பழமொழி.....

Sunday, September 25, 2011

Antonov An-225 (அன்டனோ An-225 ரக வானூர்தி)



Antonov என்று சுருக்கமாக அழைக்கப்படும் Antonov Aeronautical Scientist/Technical Complex வானூர்தி  உற்பத்தி நிறுவனமானது உக்ரெய்னைத் தலைமையகமாகக் கொண்டு 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட Antonov An-225 வானூர்தியே உலகின் மிகப்பெரிய வானூர்தியாகும். இவ்வானூர்தி சோவியத் ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்காக, விண்ணோடங்களை இடம்மாற்றல் மற்றும் விண்ணோடங்களுக்கான உந்துகணைகளை ஏற்றிச்செல்லல் போன்ற செயற்பாடுகளிற் பயன்படுத்தப்படுகின்றது. 1988 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஒரேயொரு வானூர்தியே Antonov நிறுவனத்தினால் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.
பொருட்களை ஏற்றுவதனையே பிரதான நோக்காகக் கொண்டு உருாக்கப்பட்ட இவ்வானூர்திவானூர்தியின் உட்பகுதியில் 250000 கிலோக்கிராம் நிறையையோ அல்லது அதன் உடற்பகுதியின் மேற்புறத்தே 200000 கிலோக்கிராம் நிறையையோ காவிச்செல்ல வல்லது.
An-225 வானூர்தியானது அதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வானூர்தியான An-124 வானூர்தியின் அடியொற்றியே தயாரிக்கப்பட்டது. மேலதிக சுமை ஏற்றத்தக்கதாக வானூர்தியின் உடற்பாகம் மற்றும் இறக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன் மேலதிகமான இரு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு ஆறு இயந்திரங்களைக்கொண்ட வானூர்தியாக உருவாக்கப்பட்டது. அத்துடன் அதிக எடையைத் தாங்கவல்லதாக, பிரதான சக்கரத்தொகுதி (landing gear) 32 சக்கரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டதுடன் உடற்பகுதியின் மேற்புறத்தில் சுமையேற்றிச்செல்ல வல்லதாகக் காணப்படுவதன் காரணமாக, விமானத்தின் காற்றியக்க நிலையைச் சமன்செய்வதற்காக இரட்டை நிலைக்குத்துச் சமநிலைச் செட்டைகள் (twin vertical stabilizer) கொண்டதாக இவ்வானூர்தி உருவாக்கப்பட்டது. இந்த வானூர்தி An-124 விமானத்தினை அடியொற்றி உருவாக்கப்பட்ட போதிலும், முன்னணி இராணுவ நிலைகளுக்கான விநியோகத்திற்கோ அல்லது குறுந்தூரப் பறப்புக்களுக்கோ பயன்படுத்தப்படுவதில்லை.
An-225 வானூர்தியின் மேலெழும் நிறையானது (takeoff weight), அண்மையில் பயன்பாட்டிற்கு வந்த Airbus A-380 உள்ளடங்கலாக அனைத்து விமானங்களிலும் அதிகமாகும்.
இவ்வகை வானூர்தி உலகிலேயே ஒன்றேயொன்றுதான் காணப்படுகின்றது. இரண்டாவது வானூர்தியின் உற்பத்திச் செயற்பாடுகள் 1980 களின் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரண்டாவது வானூர்தி முதல் வானூர்தியின் வடிவத்திலிருந்து சிறிது மாறுபட்டுக் காணப்பட்டது. ஆயினும் சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து இரண்டாவது வானூர்தியின் உற்பத்திச் செயற்பாடுகள் யாவும் இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு அந்த இரண்டாவது வானூர்தியின் உற்பத்திப் பணியினைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டளவில் அதனை முடிப்பதாகத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேறவில்லை.


6 உயர்வலு இயந்திரங்கள் (D-18T 26 390 kgp)
அதிக வேகம் 850 Km/h
பறப்பு வேகம்: 700 Km/h
தொடர்ந்து பறக்கக் கூடிய து}ரம் : 15 400 Km
பறக்கக் கூடிய உயரம் : 11 145 m
நிறை : 350 000 Kg
சுமக்கக் கூடிய நிறை : 250 000 Kg
12 பணியாளர்கள்.
துருப்புக் காவி நிலையில் 600 துருப்புக்கள்
விண்வெளி விமானத்தை மேற்பகுதியில் காவிச்செல்லக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது
நீளம் : 84 m.
உயரம் : 18.20 m 



1 comment:

Anonymous said...

உலகின் மிகப்பெரிய வானூர்தியா?