பழமொழி.....

Friday, November 25, 2011

கொன்கோர்ட் (Concorde).




இராணுவ வானூர்திகள் பல மணிக்கு 1,225 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தாலும் பயணிகள் சேவையில் அவ்வேகத்தில் சென்ற வானூர்திகள் இரண்டே இரண்டுதான் – ஒன்று கொன்கோர்ட் (Concorde). மற்றொன்று அதற்குப் போட்டியாக ரஷ்யா தயாரித்த டுப்பலோவ் 144 (Tupolev Tu-144).  இதில் வெற்றிகரமாக இயங்கியது என்னவோ கொன்கோர்ட் தான்.
மிகுந்த பொருட்செலவில் தயார் செய்யப்பட்ட வானூர்திகள் தான் கொன்கோர்ட். மொத்தமே 20 வானூர்திகள் தான் தயாரிக்கப்பட்டன. அதில் 6 வானூர்திகள் ஆராய்ச்சிக்களுக்காகவும் மீதமுள்ள 14 வானூர்திகள் பயணிகள் சேவைக்காகவும் பயன்படுத்தப்பட்டன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் ஆளுக்குப் பாதி என தலா ஏழு வானூர்திகளை சொந்தமாக்கிக் கொண்டனர். உலகிலேயே இவ்விரண்டு நிறுவனங்கள்தான் கொன்கோர்ட் வானூர்தி சேவையை பயணிகளுக்கு அளித்தன. 
ஜூலை 25, 2000. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக விபத்தென்றால்  என்னவென்று அறியாத கொன்கோர்ட் வானூர்தியின் முதல் விபத்து. ஆனால் எப்படிப்பட்ட கோர விபத்து. வானூர்தியில் இருந்த 100 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் அவர்களுடன் தரையில் இருந்த நால்வரும் மரணமடைந்த ஒரு பரிதாபமான நிகழ்வு.
இவ்விபத்து நிகழ்ந்ததால் அனைத்து கொன்கோர்ட் வானூர்திகளும் சோதனைக்குட்படுத்தப் படவேண்டும் என இச்சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். இவ்வளவுக்கும் இவ்விபத்தின் காரணம் வேறொரு வானூர்தியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பகுதி ஒன்று ஓடுதளத்தில் விழுந்து, அவ்வானூர்தியின் பின் சென்ற கொன்கோர்ட் வானூர்தியின் சக்கரம் அதன் மேலேறியதால்தான் வெடித்தது எனக் கண்டறிந்தார்கள். எனினும் பல சோதனைகளுக்காக இவ்வானூர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டன
பல சோதனைகள், சில மாற்றங்களுக்குப் பின் முதல் சோதனை ஓட்டம் நடந்தது ஜூலை 17 2001. வெற்றிகரமான ஓட்டம் என அறிவிக்கப்பட்ட பின், மேலும் சில சோதனைகளுக்குப் பின் பயணிகளுடன் பறக்கத் தொடங்கியது செப்டம்பர் 11, 2001. மற்றுமோர் மாபெரும் கொடுமை நடந்த தினம் அல்லவா அது? அந்த கோர சம்பவம் நடந்த பொழுது லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மாற்றியமைக்கப்பட்ட கொன்கோர்ட் வானூர்தி. நடந்த செய்தி கேட்டு மீண்டும் லண்டனை நோக்கி திருப்பி விடப்பட்டது.
அந்நிகழ்வின் பின் மீண்டும் 2001 நவம்பர் மாதம் இவ்வானூர்தி சேவை தொடங்கினாலும் முதலில் நிகழ்ந்த விபத்தின் காரணமாகவும், செப்டம்பர் 11 நிகழ்வின் பின் வானூர்தி பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததினாலும், உலக வணிகத்தில் ஏற்பட்ட பின்னடைவினாலும், தொடர்ந்து உயர்ந்து வரும் சீரமைப்பு செலவினங்களாலும் கொன்கோர்ட் சேவையினை நிறுத்துக் கொள்வதாக ஏப்ரல் 10, 2003 அன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தார் அறிவித்தனர். ஆயினும் அக்டோபர் மாதமே இச்சேவை இறுதியாக நிறுத்தப்பட்டது.
இதுதான் கொன்கோர்ட் வானூர்திகளின் சேவை நிறுத்தப்பட்ட சோகக் கதை.
கொன்கோர்ட் வானூர்திளைப் பற்றி சில குறிப்புகள்.
  • இவ்வானூர்திகள் பறப்பது கிட்டத்தட்ட மணிக்கு 2200 கிலோமீட்டர்கள். அதாவது ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு!
  • லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானம் அத்தூரத்தை சுமார் மூன்றரை மணி நேரத்தில் கடந்து விடும். மற்ற வானூர்திகள் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
  • லண்டனுக்கும் நியூயார்க்கும் இடையேயான நேர வித்தியாசம் 5 மணிநேரம் ஆதலால்,லண்டனில் இருந்து கிளம்பிய நேரத்திற்கு முன்னமே நியூயார்க்கில் வந்து இறங்கி விடும். (அதாவது லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்குக் (அதாவது நியூயார்க் நேரம் காலை 7மணி) கிளம்பினால் நியூயார்க் நகரில் காலை 10:30 மணிக்கு வந்து சேர்ந்து விடும்.)
  • வேகத்திற்கான பல உலக சாதனைகளைப் படைத்த வானூர்தி ரகம் கொன்கோர்ட்
  • முதல் பயணிகள் வானூர்தி சென்றது நியூயார்க் நகருக்கு இல்லை. பஹ்ரைன் நகருக்கு லண்டனில் இருந்தும் பாரிஸில் இருந்து ரியோ டி ஜெனீரோவிற்கும் பறந்தது.
  • இவ்வானூர்திகள் பறக்கும் உயரம் 60,000 அடிகள். இவ்வளவு உயரத்தில் பறப்பதால் அவ்வானூர்திகளின் ஜன்னல் வழியாகப் பூமியைப் பார்க்கும் பொழுது அது தட்டையாக இல்லாமல் பந்து போல் வளைவாகத் தெரியும்.

இதுதான் கொன்கோர்ட் வானூதியின் விபத்து காணொளி



2 comments:

Anonymous said...

வடை போச்சே

Anonymous said...

On Tuesday, 25th July 2000 the very first fatal accident involving Concorde occured with Concorde 203, F-BTSC out bound from Paris to New York.