பழமொழி.....

Saturday, April 16, 2011

நீருந்து விசைப்படகு (WaterJet Boat)




நீருந்து விசைப்படகுகளின் ஆரம்ப வடிவம் பிரதானமாக ஆழங்குறைந்த நீர்ப்பரப்பில் பயன்படுத்துவதை நோக்காகக் கொண்டே வடிவமைக்கப்பட்டன. இவ்வாறான வரையறுக்கப்பட்ட தேவைக்கான வடிவமைப்பின் காரணமாக சாதாரண படகுகளைவிட இந்த நீருந்துturbine-jet-boat-1விசைப்படகுகள் 

















சில குறைபாடுகளைக் கொண்டவையாகவே காணப்பட்டன. இருந்தபோதிலும் வேகமாக ஓடும் ஆறுகள் மற்றும் ஆழம் குறைந்த நீர்ப்பரப்புக்களில் இந்த நீருந்து விசைப்படகுகளின் வினைத்திறன் காரணமாக இப்படகுகள் பலராலும் விரும்பப்பட்டது. இதன் விளைவாக இப்படகுகளின் உற்பத்தித் தேவை அதிகரித்தது. தொடர்ந்துவந்த இப்படகுகளின் வடிவமைப்பில் அவற்றின் குறைகள் களையப்பட்டு ஏனைய சாதாரண வகைப் படகுகளின் திறனுக்கு நிகராக அப்படகுகளின் திறன்களும் அதிகரிக்கப்பட்டதுடன், இவ்வகைப் படகுகள் இப்போது, பயணிகள் போக்குவரத்து, மீட்புப்பணி, சுற்றுக்காவல் நடவடிக்கை மற்றும் விநியோகம் எனப் பல்வேறுபட்ட தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாகப் படகுகள் நீரின் அடியில் சுழலும் சுழலிகளின் (propeller) மூலமாகக் கிடைக்கும் உந்துவிசையின் மூலமாகவே உந்திச்செல்லப்படுகின்றன. ஆனால், நீருந்து விசைப்படகு நீர்த்தாரைகளைப் படகின் பின்னோக்கிப் பீய்ச்சியடிப்பதன் மூலம் நீர்ப்பரப்பின் மீது உந்துவிசையை உருவாக்குகின்றது. இதன்காரணமாக, நீருந்து விசைப்படகுகளில் சுழலிகளுக்குப் பதிலாக நீர்த்தாரைகளைப் பீய்ச்சியடிக்கும் இயந்திர அமைப்புக்கள் காணப்படும். ஆரம்பத்தில் வேகமாக ஓடும் மற்றும் ஆழம் குறைந்த நதிகளிற் பயன்படுத்துவதற்காக, நியூசிலாந்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான சேர் வில்லியம் ஹமில்ற்றன் (Sir William Hamilton) என்பவரால் 1954 ஆம் ஆண்டில் நீருந்து விசைப்படகு வடிவமைக்கப்பட்டது.
சாதாரண படகு ஒன்றில் படகின் சுழலியானது (propeller) படகின் பின்புறத்தில் நீரின் கீழாக இருக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டிருக்கும். சுழலி இயங்கும்போது சுழலியின் பின்புறமாகவுள்ள நீர்ப்பரப்பில் ஏற்படுத்தப்படும் அழுத்தம் படகினை முன்நோக்கி நகர்த்துகின்றது. ஆனால் நீருந்து விசைப் படகுகளில் படகின் பின்புறமாக நீரின் மேற்பரப்பு மட்டத்தில் நீர்த்தாரைகளை வெளியேற்றவல்ல அமைப்புக் (pump nozzle) காணப்படும். இவ்வமைப்பினூடாக நீர்த்தாரைகள் வெளியேற்றப்படும்போது ஏற்படுத்தப்படும் மறுதாக்கம் படகினை முன்நோக்கி நகர்த்துகின்றது. படகின் கீழ்ப்புறத்திலிருக்கும் நீர் உள்ளீட்டு அமைப்பினூடாக உள்ளிளுக்கப்படும் நீர் தொடராக அமைக்கப்பட்டிருக்கும் நீரழுத்திகளினால் (seris of impellers) அழுத்தப்பட்டு உயரழுத்தத்தில் வெளியேற்றப்படும். இந்த அழுத்திகள் stages என்றழைக்கப்படுகின்றன. ஆரம்பகால நீருந்து விசைப்படகுகளில் மூன்று நிலைகளிலான அழுத்திகள் (three stages) காணப்பட்டபோதிலும் நவீன படகுகளில் தனியொரு அழுத்தியே (single stage) காணப்படுகின்றது. படகின் பின்புறத்தில் அமைந்திருக்கும் நீர்த்தாரை வழியின் (nozzle) திசையை மாற்றுவதன்மூலம் படகு பயணிக்கும் திசை மாற்றப்படுகின்றது (the boat is steared by changing the direction of nozzle). இருப்பினும் சில படகுகளில் நீர்த்தாரை வழியின் இருபுறத்திலும் சிறு தடுபபுக்ககள் (small gates) பொருத்தப்பட்டிருக்கும். நீர்த்தாரை வழிகள் நிலையாக இருக்க இந்தச் சிறுதடுப்புக்ளை திருப்புவதன் மூலம் நீர்த்தாரை வழியினூடாக வெளியேறும் நீரின் திசை மாற்றப்படுகின்றது. இதன்காரணமாகப் படகின் திசை மாற்றப்படுகின்றது.
சாதாரண படகு ஒன்றில் அதன் சுழலியின் சுழல்திசை மாற்றப்படுவதன் மூலம் பின்னோக்கிய உந்துவிசை (reverse thrust) உருவாக்கப்பட்டு அதன் வேகம் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் நீருந்து விசைப்படகுகளில் நீர்த்தாரைவழியினூடாக வெளியேறும் நீரின் திசையானது திசைமாற்றி (deflector) ஒன்றின் மூலமாக மாற்றப்பட்டு பின்னோக்கிய உந்துவிசை (reverse thrust) உருவாக்கப்பட்டு வேகம் கட்டுப்படுத்தப்படுகின்றது. நீருந்து விசைப் படகுகளில் நீர்த்திசைமாற்றி (deflector) அமைக்கும்போது நீர்த்திசைமாற்றியினால் திசைதிருப்பப்படும் நீர் மீண்டும் படகின் இயந்திரத்தினால் உள்ளிளுக்கப்படாதவாறு நீரானது திசைதிருப்பப்பட வேண்டும். நீர்த்திசைமாற்றியினால் திருப்பப்படும் நீரானது மீண்டும் இயந்திரத்தினால் உள்ளிளுக்கப்பட்டால் மேலதிக வளி நீருடன் சேர்த்து உள்ளிளுக்கப்படும். இவ்வாறு மேலதிக வளி உள்ளிளுக்கப்பட்டால் இயந்திரத்தினாற் சீரான நீர்த்தாரைகளை உருவாக்க முடியாது. இதன்காரணமாக படகின் சீரான ஓட்டம் தடைப்படும். அதுமட்டுமன்றி இவ்வாறு மேலதிக வளி இயந்திரத்தினால் உள்ளிளுக்கப்பட்டால் அது பின்னோக்கிய உந்துவிசையை அதிகரித்துவிடும். நீர்த்திசைமாற்றியை அரைவாசியளவு திருப்பியநிலைக்கு மாற்றுவதன்மூலம் முன் மற்றும் பின் திசைகளில் சம அளவான உந்துவிசைகள் பிரயோகிக்கப்படுவதன் காரணமாக படகினை அசைவின்றி ஓரிடத்தில் நிறுத்த முடியும். இ்வ்வாறு வேகமாகப் படகினை நிறுத்துவதன் மூலம் படகினைச் சடுதியாக திருப்பமுடிகின்றது. சாதாரண படகுகளில் இவ்வாறு படகினைச் சடுதியாக திருப்ப முடியாது.
இவ்வகையான நீருந்துவிசைப் படகுகள் இவற்றுக்கென பிரத்தியேகமான சிறப்பு வடிவமைப்புக்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. குறிப்பாக நீருந்து விசைப்படகுகளின் கீட்புற வடிவமைப்பு ஏனைய வகைப் படகுகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றது. இவ்வகைப் படகுகளின் கீட்புறம் பெரும்பாலும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டவையாகக் காணப்படுவதன் காரணமாக, அதிக வேகத்திற் பயணிக்கும்போது கீட்புறத்தின் பின்பகுதி மாத்திரமே நீருடன் தொடுகையுற்றுக் காணப்படும். இதன்காரணமாக நீரினால் ஏற்படுத்தப்படும் உராய்வு பெருமளவிற் குறைக்கப்படுகின்றது. இருப்பினும் குறைந்த வேகத்திற் பயணிக்கும்போது படகின் அதிகளவான கீட்பகுதி தொடுகையுற்றுக் காணப்படுவதால் நீருராய்வு அதிகமாகவே காணப்படும்.
boat_rearநீருந்து விசைப்படகின் வடிவமைப்பில், நீர்த்தாரை வழியின் அமைவிடமே படகின் வேகம் மற்றும் ஆழங்குறைந்த நீர்ப்பரப்பில் பயணித்தல் என்பவற்றைச் சாத்தியமாக்குகின்றது. படகின் நீர்த்தாரை வழியானது நீர் மேற்பரப்பின் மேலாகக் காணப்படுவதால், படகின் அடிப்பரப்பைத் தட்டையாக வடிவமைப்பது இலகுவாகின்றது. இதன்காரணமாக இவ்வகைப் படகுகளால் ஆழங்குறைந்த நீர்ப்பரப்பிற் பயணிப்பது சாத்தியமாகின்றது. தற்காலத்தில் சாதாரண வகைப் படகுகள் பயன்படுத்தப்படும் அனைத்து பயன்பாடுகளிலும் நீருந்து விசைப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. நீருந்து விசைப்படகுகளின் மிகச் சிறப்பியல்பு, அதன் வெளிப்புறத்தே அசையும் பகுதிகள் எவையும் காணப்படமாட்டா. இது கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்குச் சிறந்தது.
இவ்வகைப் படகுகளின் மிக முக்கியமான பிரதிகூலம் இதன் எரிபொருட்செலவு. அதிகரித்த எரிபொருட்செலவு காரணமாக இவ்வகைப் படகுகளை நீண்டதூரப் பயணச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்துவதென்பது பொருட்செலவு மிகுந்ததாகும்.

No comments: