கொன்கோட் வகை மிகையொலித்தாரை போக்குவரத்து விமானங்கள் வான்வழிப் போக்குவரத்து வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுக்கொண்டபோதிலும் அவற்றின் பயன்பாடு குறுகிய காலத்திலேயே முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டது. 1969 இல் முதலாவது பறப்பை மேற்கொண்டு 1976 இல் பொதுப்பாயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட கொன்கோட் விமானங்கள் 27 வருடங்களில் குறுகிய ஆயுளுடன் தமது சேவையை நிறுத்திக்கொண்டன.
1950 களின் இறுதிப் பகுதியில் ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மிகையொலி வேகத்தாரைப் போக்குவரத்து விமானங்களை உருவாக்குவது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டிருந்தன. பிரித்தானியாவின் Bristol Aeroplane Company மற்றும் பிரான்சின் Sud Aviation ஆகிய நிறுவனங்கள் தத்தமது நாட்டு அரசாங்கங்களின் உதவியுடன் நடாத்திய ஆராய்ச்சியின் முடிவில் தனித்தனியாக மிகையொலித்தாரைப் போக்குவரத்து விமானங்களை உருவாக்கிய போதிலும், அவற்றின் மிகையான உற்பத்திச் செலவின் காரணமாக இருநாடுகளும் இணைந்து இவ்வகை விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் 1962 நவம்பர் 28 இல் இருநாடுகளுக்ககுமிடையில் கைச்சாத்தானது.
நீண்டதூர மற்றும் குறுந்தூரப் பறப்பிற்கென இருவேறு வடிவங்களிலேயே இவ்விமானம்
வடிவமைக்கப்பட்ட போதிலும், விமானசேவை நிறுவனங்கள் குறுந்தூரப் பறப்பிற்கான வடிவத்தில் பெருமளவில் விருப்புக்கொண்டிராத காரணத்தினால், அவ்வடிவத்திற்கான தயாரிப்புக் கைவிடப்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் பல விமானசேவை நிறுவனங்கள் இவ்விமானத்தைப் பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டிய போதிலும் 1973 இல் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி, விமானசேவை நிறுவனங்களின் பொருளாதார மந்தநிலை, சோவியத் ஒன்றியத்தின் மிகையொலித்தாரை போக்குவரத்து விமானமான Tupolev Tu-144 இன் விபத்து என்பவற்றின் காரணமாக அவ்விமானசேவை நிறுவனங்கள் இவ்விமானத்தைப் பயன்படுத்துவதற்குத் தயக்கம் காட்டின. பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் விமானசேவை நிறுவனங்கள் மட்டும் இவ்விமானத்தைப் பயன்படுத்துவதற்கு முன்வந்தன. 70 தொடக்கம் 100 வரையான விமானங்கள் உற்பத்திசெய்யவேண்டிய தேவை எழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், இறுதியில் 20 விமானங்களே உற்பத்திசெய்யப்பட்டன.
கொன்கோட் விமானம் 1974 ஆம் ஆண்டு தனது முதலாவது பரிசோதனைப் பறப்பை மேற்கொண்டது. 2000 மணித்தியாலங்கள் மிகையொலி (supersonic) வேகப் பறப்பு உள்ளடங்கலாக, மொத்தமாக 5335 மணித்தியாலங்கள் பறந்து இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பொருளாதார அடிப்படையில் நோக்கும்போது, ஒரு பயணிகள் விமானமாக, கொன்கோட் விமானம் நீண்டதூரப் பறப்பினை மேற்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறு நோக்கும்போது, Turbofan இயந்திரங்களே நீண்டதூரப் பறப்புக்குப் பொருத்தமானவையாகக் காணப்படுகின்றன. ஆயினும் Turbofan இயந்திரங்களின் அகலமான வளிப்பாதையின் காரணமாக ஏற்படுத்தப்படும் பின்நோக்கிய இழுவிசையின் காரணமான மிகையொலித்தாரை விமானங்களுக்கு அவ்வகை இயந்திரங்கள் பொருத்தமற்றவையாகக் காணப்படுகின்றன. இதன்காரணமாக சுழல்தாரை (turbojet) இயந்திரங்களையே இவ்வாறான விமானங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். இவ்வகை இயந்திரங்கள் அதிகூடிய உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவுடையவை.
சாதாரண போக்குவரத்து விமானங்கள் நியுயோர்க் நகரிலிருந்து பாரிஸ் நகரைச் சென்றடைய 8 மணித்தியாலங்கள் எடுத்துக்கொள்ளும் போது மிகையொலித்தாரை விமானங்கள் 3.5 மணித்தியாலங்களிற்கும் குறைவான நேரத்தையே எடுக்கின்றன. அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடக்கும் பயணங்களில் கொன்கோட் விமானங்கள் சாதாரண போக்குவரத்து விமானங்களின் இருமடங்கிற்கும் கூடுதலான வேகத்திற் பயணிக்கின்றன.
கொன்கோட் விமானத்தின் பயணிகள் சேவைக்கான முதலாவது பறப்பு 1976 ஆம் ஆண்டு ஜனவரி
21 ஆம் நாள் லண்டன் (London)-பஹ்ரெய்ன் (Bahrain)மற்றும் பாரிஸ் (Paris)-ரியோ (Rio) ஆகிய நகரங்களுக்கிடையில் ஆரம்பமானது. அதே ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் பாரிஸ்-கராக்காஸ் ஆகிய நகரங்களுக்கிடையேயான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்க பேரவை (The U.S. Congress) கொன்கோட் விமானங்களின் மிகையொலி வெடிப்பிற்கு (sonic boom) மக்களின் எதிர்ப்புக் காரணமாக அமெரிக்காவில் தரையிறங்குவதைத் தடைசெய்தது. இதன் காரணமாக அமெரிக்காவிற்கான கொன்கோட் விமானத்தின் போக்குவரத்து சேவை தடைப்பட்டது. இருந்தபோதிலும், அமெரிக்கப் போக்குவரத்துச் செயலர் திரு. வில்லியம் கொலிமன் (William Coleman) கொன்கோட் விமானங்கள் வோசிங்ரன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கான அனுமதியை வழங்கினார். அதைத்தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாள் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய விமான சேவை நிறுவனங்கள் தமது சேவையை ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து படிப்படியாக அமெரிக்காவின் ஏனைய நகரங்களுக்கான தடைகளும் நீக்கப்பட்டு கொன்கோட் விமானத்தின் சேவை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 1977 இல் சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் பிரித்தானிய விமான சேவை நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர்-லண்டன் நகரங்களுக்கிடையேயான விமானசேவையை பஹ்ரெய்ன் ஊடாக நடாத்தியது.
2003 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் தன்னுடைய இறுதிப் பறப்புடன் கொன்கோட் விமானம் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டது. பொருளாதார மற்றும் தொழிநுட்ப வளர்ச்சி மீண்டும் கொன்கோட் விமானங்களை சேவைக்குக் கொண்டுவருமா? மிகையொலித்தாரைப் பயண விரும்பிகளின் (supersonic transport lovers) எதிர்பார்ப்பு இது.
No comments:
Post a Comment