பழமொழி.....

Friday, February 18, 2011

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்


அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

முன்னுரை: 1783 ஆம் ஆண்டு அக்டோபர் 15 இல் பிரெஞ்ச் மகாதீரர் பிராங்காய்ஸ் பிலேடர் தி ரோஸியர் [Froncois Pilatre De Rozier] என்பவர் வெப்பக் காற்றுப் பலூனில் [Hot Air Balloon] 84 அடி (26 மீடர்) உயரத்தில் முதன்முதலாக வானில் பறந்து காட்டினார்! அதை முதலில் ஆக்கிய பிரெஞ்ச் பொறி நுணுக்கப் படைப்பாளிகள் இருவர்: ஜோஸஃப் & ஜேக்ஸ் எட்டின் மாண்கல்ஃபியர் [Joseph & Jacques Etinne Montgolfier]. ஆனால் அதற்கும் முந்திய 1709 ஆண்டு வெப்பக் காற்றுப் பலூன் போர்ச்சுகல் நாட்டில் [Casa da India, Terreiro do Poco] சோதனை மாளிகைக்கு உள்ளேதான் பறந்தது! அதைப் படைத்த நிபுணர் பார்டோலொமியூ தி குஸ்மா [Bartolomeu de Gusmao] ‘பறக்கும் பலூனின் தந்தை ‘ என்று போற்றப் படுகிறார்.

1848 இல் பிரிட்டீஷ் நிபுணர் ஜான் ஸ்டிரிங்ஃபெல்லோ [John Stringfellow (1799-1883)] என்பவர்தான் முதன்முதல் நீராவி எஞ்சினைப் பயன்படுத்தி யந்திர சக்தியின் மூலம் வானத்தில் பறக்கலாம் என்று நிரூபித்துக் காட்டினார். ஆனால் அவரால் அப்போது பறந்து காட்ட முடிய வில்லை! முதன்முதல் யந்திர சக்தியில் வான ஊர்தி அமைத்துப் பறந்து காட்டியவர் அமெரிக்காவின் சைக்கிள் நிபுணர்களான ரைட் சகோதரர்களே! 1903 டிசம்பர் 17 ஆம் தேதி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina] ஆர்வில் ரைட் (1871-1948) 12 H.P. (Horse Power) ஆற்றல் கொண்ட பெட்ரோல் எஞ்சின் இயக்கும், முதல் மனிதர் அமர்ந்து ஓட்டும் வான ஊர்தியை விண்ணில் பறக்கவிட்டு விமானப் பறப்பியில் யுகத்தை ஆரம்பித்து வைத்தார். வரலாற்றுப் புகழ் பெற்ற அந்த வான ஊர்தி மணிக்கு 7 மைல் வேகத்தில், பூமிக்கு மேல் 12 அடி உயரத்தில், 120 அடி தூரம் பயணம் செய்தது!

1908 ஆண்டில் பிரெஞ்ச் எஞ்சினியர் லூயிஸ் பிளேரியட் [Louis Bleriot (1872-1936)] ஒற்றை விமானி ஊர்தியைச் [Monoplane] செம்மையாக்கித் தற்கால விமான மாதிரிக்கு வடிவம் அமைத்துத் தந்தார். 1909 ஜூலை 25 ஆம் தேதி முதன் முதலில் இங்கிலீஷ் கால்வாயைத் தன் ஒற்றை ஓட்டுநர் விமானத்தில் கடந்து தீரச் செயல் புரிந்தார்! அந்த மாடலில் அமைக்கப் பட்ட விமானங்களே பின்னால் முதல் உலகப் போரில் (1914-1917) குண்டு வீசப் பயன்படுத்தப் பட்டன! ஜெட் எஞ்சினை 1939 இல் முதலில் இணைத்த விமானத்தைப் படைத்தவர், ஜெர்மன் நிபுணர் ஹான்ஸ் ஃபான் ஓஹைன் [Hans Von Ohain].

ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தன் குழுவினருடன் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாகப் பயிற்சிகள் செய்ய முற்பட்டார். ரைட் சகோதர்கள் தமது பறப்பியல் ஊர்திச் சோதனைகளைக் காற்று
வீசும் மணற் பாங்கான கிட்டி ஹாக்கில் செய்தனர். பெல் குழுவினர் தமது பறப்பியல் பயிற்சிகளை கனடாவின் நோவாஸ் கோஷியாவில் பெடாக் (Baddeck, Nova Scotia, Canada) அருகில் உள்ள ஏரிக் கரையில் செய்தனர். இக்கட்டுரை பறப்பியல் பொறி நுணுக்கத்தை விருத்தி செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் குழுவினரின் யந்திரத் துறைச் சாதனைகளையும், சோதனைகளையும் எடுத்துக் காட்டுகிறது.

வான ஊர்தியைப் படைக்கும் முன்னோடி முயற்சிகள்
ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டார். ‘வாயு மண்டல வான் பறப்பு ‘ [Aerial Aviation] என்று தன் கையேட்டில் குறிப்பிட்டு ஒரு சீரற்ற பறக்கும் யந்திர டிசைனை [Crude Design of a Flying Machine] கைப் படத்துடன் காட்டி யிருக்கிறார். பறக்கும் பட்டங்களைக் காற்றை விடக் கனமில்லா யந்திரங்கள் என்று பெல் அழைப்பார்! முதலில் மனிதரற்ற பலவிதப் பட்டங்களைக் காற்றில் பறக்க விட்டு பறப்பியல் நுணுக்கத்தையும் அதன் கட்டுப்பாடுகளையும் நன்கு கற்றுக் கொண்டார்.
1892 இல் நிபுணர் ஹார்கிரேவ் என்பவர் தயாரித்த பெட்டி வடிவப் பட்டத்தையே [Hargrave 's Box Kite] தன் முதல் மாடலாக எடுத்துக் கொண்டார். பெல் குழுவினர் சட்டத்தால் கட்டிய பட்டங்கள் பெரிதான நூதன வடிவம் கொண்டவை. 1898 இல் பெல் தயாரித்த 15 அடி நீளம், 11 அடி அகலம், 5 அடி உயரம் கொண்ட ஜம்போ பட்டம் ஏனோ முதலில் பறக்க வில்லை! 1902 இல் பெல் அமைத்தது 64 கூடுகள் இணைந்த நான்முகப் பட்டம் [64 Cell Tetrahedral Kite]. டெட்ராஹீடிரன் என்றால் நான்கு முகச்சம முக்கோணம் அமைந்துள்ள ஒரு முக்கோணப் பிரமிட் [Triangular Pyramid]. நான்கு முகம் உள்ள முக்கோணப் பிரமிட் பட்டம் பன்முகம் கொண்டுள்ளதால் பட்டத்தைக் காற்று தூக்கிவிட எளிதாகிறது என்று பெல் சோதனையில் அறிந்து கொண்டார்.

பெல்லின் பறப்பியல் துறைப் பயிற்சிகள்
பெல் பல விதமான முக்கோணப் பிரமிட் பட்டங்களைச் செய்து பறப்பியல் அடிப்படைப் பண்புகளைக் கற்றுக் கொண்டார். அவருக்குப் பிடித்த ஒரு பிரமிட் பட்டத்துக்கு ‘ஓயோநாஸ் ‘ [Oionos] என்று அழைக்கப்படும் உயரத்தில் பறக்கும் கிரேக்கப் பறவையின் பெயரை இட்டார். ஊர்தியின் நிலைப்பாடுக்கும், எழுச்சி ஆற்றலுக்கும் [Stability & Lifting Power] உறுதிப்பாடைக் கொடுத்ததால், பெல் குழுவினர் ஒயோநாஸ் பட்டத்தின் சாய்ந்த பக்கத்துடன், மட்டநிலைத் தட்டுகளை (Oblique & Horizontal Surfaces) 1903 இல் இணைத்தனர். மிகச் சிறப்பாகப் பறந்த பெல்லின் ஒரு வட்ட வளையப் பட்டம், பக்கவாட்டில் சரிந்து கீழே விழுந்து நொறுங்கிப் போனது! அவரது பறப்பியல் பயிற்சிகள் திருத்தமாகி, விருத்தியாகி வெற்றிகரமாக இயங்கியதால், அடுத்து எடுத்துக் கொள்ளப்பட்ட பெல் குழுவினரின் பட்டங்கள் மாபெரும் பூத வடிவங்களில் அமைக்கப் பட்டன.

பெல் பறப்பியல் கூட்டாளிகளின் ‘வான் பறப்பியல் பயிற்சிக் குழுவகம் ‘ [Aerial Experiment Association] 1907 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது. அவற்றின் முக்கிய கூட்டாளிகள்: டக்லஸ் மெக்கார்டி, கேசி பால்டுவின், பெல், கிலென் கர்டிஸ், தாமஸ் செல்ஃபிரிட்ஜ் [Douglas McCurdy, Casey Baldwin, Alexander G. Bell, Glenn H. Curtiss, Thomas E. Selfridge] ஆகியோர். டக்லஸ் மெக்கார்டி தான் 1909 இல் முதன் முதலில் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் குழுவினர் தயாரித்த, ‘சில்வர் டார்ட் ‘ (Silver Dart) அல்லது ‘பறக்கும் வெள்ளி அம்பு ‘ எனப்படும் வான ஊர்தியை மணிக்கு 40 மைல் வேகத்தில், அரை மைல் தூரம் விண்ணில் பறந்து காட்டியவர். அமெரிக்காவில் ரைட் சகோதரர்கள் 1903 டிசம்பர் 17 ஆம் தேதி கிட்டி ஹாக் மணற் திடல் மேலாக 12 அடி உயரத்தில், 12 வினாடிகள், 120 தூரம், மணிக்கு 7 மைல் வேகத்தில் பறந்து காட்டினார்.

ஐரோப்பாவில் முதன்முதல் பிரேஸில் விமான நிபுணர், அல்பர்டோ சாண்டாஸ் துமான்ட் [Alberto Santos Dumont] 1906 நவம்பரில் 725 அடி உயரத்தில் 21 வினாடிகள் பறந்து காட்டினார். துமான்ட் ஏற்கனவே 1897 இல் வெற்றிகரமாக வாயுப் பலூனில் பறந்து காட்டியவர். 1901 இல் ஹைடிரஜன் நிரம்பிய வாயுக் கப்பலில் [Hydrogen-filled Airship] பறந்து, முதன்முதல் பாரிஸில் ஐஃபெல் கோபுரத்தைச் சுற்றி வந்தவர். 1902 இல் வாயுக் கப்பலில் பயணம் செய்து மத்தியதரைக் கடலைக் கடக்க முயற்சி செய்யும் போது, வாயுக் கப்பல் கடலில் திடார் வீழ்ச்சி அடைந்தது!
கனடாவில் பெல் குழுவினர் தயாரித்த முதல் வான ஊர்தி
‘சில்வர் டார்ட் ‘ அலெக்ஸாண்டர் குழுவினரால் [Aerial Experiment Association] முதலில் தயாரிக்கப்பட்ட வான ஊர்தி. கனடாவின் முதல் விமானப் பறப்பை 1909 பிப்ரவரி 8 ஆம் தேதி நோவாஸ் கோஷியாவின் பெடாக் பனித்தளத்தில் ஓடி விண்ணில் பறந்து காட்டியவர் ஜான் மெக்கார்டி. மெக்கார்டி சில்வர் டார்ட் ஊர்தியை டிசைன் செய்து தயாரித்தவரில் ஒருவர். குழுவைச் சேர்ந்த ஜான் மெக்கார்டியும், ஃபிரடெரிக் பால்டுவினும் கனடாவின் டொரான்டோ பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற எஞ்சினியர்கள். கோடை விடுமுறையைக் கழிக்க நோவாஸ் கோஷியாவுக்கு வந்த இருவரும், பெல் குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு பெரும் வாய்ப்புக் கிடைத்தது. மெக்கார்டியின் தந்தை பெல்லின் தனிச் செயலாளராகப் பணி ஆற்றினார். அவர்கள் மூவரும் பெல்லின் பெடாக் மாளிகையில் ஒருநாள் பறப்பியல் துறைப் பிரச்சனைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, பெல்லின் திறமை மிக்க மனைவி, மேபெல் ஓர் சிறந்த ஆலோசனையைக் கூறினார்: பெல், மெக்கார்டி, பால்டுவின் ஆகிய மூவரும் இணைந்து, ஒரு பறப்பியல் குழுவகத்தை அமைத்துத் தமது படைப்புக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் செல்வச் செழிப்புள்ள மேபெல், விமானப் படைப்புத் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதாக வாக்களித்தாள். துடிப்புள்ள எஞ்சி னியர்களின் கூட்டு உழைப்பும், மேபெல்லின் நிதிக் கொடையும் ஒருங்கே கிடைத்தது, விமானப் பறப்பியலை விருத்தி செய்ய பெல்லின் பொற்கால வாய்ப்பு நிகழ்ச்சியாகக் கருதப் படுகிறது!

அடுத்து இரண்டு நிபுணரின் கூட்டு உதவியும் பெல்லுக்கு கிடைத்தது. அமெரிக்காவின் மோட்டர் சைக்கிள் டிசைனரும், உற்பத்தியாளரும், பெட்ரோல் எஞ்சின் இயக்க நிபுணருமான கெலென் கர்டிஸ் [Glenn H. Curtiss] அழைக்கப் பட்டு, பறப்பியல் குழுவகத்தில் சேர்க்கப் பட்டார். அமெரிக்க அரசாங்கம் பெல் கனடாவில் செய்து வரும் பரபரப்பான பறப்பியல் ஆராய்ச்சிகளைப் பற்றிக் கேள்விப் பட்டு, தனது பிரதிநிதியாக லெஃப்டினன்ட் தாமஸ் செல்ஃபிரிட்ஜை [Lt Thomas Selfridge] குழுவகத்துடன் சேர்த்திட வேண்டிக் கொண்டது.
1908 இல் பெல் குழுவினர் தயாரித்த சில்வர் டார்ட் நான்காவது வான ஊர்தி! அதன் முன்னோடியான ‘ஜூன் வண்டு விமானம் ‘ [June Bug Plane] ஏற்கனவே வட அமெரிக்காவில் 1 கிலோ மீடர் பயணம் செய்த ஒரு பறப்பு முத்திரையை நிலைநாட்டி, சையன்டிஃபிக் அமெரிக்கன் பரிசைப் [Scientific American Trophy] பெற்றிருந்தது! அதனைப் பின் தொடர்ந்த சிலவர் டார்ட் விமானத்தை 1909 இல் ஜான் மெக்கார்டி ஓர் வட்ட வீதியில் சுற்றி 20 மைலுக்கும் மேலாகப் பறந்து காட்டிப் புதியதோர் பறப்புப் பதிவை நிலைநாட்டினார். 1909 ஆகஸ்டு 2 ஆம் தேதி கனடாவில் முதன்முதல் விமானப் பயணிகளை சில்வர் டார்ட் விமானத்தில் ஏற்றிச் சென்றதாக அறியப்படுகின்றது.

சில்வர் டார்ட் ஊர்தியின் நீளம்: 39 அடி, உயரம்: சுமார் 10 அடி, இறக்கையின் நீட்சி: 49 அடி. மொத்த எடை: 860 பவுண்டு (390 கி.கிராம்). உச்ச வேகம்: மணிக்கு 43 மைல். பறக்கும் தூரம்: 2100 அடி (640 மீடர்). ஆற்றல் தரும் எஞ்சின்: 65 H.P. (Continental A-65). முதல் பறப்புப் பயிற்சி: 1908 ஆம் ஆண்டில். சில்வர் டார்ட் இரும்புக் குழல், மூங்கில் கம்புகளால் அமைக்கப் பட்டது. விமானச் சட்டங்கள் பிறகு ரப்பர் திரவத்தில் மூழ்க்கிய பட்டு பலூன் துணியால் மூடப் பட்டவை. விமானத்துக்கு ஆற்றல் தரும் எஞ்சின் சுழலி [Propeller] திட மரக் கட்டையில் செதுக்கப் பட்டது. அதனுடைய வால்புறம் விமானத்தின் பின்புறம் இல்லாது, முன்புறம் இணைக்கப் பட்டுள்ளது. அந்தக் காலத்து விமானங்களைப் போன்றே, சில்வர் டார்ட்டும் போதிய ஆட்சிக் கட்டுப்பாடு இன்றியே [Poor Control Characteristics] இயங்கி வந்தது!

விமானப் பறப்பியல் துறை முன்னோடிகளில் ஒருவர் பெல்
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் ஓர் உன்னதப் படைப்பாளி, விஞ்ஞானி, பொறிநுணுக்க நிபுணர், பெல் தொலைபேசி நிறுவகத்தை உருவாக்கியவர். தொலைத்தகவல் தொடர்புத் துறைக்குப் பணியாற்றியவர். அமெரிக்காவில் இருக்கும் ஊமை மாந்தர் பலர் பேசக் கற்றுக் கொள்ளும், வடிவப் பேச்சு ஏற்பாடுகளைப் பெல் செய்திருக்கிறார் என்பது பாராட்டுதற்கு உரியது. மேலும் விமானப் போக்குவரத்துத் துறை, நீர் ஊர்தி வாகனங்கள் [Aviation & Hydrofoil Technology] விருத்திகளுக்கும் உழைத்தவர். பார்க்கப் போனால், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் எடிஸனின் திறமைகள் பலவற்றையும், ரைட் சகோதரர்களின் பறப்பியல் நிபுணத்தையும் ஒருங்கே பெற்றவராகக் காணப்படுகிறார்.

யந்திர ஆற்றல் விமானப் படைப்பாளிகளில் ரைட் சகோதரருக்கு இணையாக வருபவர் பெல் குழுவினர் என்பதில் வாக்கு வாதங்கள் இருப்பினும், விமானப் பறப்பு விருத்திக்கு பெல் குழுவினர் சீராக முற்பட்டு செம்மைப்படுத்தி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. எடிஸனும், பெல்லும் வட அமெரிக்காவில் தமது வல்லமையைக் காட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய, புதிய படைப்புகளை உருவாக்கி, மனிதர் நாகரீக வாழ்வைச் செழிக்க வைத்தவர்கள்! விஞ்ஞானப் பறப்பியல் முயற்சிகளையும், மற்ற கண்டுபிடுப்புகளையும் நிழற்படங்கள் எடுத்தும், நாட்குறிப்பில் பதிவு செய்தும் பெல் ஒழுங்காகச் செய்து வந்தது, எதிர்காலச் சந்ததிகளுக்குப் பாடமாகவும், பயிற்சியாகவும் இருந்து வருகிறது.

சில்வர் டார்ட்டின் மாடலை கனடாவின் விமானப்படைத் துறையினர் [Royal Canadian Airforce (RCAF)] (1956-1958) ஆண்டுகளில் மீண்டும் தயாரித்து பெடாக், நோவாஸ் கோஷியாவில் விமானம் முதலில் பறந்த 50 ஆம் ஆண்டு பூர்த்தி விழாவில் பறந்து காட்டினர்! ஆனால் பெடாக்கில் அன்று அடித்த பேய்க் காற்றில், விமானம் திடார் வீழ்ச்சியாகிச் சேதம் அடைந்தது! அது பின்னால் செம்மை யாக்கப்பட்டு, கனடாவின் விமானக் காட்சி மாளிகையில் கண்காட்சி ஊர்தியாக வைக்கப் பட்டுள்ளது. இரண்டாம் யந்திரப் புரட்சி உண்டான இருபதாம் நூற்றாண்டின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவராக அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் திகழ்கிறார் என்று விஞ்ஞான யுகம் பாராட்டுகிறது!

Wednesday, February 16, 2011

பாரிய விமானங்களில் சில வகைகள்..........



பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை வான்வெளியில் மனிதன் நடாத்திக் காட்டியிருக்கும் சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. அதேபோன்று, மனிதன் உருவாக்கியிருக்கும் விமானங்களும் பலரகங்கள். உலகில் பயன்படுத்தப்படும் பாரிய விமானங்களில் சில வகைகளைப் பற்றியே இங்கே பார்க்கவிருக்கின்றோம்.

Antonov An-225

220px-Buran_On_Antonov225உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான இது, 1980 களில் சோவியத் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்டது. 600 தொன் நிறையினைக் காவவல்ல இந்த விமானம் சோவியத்தின் உடைவிற்கு முன்னர், சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தில், விண்ணோடத்தினைக் காவும் பிரதான வானூர்தியாக இவ்விமானமே பயன்படுத்தப்பட்டது. இவ்விமானம் ஒன்றேயொன்று மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது காணப்படும் சரக்கு விமானங்களில் இதுவே மிகப்பெரிய விமானம் ஆகும்.
84 மீற்றர் நீளம், 18.1 மீற்றர் உயரம், இரு இறக்கைகளுடன் சேர்த்து 88.4 மீற்றர் அகலம் கொண்ட இவ்விமானம் ஆறு தாரை இயந்திரங்களைக் கொண்டது. இவ்விமானம், அதன் ஆகக்கூடிய சுமையுடன் 3500 மீற்றர் தூரம் ஓடுபாதையில் ஓடி மேலெழுகின்றது. இவ்விமானத்தின் அதிகூடிய மேலெழும் நிறை 640 000 கிலோகிராம் ஆகும்.

Boeing 314 Clipper

300px-Boeing_314_Clipper-croppedபோயிங் விமான நிறுவனத்தின் தயாரிப்பான, Boeing 314 Clipper விமானமே 1940 களில் காணப்பட்ட தொலைதூரப் பறப்புக்களை மேற்கொள்ளவல்ல கடல்விமானமாகும். 1939 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தவகை விமானங்கள் 1946 இல் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டன. இவ்வகை விமானங்கள் மொத்தம் பன்னிரெண்டே உற்பத்தி செய்யப்பட்டன. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளாலும் இவ்விமானங்கள் இராணுவ மற்றும் பொது தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.
32.36 மீற்றர் நீளம், 6.22 மீற்றர் உயரம் மற்றும் இறக்கைகளுடன் சேர்த்து 46.36 மீற்றர் அகலம் உடைய இவ்விமானம் நான்கு இயந்திரங்களைக் கொண்டது. இவ்விமானம் 68 பயணிகளையோ அல்லது 4500 கிலோகிராம் சுமையையோ காவிச்செல்லவல்லது.

Junkers G.38

300px-Junkers_Grossflugzeug_LA2-Blitz-0128_5ஜேர்மனி நாட்டின் தயாரிப்பான இந்த Junkers G.38 போக்குவரத்து விமானம் 1929 இல் தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது. போக்குவரத்து பயன்பாட்டிற்கென உற்பத்தி செய்யப்பட்ட இவ்விமானங்கள் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்பட்டன. இவ்விருவகை விமானங்களும் இரண்டாம் உலகயுத்தம் தொடங்கும்வரை ஐரோப்பாவினுள் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இவ்வகையைச் சார்ந்த முதலாவது விமானம் 1929 நவம்பர் 6 ஆம் திகதி தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது. இவ்வகை விமானத்தின் மூலமான முதலாவது விமான சேவை, 1931 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
23.21 மீற்றர் நீளம், 7.2 மீற்றர் உயரம் மற்றும் இறக்கைகளுடன் சேர்த்து 44 மீற்றர் அகலம் கொண்ட இவ்விமானம், ஆறு சிலிண்டர்களுடனான நான்கு இயந்திரங்களைக் கொண்டது. இவ்விமானம் 34 பயணிகளையோ அல்லது 5000 கிலோகிராம் சுமையேயோ காவிச்செல்லவல்லது.

Martin JMR Mars

220px-Martin_Marsஇவ்வகை கடல் விமானங்கள் அமெரிக்கக் கடற்படைக்காக 1940 களின் ஆரம்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. 1941 இல் தனது முதலாவது பறப்பை மேற்கொண்ட இவ்வகை விமானங்கள் 1956 இல் சேவையிலிருச்து ஓய்வுபெற்றன. அமெரிக்கக் கடற்படையால் கரையோர ரோந்துப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட இவ்வகை விமானங்கள் ஐந்து வெவ்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்பட்டன. அமெரிக்க விமானப்படையைத் தொடர்ந்து, இவ்வகை விமானங்கள் தீயணைப்புப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.
35.74 மீற்றர் நீளம், 11.71 மீற்றர் உயரம் மற்றும் இறக்கைகளுடன் சேர்த்து 60.96 மீற்றர் அகலமுடைய இவ்விமானம் நான்கு 18 சிலிண்டர்களுடைய நான்கு இயந்திரங்களை கொண்டுள்ளது. இவ்விமானம் 133 துருப்புக்களையோ அல்லது 15000 கிலோகிராம் சுமையேயோ காவிச்செல்லவல்லது. இவ்விமானத்தின் உட்பகுதி ஏழு ஜீப் வண்டிகளை ஏற்றிச்செல்லத்தக்களவு விசாலமானது.

Boeing 747 Laerge Cargo Freighter.......



300px-Boeing_747-409LCF_Dreamlifterவிமான உற்பத்தித் துறையில் பிரபல்யமாக விளங்கும் போயிங் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இவ்விமானம் பொருட்கள் ஏற்றும் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. 2003 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் போயிங் நிறுவனம் தனது சரக்கு விமான உற்பத்தித் திட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. இத்திட்டத்திற்கமைவாக, ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த போயிங் 747-400 வகை விமானத்தை மீள் வடிவமைப்புச் செய்து தனது சரக்கு விமானத்தை உருவாக்கியது.
இந்தச் சரக்கு விமானமே தற்போது உலகில் பயன்பாட்டிலுள்ள சரக்கு விமானங்களுள் நீண்ட துாரத்திற்கு தொடர்ச்சியாகப் பயணிக்கவல்ல விமானமாகும்.
இவ்விமானத்தின் பொருளேற்றும் பகுதி 1840 கனமீற்றர் கொள்ளளவு உடையது. இந்த விமானம் 71.68 மீற்றர் நீளம், 21.54 மீற்றர் உயரம் மற்றும் இறக்கைகள் உள்ளடங்கலாக 64.4 மீற்றர் அகலம் உடையது. முழுமையான சுமையுடன் 7800 கிலோமீற்றர் தூரத்திற்குப் பறக்கவல்லது.
2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தனது முதலாவது பறப்பை மேற்கொண்ட இந்தவகை விமானங்கள், நான்கு மட்டுமே உலகில் பயன்பாட்டில் உள்ளன.

Aero Spacelines Super Guppy

220px-SuperGuppy-F-BPPAபாரியளவில் சுமைகளைக் காவிச்செல்ல வல்ல இன்னொரு வகை விமானமே இந்த Aero Spacelines Super Guppy ஆகும். இந்த வகை விமானம் முதலில், அமெரிக்க இராணுவத்தின் சேவையிலிருந்து ஓய்விற்கு கொண்டுவரப்பட்டிருந்த C-97J Turbo Stratocruiser விமானத்தின் உடற்பகுதியிலிருந்து தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. இவ்வகை விமானத்தின் உடலமைப்பு, அளவில் (size) பெரியதாகக் காணப்படும் பொருட்களை ஏற்றுவதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விமானம் 43 மீற்றர் நீளமும் 7.6 மீற்றர் விட்டமும் உடைய ஒரு பலூன் போன்று காணப்படுகின்றது. இரு இறக்கைகளுடன் சேர்த்து 47.6 மீற்றர் அகலம் மற்றும் 14.1 மீற்றர் உயரம் கொண்ட இவ்விமானம் 77110 கிலோக்கிராம் சுமையைக் காவிச்செல்லவல்லது.
1965 இல் இவ்விமானம் தனது முதற் பறப்பை மேற்கொண்டது. 1970 களில் Airbus விமான உற்பத்தி நிறுவனத்தினால் இவ்வகை விமானங்கள் இரண்டு அவர்களுடைய விமான உற்பத்திக்குத் தேவையான விமானப் பாகங்களை காவும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டது. அதுதவிர, நாசா மற்றும் Aero Spaceline போன்ற நிறுவனங்களும் இவ்விமானத்தை பயன்படுத்துகின்றன. மொத்தம் ஐந்து விமானங்களே பயன்பாட்டில் இருக்கினறன.

Airbus Beluga

300px-A300-600ST_1_New_Colourஇது Airbus நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சரக்குவிமானமாகும். இவ்விமானம், Airbus நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மற்றைய விமானங்களுக்கான பாகங்களைக் காவிச்செல்லத் தக்கவாறு உருவாக்கப்பட்டது. Airbus நிறுவனம் தொடங்கப்பட்ட காலப்பகுதியில் பெரும்பாலான விமானப்பாகங்கள் தரைமார்க்கமாகவே இடம் மாற்றப்பட்டன. அக்குறையை நிவர்த்திசெய்யும் நோக்கிலேயே இவ்விமானம் உற்பத்தி செய்யப்பட்டது. 7.7 மீற்றர் உடற்பகுதி விட்டமுடைய இந்த விமானத்தினுள் 1210 கனமீற்றர் கனவளவுடைய பொருட்களை ஏற்றிச்செல்ல முடியும்.
1992 இல் உற்பத்தி தொடங்கப்பட்டு, 1994 செப்ரெம்பரில் முதலாவது பரிசோதனைப் பறப்பை மேற்கொண்ட இவ்விமானம், 1995 செப்ரெம்பரில் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 56.15 மீற்றர் நீளம், 17.24 மீற்றர் உயரமுடைய இவ்விமானம் இரு இறக்கைகளுடன் சேர்த்து 44.84 மீற்றர் அகலம் உடையது. இவ்விமானம் 40 தொன் நிறையுடன் 2779 கிலோமீற்றர் தூரத்திற்கு தொடர்ச்சியாகப் பறக்கவல்லது.
Airbus நிறுவனத்தால் மட்டுமே பயன்படுத்தப்படும் இவ்விமானம், மொத்தம் ஐந்து மட்டுமே சேவையிலுள்ளது.

பறப்பு நேர எரிபொருள் மீள்நிரப்புகை (Aerial Refueling)







220px-Usaf.f15.f16.kc135.750pixவிமானங்களின் தொடர்ச்சியான நெடுந்தூரப் பயணத்தை மட்டுப்படுத்தும் காரணிகளில், விமானங்களின் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கொள்ளளவு பிரதான காரணியாகும். போர் விமானங்களைப் பொறுத்தமட்டில் நீண்ட நேரப் போர் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடையாக எரிகொருள் கொள்ளளவும் ஒரு காரணியாகும். பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகையானது விமானங்களுக்கு அவை பறந்துகொண்டிருக்கும்போது எரிபொருள் தாங்கி விமானத்தின்மூலம் எரிபொருளினை நிரப்புதலாகும். இச்செயற்பாடு விமானம் மேலும் தொடர்ந்து பறப்பதற்கு வழிசெய்கின்றது.
போர்விமானங்கள் பெருமளவான போராயுதங்களைக் காவிச்செல்வதன் பொருட்டு ஆரம்ப மேலெழும் நிறையை சமன் செய்வதற்காக தொடக்கத்தில் குறைந்தளவு எரிபொருளையே எர்பொருட்தாங்கியில் நிரப்புகின்றது. இதன்காரணமாக தொடர்ச்சியான போர்நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை இன்றியமையாததாகின்றது. இருப்பினும் அனைத்து வகையான விமானங்களுக்கும் பறப்புநேர எரிபொருள் மீள் நிரப்புகை செய்ய முடியாது. விமானம் பறப்புநேர மீள்நிரப்புகை செய்யக்கூடிய வகையில் பறப்புநேர மீள்நிரப்புகை முனையினைக் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
பறப்புநிலைஎரிபொருள் மீள்நிரப்புகைக்கான ஆரம்பகட்டப் பரிசோதனை 1920 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்டது. விமானம் ஒன்றிலிருந்து இன்னொரு விமானத்திற்கு பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை செயற்பாடு முதன்முதலில் 1923 ஆம் ஆண்டு ஜுன் 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து 1929 ஆம் ஆண்டு, அமெரிக்க விமானப் படையைச்சேர்ந்த விமானத் தொகுதி ஒன்று பறப்புநேர மீள்நிரப்புகை மேற்கொண்டு 150 மணிநேரம் தொடர்ச்சியான பறப்பை மேற்கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து 1930 ஆம் ஆண்டு அமெரிக்க விமானப்படையின் இன்னொரு விமானத் தொகுதி 553 மணி 40 நிமிடங்கள் பறந்து புதிய சாதனை படைத்தது.
தொடர்ந்து 1940 இல் போயிங் விமான நிறுவனம் அமெரிக்க விமானப் படைக்காக எரிபொருள் மீள்நிரப்பும் விமானத்தினைத் தயாரித்தளித்தது. இவ்விமானம் அதனது பின்புறத்தில் எரிபொருள் வழங்கும் குழாயினைக் கொண்டிருக்கும். இக்குழாய் விமானத்திலிருந்து எரிபொருள் நிரப்பப்படவேண்டிய விமானத்தை நோக்கி நீண்டு செல்லக்கூடியது. எரிபொருள் தாங்கி விமானத்திக் எரிபொருட் கட்டுப்பாட்டறையிலிருந்து எரிபொருள் நிரப்புனர் குாயினைக் கட்டுப்படுத்தி நகர்த்தி எரிபொருள் நிரப்பப்பட வேண்டிய விமானத்தின் பறப்பு நேர எரிபொருள் நிரப்பு முனையில் பொருத்தி எரிபொருளினை நிரப்ப முடியும்.
220px-Helicopter_aerial_refuelingஇவ்வாறு பறப்பு நேரத்தில் எரிபொருள் மீள்நிரப்பும் செயற்பாடானது, விமானங்களைத் தொடர்ச்சியாகப் பறப்பதற்கு வழிவகை செய்கின்ற போதிலும், விமான வடிவமைப்பு மற்றும் மீள்நிரப்பும் எரிபொருட் தாங்கி விமானத்தின் வடிவமைப்பு என்பன சிக்கல் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி விமானிகள் மற்றும் எரிபொருள் நிரப்புனர் ஆகியோருக்கான சிறப்புப் பயிற்சிகள் பெரும் செலவுடையவை. எரிபொருள் மீள்நிரப்பும் இச்செயற்பாடு மிகவும் துல்லியமாகவும் அவதானமாகவும் மேற்கொள்ளப்படவேண்டும்.
உலங்கு வானூர்திகளும் இவ்வாறு பற்ப்பு நேர எரிபொருள் மீள்நிரப்புகை செய்யவல்லன. இதற்கென உலங்கு வானூர்திகளில் சிறப்பாக எரிபொருள் நிரப்பும் முனை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறான முனைகளைக் கொண்ட உலங்கு வானூர்திகளுக்கு சாதாரண விமானங்களைப் போன்று பறப்பு நேரங்களில் எரிபொருள் மீள்நிரப்புகை செய்ய முடியும்.

Sunday, February 13, 2011

விமானம் ரிவர்ஸில் போகுமா?

விமானங்கள் முன்னே செல்ல தமது சொந்த சக்தியில் செல்ல முடியுமே தவிர பின்னால் செல்ல முடியாது. அதனால்தான் விமான நிலையங்களில் பயணிகளும் சரக்கும் ஏற்றப்பட்ட நிலையில் ஓடுதளத்திற்கு செல்ல tow trucks எனப்படும் ட்ராக்ட்டர்கள் தேவைப் படுகின்றன. இந்த ட்ராக்ட்டர்களினால் பின் தள்ளப் பட்டு மெதுவாக திரும்பி செல்ல வேண்டிய திசையை பார்த்து விமானங்கள் நின்ற பிறகு இந்த ட்ராக்ட்டர்களில் இருந்து விடுபட்டு, தனது உந்து சக்தியால் ஒடுகளத்தில் ஓடி, அதன் பின் மேலெழும்பி வானில் பறந்து செல்கின்றன.

இங்கு விமானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் என்ஜின்களைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டியதாய் இருக்கிறது. விமானத்தில் நிரப்பப்பட்டிருக்கும் எரிபொருள் எரிக்கப்பட்டு வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்வாயு மிகுந்த அழுத்தமான நிலையில் வைக்கப்படுகிறது. இவ்வாறு வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து ஒரு சிறிய துளை மூலம் இந்த வாயு வெளிப்படுத்தப்படும் பொழுது அவ்வழுத்தத்தினால் ஏற்படும் உந்து சக்தியால் இவ்வாயு வெளிப்படும் திசைக்கு எதிர் திசையில் விமானம் தள்ளப்படுகிறது. இச்சக்தியை ஆங்கிலத்தில் Thrust என அழைக்கிறார்கள். ஒரு பலூனை ஊதி அதன் வாயைக் கட்டாமல் விட்டால் எப்படி பறந்து செல்கிறதோ அது போன்றுதான்.

இப்பொழுது வேறு ஒரு எடுத்துக்காட்டு ஒன்றை பார்க்கலாம். நம் முகத்தின் நேராக உள்ளங்கையை குழிவாக வைத்துக் கொண்டு ஊதினால், அவ்வாறு வெளியேரும் காற்று, மீண்டும் நம் முகத்தை நோக்கியே வருகிறது அல்லவா? அதைப் போன்று விமானங்களில் ஒரு அமைப்பு இருக்கின்றது. அதனை Reverse Thrusters என அழைக்கிறார்கள். நம் கை காற்றை மீண்டும் நம் முகத்திற்கே திருப்புவது போல், இந்த அமைப்பு எஞ்சினிலிருந்து வெளியேறும் வாயுவை அது பொதுவாக வெளியேறும் திசைக்கு எதிர் திசைக்கு தள்ளிவிடுகிறது. அதனால் விமானம் முன்னே செல்வதற்குப் பதிலாக பின்னால் செல்ல ஏதுவாகிறது.

பொதுவாக விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் விரைவாக ஓடும் பொழுது இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்களை பாவித்து விமானத்தின் வேகத்தை வெகுவிரைவில் குறைப்பார்கள். ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கட்டும். இங்கு ரிவர்ஸ் த்ரஸ்டர்களை உபயோகிக்கும் போது ப்ரேக் பிடிப்பது போல் இஞ்சின் வேகத்தைக் குறைக்காமல், வேகத்தை அதிகப்படுத்ததான் செய்வார்கள். இதன் மூலம்தான் தரையிறங்கிய விமானத்தை அவ்வளவு விரைவாக ஓடுகளத்தில் ஓட ஆரம்பித்தாலும் மிகச் சிறிய தூரமே ஓடிய பின் நிறுத்த முடிகிறது. இவ்வசதி இல்லாவிட்டால், ஓடுகளங்களின் நீளம் இன்று இருப்பதை விட பல மடங்கு நீளமாவதாகத் தேவைப்படும். சரி இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானங்களை பின்னால் செல்ல வைக்க முடியாதா? ஏன் செய்வதில்லை?

இதற்கு இரு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் பணம்! ஆமாம். விமானங்களின் இஞ்சின்களை இயக்கி அதன் மூலம் விமானத்தை பின் செல்ல வைப்பதை விட, ஒரு ட்ராக்ட்டரின் மூலம் பின்னால் தள்ளுவதனால் செலவு குறைகிறது. விமான எரிபொருட்களின் விலையும், எஞ்சின்களின் தேய்மானமும் ட்ராக்ட்டரின் செலவை விட பலமடங்கு அதிகமாகிவிடும். எனவே டெக்னிக்கலாக விமானங்கள் தனது சொந்த உந்து விசையால் பின்னால் செல்ல முடிந்தால் கூட அது எங்கும் செய்யப்படுவதில்லை.

இரண்டாவது காரணம் என்ன? அதையும் பார்க்கலாம். விமானங்களில் பிரயாணிகளும் சரக்கும் ஏற்றப்படும் பொழுது விமானங்கள் விமானநிலையத்தைப் பார்த்தவாறு நிறுத்தப்படுகின்றன. இப்பொழுது ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் உபயோகிக்கப்பட்டால் இஞ்சினில் இருந்து வெளியேற்றப்படும் வாயுவானது அதிவேகத்தில் விமான நிலையத்தை நோக்கிதான் வரும். அதனால் விமான நிலைய கட்டடங்கள் பாதிப்படையும். அப்போது உடையும் கண்ணாடி ஜன்னல்களுக்கு யார் பதில் சொல்வது? அதனால்தான் ட்ராக்ட்டர்களை உபயோகிக்கிறார்கள்.

இறக்கையில்லாத விமானம் இருக்க முடியுமா?

இறக்கை இல்லாத பறக்கும் வாகனம் ஒன்று உள்ளது. வாயு நிரப்பப்பட்ட அந்த வாகனம் ஆகாயக் கப்பல் என்று அழைக்கப்படுகிறது.
மற்றபடி, இறக்கையில்லாத விமானம் இருக்க முடியாது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலில், தத்துவார்த்த காரணத்தைக் கவனிப்போம். விமானம் அந்தரத்தில் பறக்கிறதென்றால் அதற்கு உதவுவது இறக்கைகளே. விமானம் பறக்கும்போது இறக்கையின் வடிவமைப்பு காரணமாக இறக்கைகளின் மேற்புறத்தில் வெற்றிடம் உருவாகிறது. அதே சமயத்தில் இறக்கைகளின் அடிப்புறத்தில் காற்றானது இறக்கையை மேல் நோக்கித் தள்ளுகிறது. இதன் விளைவாகவே விமானம் அந்தரத்தில் செயல்பட முடிகிறது. அதே நேரத்தில், விமானத்தின் எஞ்சின் முன்னே செல்ல உதவுகிறது.
இரண்டாவது காரணம் நடைமுறைப் பிரச்சனை சம்பந்தப்பட்டது.
Airbus A380 விமானத்தில் எரிபொருள் டாங்க் இருக்கும் இடங்கள்
Airbus A380 விமானத்தில் எரிபொருள் டாங்க் இருக்கும் இடங்கள் நீல நிறத்தில்
இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அல்லது அமெரிக்காவுக்கு குறைந்தது 300 பயணிகளை ஏற்றிச் செல்கிற பெரிய விமானங்களை சினிமாவிலாவது பார்த்திருக்கலாம். இவை பல ஆயிரம் கிலோமீட்டர் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை. இவ்வளவு பயணிகளையும் அவர்களது மூட்டை முடிச்சுகளையும் சுமந்து செல்ல இந்த விமானங்களுக்கு ஏராளமான எரிபொருள் தேவை.
விமானத்தின் இறக்கைகளில் அடுத்தடுத்து தனித் தனியாக சிறிய அறைகள் இருக்கும். நிரப்பப்படும் எரிபொருள் இவற்றில் போய்ச் சேரும். விமானத்தின் வால் புறத்தில் இரு புறங்களிலும் வால் இறக்கைகள் உள்ளன. நீண்ட தூரம் பறக்கிற பயணி விமானங்களில் இந்த வால்புற இறக்கைகளிலும் எரிபொருள் நிரப்பப்படுகிறது.
பெரிய பயணி விமானங்களின் இறக்கைகள் மிகப் பெரியவை. இவற்றுக்குள் சுமார் 40 கார்களை நிறுத்த முடியும் என்ற அளவுக்கு இவை நிறைய கொள்திறனைக் கொண்டவை. பெரியதொரு பயணி விமானம் சுமார் 2 லட்சம் லிட்டர் எரிபொருளை நிரப்பிச் செல்லக்கூடும். ஆகவே இறக்கைகள் - அதுவும் இவ்வளவு பெரிய இறக்கைகள் - இல்லாவிடில் விமானங்களால் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள முடியாது.
இவ்வளவு எரிபொருளை நிரப்பிக்கொண்டு வானில் கிளம்பிய சிறிது நேரத்தில் ஏதோ காரணத்தால், புறப்பட்ட இடத்துக்கே திரும்ப, அல்லது அருகில் உள்ள விமான நிலையத்தில் தரை இறங்க, அவசியம் ஏற்பட்டால் அதில் பிரச்சனை உண்டு. அதாவது மிகுந்த எரிபொருளுடன் விமானத்தை கட்டுப்படுத்தி தரை இறக்குவது கடினம்; சக்கரங்கள் சேதமாகலாம்; மேலும், தீ விபத்து ஏற்பட்டால் தேவைக்கு அதிகமான எரிபொருளினால் நிலைமை மோசமாகும். ஆகவே விமானம் வானில் கணிசமான எரிபொருளை இரைத்து நன்கு குறைத்துக்கொண்ட பிறகே தரை இறங்குவது வழக்கம்.

Friday, February 11, 2011

பறப்பியல் சார்ந்த சொற்கள்

aviation = பறப்பியல், வானோடியல்; aviator = வானோடி
aeroplane, விமானம் = வான்பறனை; plane = பறனை; aircraft = வானூர்தி; light aircraft= இலகு வானூர்தி, 
civil aircraft = குடிவர் வானூர்தி, military aircraft = படைய வானூர்தி; bush plane = புதர்ப் பறனை; delta wing = முக்கோணச் சிறகை 
airbus = வானுந்து; air liner = வானிழுனை; low cost -carrier = இழிவிலை (வான்)காவி, குறைந்த விலை வான்காவி 
jet plane = தாரைப் பறனை; jet liner = தாரை இழுனை; business jet = பொதினத் தாரை
helicopter = உலங்கூர்தி, சுரினை; heliports = சுரினைப்புகல்; helipad = சுரினைமணை
blimp = வானேதல் (ஏதல் = கப்பல்); airship = வான் கப்பல்; zeppelin = வளிக்கூடு; balloon = பூதி
parachute = பரக்கூடு
fixed-wing aircraft = நிலைச்சிறகு வானூர்தி; rotorcraft = சுழலூர்தி
unmanned aircraft = ஆளில்லா வானூர்தி
wide-body aircraft = வியனுடல் வானூர்தி
supersonic aircraft = மிகையொலி வானூர்தி, மிகையொலியன்; hypersonic = மீயொலி, மீயொலியன்
passenger aircraft = பயணிகள் வானூர்தி; cargo aircraft= சரக்குப் பறனை

airport = வான்புகல், வான்நிலையம், வானூர்தி நிலையம்; airstrip = வான்பொல்லம்; aerodrome = வான்புலம்; airfield = வான்களம்
STOL - short take-off and landing - = குறு தரையிறக்கமும் மேலெழுதலும்
airbase = வான்(படைத்)தளம்; bomber = குண்டு இற்றி, குண்டுவீசி
terminal = முனையம்; aisle = இடைகழி; gate =கதவம்
lounge = பற்றகம், நீட்டி; lobby = கூடம்
information counter = உள்ளுரும எண்ணகம் ; ticket counter = பயணச்சீட்டு எண்ணகம் (நன்றி அருளியார்!); 
hangar = நிழற்கூடம்; apron = வான்தரணம்
flight = பறப்பு; domestic flight = உடமிப்புப் பறப்பு; point to point flights = முனையடிப் பறப்புகள்; direct flights = நேரடிப் பறப்புகள்; 
non-stop flights = நிறுத்தாப் பறப்புகள்; transit = துரந்தை
air traffic = வான் துரப்பு
runway = ஓடுபாதை; taxiway = இணைவழி; tankfarm = தாங்கற்பண்ணை; ramp = தொடுபாலம்; 
runway edge lighting = ஓடுபாதை விளிம்பு விளக்குகள்; access road = அணுக்க சாலை; boarding walkway = பட்டிகை நடைபாதை; service road = சேவைச் சாலை
shuttle bus = நாழியுந்து
conveyor belt = ஏந்தும் பட்டி
control tower = கட்டுறற் கோபுரம்; towered = கோபுரங் கொண்ட; non-towered= கோபுரமில்லா
business class = பொதின வகுப்பு; economy class = பொருண்மிய வகுப்பு
take off = விட்டெழுகை, விட்டெடுப்பு; departure = புறப்பாடு 
landing = நிலைக் குற்றல்; crash landing = மோதி நிலைக்குற்றல்; arrivals = வருகைகள் 
board = பட்டி; boarding= பட்டித்தல்; pass port= புகற் கடவு, கடவுச் சீட்டு ; boarding pass = பட்டிகைக் கடவு
visa = நுழைமதி ; deportation = நாடுகடத்தல், புகலகற்றல்
seat belt = இருக்கைப் பட்டி
duty free shop = வரியிலாக் கடை; customs = சுங்கம், ஆயம்; immigration = குடிவழி 
airport authorities = வான்புகல் ஆணத்திகள்
travel itenary = பயண இட்டிகை
time line = காலக்கோடு; timetables = நேர அட்டவணைகள்; reservation = இடப்பதிவு
cancellation = குற்றெடுத்தல் / குற்றுதல்
airlines, airways = வான்தட, வான்வழி நிறுவனங்கள் 
travels = பயணச் சேவையர் 
check in = கவ்வி உள்ளுதல், உள் ஆய்தல் 
check out = கவ்வி வெள்ளுதல், வெளி ஆய்தல்
pilot = வலவர் /ன்; co-pilot = துணை வலவர் /ன்; cockpit = வலவனறை; autopilot = தானிவலவன்
crew = கும்பு; galley = கலம்
second officer = இரண்டாம் அதிகாரி
airhost = வானோம்பர், வான் கொளுவர்; airhostess = வானோம்பி, வான் கொளுவர்
flight attendant = பறப்பு அணுக்கர்
flight steward / stewardess = பறப்புச் சேவைப் பொறுப்பாளர்
passenger = செலவர், பயணி; wayfarer= கடவர்; baggage = உடைமை; jet lag = பறப்பு இழுவை/ இழுபாடு

air navigation = வான் நாவாயகைப்பு
aeronautics = வானூர்த்தியல்
avionics = பறப்புமின்னியல்

GPS = கோ.பொ.க (கோளகை பொதிப்புறு கட்டகம்)
radar = கதுவீ (நன்றி அருளியார்!)
turbine = துருவளை; turbojet engine = துருவுத்தாரை இயங்குள் / இயங்குபொறி/ எந்திரம்; jet engine = தாரை இயங்குள்
engine failure = இயங்குள் / இயங்குபொறி / எந்திரப் பழுது
aileron = உருட்டிறக்கை
control console = கட்டுறல் ஆள்பலகை /செறுகை
flap = சிறகை
flight instruments= பறனைக் கருவிகள்
fly-by-wire = மின்-சார் பறப்பு
propeller = நுந்தம்
combustion = கனற்சி (நன்றி மணவையார்!); aerosol = காற்றுத்தூசு
aviation fuel = பறப்பு எரிபொருள்
aviation noise = பறப்பியல் நெறு
visual flight rules = விழியப் பறப்பு விதிகள்
instrument flight rules = கருவிப் பறப்பு விதிகள்
wind cone = காற்கொனை
aerodynamics = காற்றுத் தினவியல்
airport code = வான்புகற் குறியீடு
yoke, joystick = நுகப்பிடி, மகிழ்பிடி