1620 ஆம் ஆண்டில் டச்சுக் கண்டுபிடிப்பாளர் ஒருவர் நீரின் அடியால் பயணிக்கவல்ல கலம் ஒன்றினை உருவாக்கியிருந்தார். நீர்மூழ்கிக் கப்பல்களின் வரலாறு இக்கலத்திலிருந்தே
தொடங்குகின்றது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நீர்மூழ்கிகள் பரந்துபட்டளவில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்காலக் கடற்படைகளின் பயன்பாட்டில் நீர்மூழ்கிகள் தாக்குதல், விமானந்தாங்கிகளின் பாதுகாப்பு, ஏவுகணைக் கட்டுப்பாடு மற்றும் வேவு போன்ற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
கடற்கலங்களின் வடிவமைப்பே அவை நீரில் மிதப்பதற்குக் காரணமாகின்றது. அதாவது கப்பல் ஒன்று அதன் மொத்தக் கனவளவிலும் அதிகமான நீரினை இடம்பெயர்க்கும்போது அக்கப்பல் நீரில் மிதக்கின்றது. நீர்மூழ்கிகளும் நீரின் மேற்பரப்பில் இருக்கும்போது இதே தத்துவத்தின் அடிப்படையிலேயே நீரில் மிதக்கின்றன. எனவே நீர்மூழ்கிகள் நீருக்கு அடியிற் செல்ல வேண்டுமாயின், ஒன்றில் அவற்றின் நிறையினை அதிகரிக்க வேண்டும். இல்லாது போனால் அவற்றினால் இடம்பெயர்க்கப்படும் நீரின் கனவளவைக் குறைக்க வேண்டும். எனவே, நீர்மூழ்கிகளில் அவற்றின் நிறையினைக் கட்டுப்படுத்துவதற்காக, அவற்றிக் கீழ்ப்பகுதியில், புறச்சுவரின் உட்புறமாக Ballast Tanks என்றழைக்கப்படும் தாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நீரினாலோ அல்லது வளியினாலோ நிரப்பப்படுவதன் மூலம் நீர்மூழ்கிகளின் நிறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.
நீர்மூழ்கிகள் நீரினுள் செல்லும்போது, நீரில் காணப்படும் உப்பின் தன்மை, ஆழத்தின் காரணமாக நீரினால் ஏற்படுத்தப்படும் அழுத்தம் போன்றவற்றினால் இத்தாங்கிகளின் அழுத்தம் உயர்கின்றது. இவ்வுயர் அழுத்தத்தைத் தாங்கவல்லதாக நீர்மூழ்கிகளின் இத்தாங்கிகள் உருக்கிரும்பினாலோ அல்லது ரைற்றானியம் உலோகத்தாலோ ஆக்கப்படுகின்றன.
நீர்மூழ்கியின் சமநிலைக் கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு அதன் சுழலியின் அருகில் கிடையாகப்
பொருத்தப்பட்டிருக்கும் சமநிலைக் கட்டுப்பாட்டுச் செட்டையும் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோன்று நீர்மூழ்கியின் புவியீர்ப்பு மையப்புள்ளியை அண்மித்துக் கிடையாகப் பொருத்தப்பட்டிருக்கும் பிரதான கட்டுப்பாட்டுச் செட்டைகள் நீர்மூழ்கியின் ஆழக்கட்டுப்பாட்டுச் செயற்பாட்டில் பங்காற்றுகின்றன. அவசர நேரத்தில் நீர்மூழ்கியை நீர்மேற்பரப்புக்குக் கொண்டுவருவதற்கு நீர்மூழ்கியிலிருக்கும் இரண்டுவகையான ஆழ மற்றும் சமநிலைக் கட்டுப்பாட்டுத் தொகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதன்போது நீர்மூழ்கி மிக வேகமாக நீர் மேற்பரப்புக்குக் கொண்டுவரப்படுகின்றது.
தற்போது பயன்பாட்டில் காணப்படும் அநேகமாக அனைத்து நீர்மூழ்கிகளும் அணு சக்தியினால் இயங்குபவையாகவே காணப்படுகின்றன. ஆனால், ஆரம்பத்தில் நீர்மூழ்கிகள் மனிதவலுவால் இயக்கப்படுபவையாகவே காணப்பட்டன. 1863 இல் முதலாவது இயந்திரவலுவால் இயக்கப்படும் நீர்மூழ்கி பிரான்சில் உருவாக்கப்பட்டது. இது அழுத்தப்பட்ட வளியின்மூலம் வலுவூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து 1864 இல் முதலாவது நீராவி இயந்திரத்தால் இயங்கும் நீர்மூழ்கி ஸ்பெயினில் உருவாக்கப்பட்டது. நீர்மூழ்கியில் அணுசக்திப் பயன்பாடு அறிமுகப்படுத்தப்படும்வரை 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான நீர்மூழ்கிகள் நீருக்கடியில் பயணிக்கும்போது மின்கலத்தின் மூலமும் நீர்மேற்பரப்பில் பயணிக்கும்போது டீசல் இயந்திரத்தின் மூலமும் இயங்கிக் கொண்டிருந்தன. இவ்வாறு இயந்திரத்தின்மூலம் இயங்கும்போது அவற்றின் மின்கலங்கள் மீள்மின்னேற்றம் செய்யப்பட்டன.
இரண்டாம் உலகப்போர்க் காலப்பகுதியில் ஜேர்மனியப் பொறியாளர்கள் ஐதரசன் எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும் நீர்மூழ்கியை உருவாக்கினர். போரின் பின்னரான காலப்பகுதியில் ரஸ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் நீர்மூழ்கிக்கான ஐதரசன் எரிபொருள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டபோதிலும் அதன் முடிவு திருப்திகரமாக அமையவில்லை.
சாதாரணமாக ஓர் அணுசக்தி நீர்மூழ்கியில் 80 இற்கும் அதிகமான பணியாளர்களும் சாதாரண நீர்மூழ்கிகளில் அரைவாசியளவு பணியாளர்களும் பணியாற்றுவர். 1985 இல் நோர்வஜியக் கடற்படை தமது நீர்மூழ்கிகளில் முதலாவதாகப் பெண்களைப் பணிக்கு அமர்த்தியது. அதைத்தொடர்ந்து டென்மார்க், சுவீடன், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் தமது கடற்படை நீர்மூழ்கிகளில் பெண்களைப் பணிக்கு அமர்த்தியது.
No comments:
Post a Comment