கித் தொகுதியின் வேகம் கணிப்பிடப்படுகின்றது.
GPS இன் முழுமையான கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்புப் பணிகள் அமெரிக்காவினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. யுத்த காலங்களில் தமது இராணுவச் செயற்பாட்டிற்கு எவ்வித பாதிப்புமின்றிக் குறித்த பிரதேசங்களிற்கோ அல்லது முழுமையாகவோ GPS செயற்பாட்டை முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அமெரிக்காவினால் முடியும்.
GPS அலைவாங்கிக் கருவி ஒன்று புவிநிலைப் புள்ளியினைக் கணிப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று செய்மதிகளின் சமிக்கைகளை உள்வாங்க வேண்டும். இருப்பினும், மின்காந்த அலைகளின் வேகம் காரணமாக, நேரத் தரவினில் காணப்படும் சிறியதொரு வழுகூட புவிநிலைப் புள்ளியினைக் கணிப்பதில் பாரிய வழுவினை ஏற்படுத்திவிடும். இதன்காரணமாக GPS அலைவாங்கிகள் நான்கு அல்லது நான்கிற்கு மேற்பட்ட செய்மதிகளிலிருந்து தகவல்களைப் பெற்றே புவிநிலைப் புள்ளிகளைக் கணிப்பிடுகின்றன.
அடிப்படையில் இராணுவப் பயன்பாட்டிற்கென ஊருவாக்கப்பட்ட இந்தப் புவிசார் நிலைகாண் தொகுதியானது இன்று பொதுமக்கள் பயன்பாட்டிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இத்தொகுதியின் செயற்பாடானது பரிச்சயமற்ற பிரதேசங்களினூடான நகர்வுகள், மீட்பு நடவடிக்கைள் மற்றும் அதிரடித் தாக்குதல்களிற்கான தரையிறக்கங்கள் போன்றவற்றினை இலகுவாக்கியுள்ளது. அத்தோடு இக்கருவி கட்டளையதிகாரிகளின் மின்னணு உதவியாளர் (Commanders Digital Assistant) என்றோ போர்வீரர்களின் மின்னணு உதவியாளர் (Soldiers Digital Assistant) என்றோ அழைக்கப்படுகின்றது. இதுமட்டுமன்றி இலக்குக்களைப் பின்தொடர்தல் (Target Tracking), ஏவுகணைகளை வழிநடத்துதல் (Missile Guidance) போன்ற செயற்பாடுகளிலும் இத்தொகுதியின் பங்கு அளப்பரியது.
gps-3
GPS கருவியின் பொதுமக்கள் பயன்பாட்டை எடுத்துக்கொண்டால், வரையறுக்க முடியாதளவுக்கு அதன் பயன்பாடு நாளாந்தம் வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது. கண்டுபிடிப்பாளர்களின் கற்பனா சக்திக்கேற்ப புதிய புதிய வசதிகள் நாளாந்தம் GPS கருவியிற் புகுத்தப்பட்டவண்ணமுள்ளன. கைத்தெலைபேசி, ஓளிப்படக் கருவி (Camera), கைக்கடிகாரம் (Watch) மற்றும் உணரிகள் (Sensors) என GPS இன் பயன்பாடு புதிய வடிவங்களிற் புகுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
GPS கருவியின் உதவியுடனான உல்லாசப் பயணம் என்பது பொதுப்பயன்பாட்டில் இக்கருவியின் பயன்பாட்டிற்கான ஓரு சிறந்த உதாரணம். GPS தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சி, மனிதர்களால் வழங்கப்பட்டுவந்த உல்லாசப் பயணிகளுக்கான வழைகாட்டும் சேவையினை (Tourist Guide Service) இப்போது ஒரு GPS இன் துணையுடன் பெற்றுக்கொள்ள வழிவகுத்துள்ளது. இக்கருவியானது உல்லாசப் பயணிகளுக்கு வழிகாட்டுவதுடன் ஒவ்வொரு பார்க்கப்பட வேண்டிய இடத்தை அடைந்ததும் அவ்விடம் தொடர்பான தகவல்களைப் பயணிகளுக்கு வழங்குகின்றது. மனித அறிவுடன் ஒப்பிடும்போது இவற்றின் பயன்பாடு வரையறுக்கப்பட்டவையாகவே இருக்கின்ற போதிலும், தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சி எதையும் சாத்தியமாக்கும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது என்பது மறுக்கப்படமுடியாதது.
முழுமையான புவிசார் நிலைகாண் மற்றும் வழிகாட்டல் தொகுதி ஒன்று, விண்வெளித் தொகுதி (space Segment), கட்டுப்பாட்டுத் தொகுதி (control segment) மற்றும் பயனர் தொகுதி (user segment) என மூன்று உப தொகுதிகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
விண்ணில் வலம்வந்தநண்ணமிருக்கும் 24 வழிகாட்டற் செய்மதிகளைக்கொண்ட தொகுதியே விண்வெளித் தொகுதி என்றழைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில், ஒவ்வொன்றிலும் எட்டு செய்மதிகள் மூலம் மூன்று சுற்றுவட்டப்பாதையில் சுற்றக்கூடியவாறே இந்த இருபத்திநான்கு செய்மதிகளைக் கொண்ட தொகுதி வடிவமைக்கப்பட்டது. பின்வந்த நாட்களில் ஒவ்வொன்றிலும் நான்கு செய்மதிகள்மூலம் ஆறு சுற்றுவட்டப்பாதையில் சுற்றக்கூடியவாறு இத்தொகுதி மாற்றியமைக்கப்பட்டது. புவியின் எப்பகுதியிலிருக்கும் ஒரு GPS அலைவாங்கியானது எப்போதுமே ஆறு செய்மதிகளின் தொடர்பினைக் கொண்டிருக்கக்கூடியவாறு இந்தச் செய்மதிச் சுற்றுவட்டப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அண்ணளவாகப் புவிமேற்பரப்பிலிருந்து 22200 கிலோமீற்றர் உயரத்தில் 26600 கிலோமீற்றர் ஆரையுடைய சுற்றுவட்டப்பாதையில் புவியை மையமாகக்கொண்டு சுற்றிவரும் இச்செய்மதிகள் ஒவ்வொன்றும் புவிநாளொன்றிற்கு (sidereal day – ஒரு புவிநாள் என்பது அண்ணளவாக 23 மணித்தியாலங்கள், 56 நிமிடங்கள், 4091 விநாடிகள் ஆகும்) இரண்டு தடவைகள் புவியைச் சுற்றுவதுடன் குறித்த ஒரே புவிமேற்பரப்பிற்கே தொடர்ச்சியாகத் தகவல்களை வழங்குகின்றன.
செய்மதிகளைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் புவியிலமைந்துள்ள நிலையங்களே கட்டுப்பாட்டுத் தொகுதி என்றழைக்கப்படுகின்றன. செய்மதிகளின் சுற்றுவட்டப் பாதைகள் தேசிய புவியியல் முகவர் நிலையத்துடன் (National Geographical-Intelligence Agency) இணைந்து அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான கண்காணிப்பு நிலையங்களால் கண்காணிக்கப்படுகின்றன. கண்காணிப்பின்மூலம் பெறப்படும் தகவல்கள் அமெரிக்க விமானப்படையின் விண்வெளிக் கட்டளை மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வழிகாட்டற் செய்மதிகளுக்கான கட்டளைகள், தகவல்கள் வழங்கப்படுவதுடன் வழுத்திருத்தச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
செய்மதிகளில் ஏற்படும் பழுதுகள் கண்காணிப்பு நிலையங்களாற் கண்காணிக்கப்பட்டு நிவர்த்திசெய்யப்படுகின்றன. ஒரு செய்மதியின் பழுதுகள் நிவர்த்திசெய்யப்பட முடியாதபோதோ அல்லது அதன் ஆயுட்காலம் முடிவடையும்போதோ அச்செய்மதி அதன் சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேற்றப்படுவதோடு வேறொரு செய்மதி பிரதியீடான குறித்த சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பப்படுகின்றது. இவை தவிர்ந்த வேறு காரணங்களுக்காகவும் செய்மதிகள் சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேற்றப்படலாம். சுற்றுவட்டப்பாதையிலிருந்து வெளியேற்றப்பட்ட செய்மதி “பயன்பாடற்றதாக” அடையாளப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட செய்மதியிலிருந்து கிடைக்கும் சமிக்கையினை GPS அலைவாங்கிக் கருவி கணிப்பீட்டுச் செயற்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளாது புறக்கணித்துவிடும்.
GPS அலைவாங்கிக் கருவியே பயனர் தொகுதி என்றழைக்கப்படுகின்றது. இக்கருவி செய்மதியிலிந்து கிடைக்கும் சமிக்கையை உள்வாங்கி பயனருக்கான தகவல்களை வழங்கும் செயற்பாட்டைச் செய்கின்றது. அக்கருவிகளின் பயனருக்கான தகவல் வெளியீடானது கருவியின் வடிவமைப்பிற்கேற்ப மாறுபட்டுக் காணப்படலாம். அதாவது சில கருவிகள் புவிநிலைப் புள்ளியினை இலக்கங்களாகவும் வேறு சில கருவிகள் புள்ளியினை வரைபடத்திற் குறித்தோ பயனருக்கு வெளியிடலாம். எவ்வாறாயினும் இக்கருவிகளின் உள்ளகக் கணிப்பீட்டுக் செயற்பாடுகள் ஒன்றாகவே காணப்படும்.
இந்தப் புவிசார் நிலைகாண் தொகுதியின் முழுமையான கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்புப் பணிகள் ஐக்கிய அமெரிக்காவினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இத்தொகுதியின் செய்மதிகள் அடிப்படையில் இராணுவ மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கென இருவேறு விதமான சமிக்கைகளை வழங்கவல்லன. யுத்த காலங்களில் தமது இராணுவச் செயற்பாட்டிற்கு எவ்வித பாதிப்புமின்றிக் குறித்த பிரதேசங்களிற்கோ அல்லது முழுமையாகவோ வழிகாட்டற் தொகுதிகளின் செயற்பாட்டை முடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அமெரிக்காவினால் முடியும். இதுபோன்ற காரணங்களிற்காக பல்வேறு நாடுகள் தமது நாட்டுக்கெனவும் உலகளாவிய ரீதியிலும் பல்வேறு வழிகாட்டற் தொகுதிகளைப் பரிந்துரைத்து அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட தொகுதிகள் வருமாறு.
• Galileo – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில நாடுகளின் கூட்டமைபில் உருவாக்கப்படும் இத்தொகுதியினை 2013 ஆம் ஆண்டளவில் முழுமையான பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது
• Beidou – சீன மக்கள் குடியரசினால் உருவாக்கப்பட்ட உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான தொகுதி
• COMPASS – சீன மக்கள் குடியரசினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள உலகளாவிய பயன்பாட்டிற்கான வழிகாட்டும் தொகுதி
• GLONASS - இரஸ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள உலகளாவிய வழிகாட்டும் தொகுதி
• IRNSS - இந்தியாவால் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான வழிகாட்டும் தொகுதி. இத்தொகுதியினை ஆசிய மற்றும் இந்துசமுத்திரப் பிராந்தியங்களிலும் பயன்படுத்தமுடியும்
• QZSS – ஜப்பான் நாட்டினாற் பரிந்துரைக்கப்பட்டுள்ள உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான வழிகாட்டல் தொகுதி