விண்வெளி வீரர்களுக்கான ஆரம்ப நிலைப் பயிற்சிகளில் மிகவும் முக்கியமானதொரு பயிற்சி விண்வெளியிலும் விண்வெளியில் உள்ள ஆய்வுகூடங்களினுள்ளும் அவர்களின் நடமாட்டம் தொடர்பான பயிற்சியாகும்.விண்வெளியில் புவியீர்ப்பு விசை காணப்படாத காரணத்தினால் புவியில் நடமாடுவது போன்று விண்வெளியில் நடமாட முடியாது. விண்வெளி வீரர்களும் ஏனைய பொருட்களும் விண்வெளியிலுள்ள வெற்றிடத்தில் மிதந்தபடியே இடம் நகர முடியும். எனவே விண்வெளி வீரர்களுக்கு இவ்வாறு நகர்வதற்குரிய சிறப்பான பயிற்சிகள் புவியிலேயே வழங்கப்பட வேண்டும்.
சாதாரணமாக போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் விமானம் ஒன்றில் எவ்வாறு புவியீர்ப்பு விசை அற்ற நிலை உருவாக்கப்படுகின்றது? விமானம் பறக்கும் கோணம், வேகம் மற்றும் உயரம் என்பனவே இவ்வாறு புவியீர்ப்பு விசை அற்ற நிலையை உருவாக்கக் காரணமாக அமைகின்றது. விமானத்தினைக் குறித்தவொரு பரவளைவுப் பாதையில் (parabolic path) குறிப்பிட்ட கோணம் மற்றும் வேகத்தில் செலுத்தும்போது விமானத்தின் உட்புறத்தே புவியீர்ப்பு நிலை அற்ற சூழ்நிலை போன்றதொரு நிலை உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்படுமி நிலை விண்வெளியிலுள்ள நிலையை ஒத்ததாகக் காணப்படுகின்றது.
இவ்வாறு பயிற்சிக்காகப் பறக்கும் விமானம் 24000 தொடக்கம் 34000 அடிகளுக்கிடைப்பட்ட உயரத்தில் ஒரு வளைவுப்பாதையூடாக மேலும் கீழுமாக வளைந்து பறப்பதனூடாக, இந்த நிலை உருவாக்கப்படுவதோடு இவ்வுயரம்
விமானத்தை பாதுகாப்பாகச் செலுத்துவதற்கு விமானிக்கு உதவுகின்றது. இவ்வளைவுப் பாதையில் மேல்நோக்கிய பறப்பின்போது 45 பாகை கோணத்தில் விமானம் மேல்நோக்கி ஆர்முடுகுவதால் (accelerate) புவியீர்ப்பு விசையானது 1.8 மடங்கு அதிகமாகத் விமானத்தினுள்ளே தாக்குகின்றது. இதன்போது விமானத்திலுள்ளவர்கள் தமது நிறையினை ஏறத்தாழ இருமடங்காக உணர்வர். அதியுயரத்திற்குச் சென்று பின்னர் கீழ்நோக்கிப் பறக்கும்போது விமானத்தின் ஆர்முடுகல் கீழ்நோக்கி அதிகரிப்பதனால் புவியீர்ப்புவிசை முற்றாக இல்லாது போவதன் காரணமாக விமானத்திலுள்ளவர்களின் உடல் இலேசாகிப் பறப்பதுபோன்று உணர்வர். இந்நிலை விண்வெளியிலுள்ள நிலையினை ஒத்ததாகக் காணப்படும்.
தொடர்ச்சியான தொழிநுட்ப வளர்ச்சியின் பயனாக, போயிங் (Boeing) விமானத் தயாரிப்பு நிறுவனம் பல்வேறு விமானங்களை இத்தேவைக்காக வடிவமைத்தது. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட விமானங்கள் பரவளைவுப் பாதை, வேகம் மற்றும் புவியீர்ப்புவிசை போன்றவற்றைக் கணிக்கவல்ல பல சிறப்பான கருவிகளைக் கொண்டிருந்தன. Boeing நிறுவனத்தினால் மீள்வடிவமைப்புச் செய்யப்பட்ட 727 வகை விமானம் -0.1G தொடக்கம் 2.5G வரையில் புவியீர்ப்பு விசையை உருவாக்கவல்லது.
தற்பொழுது, 15 வயதிற்கு மேற்பட்ட எவரும் தனியாகவும் 12 வயதிற்கு மேற்பட்டோர் பெற்றோர் இல்லது பாதுகாவலருடன் பதிவினை மேற்கொண்டு இவ்விமானத்தில் பறந்து விண்வெளியில் பறக்கும் அனுபவத்தினைப் பெற்று மகிழலாம்
No comments:
Post a Comment