பழமொழி.....

Monday, April 18, 2011

விண்வெளிப் போர் (Space War)..



ற்போது உலக நாடுகள் அனைத்தையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் ஒரு விடையம் அணுவாயுதங்களாகும். பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் மட்டுமே அணுவாயுதப் பலப்பரீட்சையில் ஈடுபட்டபடி அணுவாயுதங்களை உற்பத்திசெய்து பெருக்கின. ஆனால் தற்போதைய நிலைமையில் உலகின் பல நாடுகள் அணுவாயுதங்களைக் கொண்டிருப்பதுடன் அவ்வணுவாயுதங்களை நீண்டதூரம் காவிச்செல்லவல்ல ஏவுகணைகளையும் கொண்டிருக்கின்றன.
space-war-laserஎனவே, வல்லரசுகள் திறன்மிக்க ஏவுகணைத் தடுப்புப் பொறிமுறைகளை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தவேண்டிய நிலைமையை எதிர்கொண்டுள்ளன. இப் பாதுகாப்புப் பொறிமுறைத் திட்டத்தின் ஒரு அங்கமாக, 1983 இல், றொனால்ட் றீகன் அவர்கள் அமெரிக்க அதிபராக பதவிவகித்த காலப்பகுதியில், அவரால் முன்மொழியப்பட்ட போர்முறைத் திட்டமே, Strategic Defense Initiative (SDI) என்றழைக்கப்படும் நட்சத்திரப் போர்முறையாகும் (Star War).
இந்தத் திட்டத்தின்படி சீரொளிக் கதிர் ஆயுதங்களைக் (laser weapon) கொண்ட செய்மதித் தொகுதிகள் விண்ணில் செலுத்தப்பட்டு அவை எப்பொழுதுமே எதிரிநாடுகளின் வான்பரப்பைக் கண்காணித்தபடி நிலைநிறுத்தப்படும். அமெரிக்காவைத் தாக்கும் நோக்குடன் எந்தவொரு நாடாவது ஏவுகணைகளை ஏவுமாயின், அந்த ஏவுகணைகள் அமெரிக்க வான்பரப்புக்குள் நுளையுமுன்னரே வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபடும் செய்மதிகளால் அழிக்கப்பட்டுவிடும்.
முதற்கட்ட பரிசோதனைகளின் படி இந்தத் திட்டம் எதிர்பார்த்தளவு வெற்றியை அமெரிக்காவுக்குக் கொடுக்கவில்லை என்றபோதிலும், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இத்திட்டத்தினை முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை. ஒரு முழுமையான வெற்றிகரமான திட்டமாக இந்த விண்வெளிப் போர்முறைத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் அமைரிக்கப் பாதுகாப்புத்துறை தொடர்ந்தும் பல்வேறுபட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, தனது பாதுகாப்புப் படைக் கட்டமைப்பில் விண்வெளிப் படை (Space Force) என்றொரு புதிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாகவும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி உலகின் பல நாடுகள் விண்வெளிப் போர்முறையில் தமது கால்களைப் பலமாக ஊன்றுவதற்கான முயற்சியில் மிகவும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன.
space-war-graphicமுதலாம் உலகப் போரின்போது நடைபெற்ற சமர்களில், இராணுவங்கள் உயர் நிலப்பரப்புக்களான மலை மற்றும் குன்றுப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காகவும் தக்கவைப்பதற்காகவும் பெருமளவில் ஈடுபட்டன. இதற்கான காரணம், உயர்வான நிலப்பகுதிகளில் அமைக்கப்படும் நிலைகளில் இருந்து எதிரிப்படைகளின் தாக்குதல்களை இலகுவாக முறியடிக்கலாம் என்பதேயாகும். முதலாம் உலகப்போரில் மட்டுமன்றி மனிதகுலப் போரியல் வரலாற்றில் இதற்கான சான்றுகள் பல உண்டு.
இன்றைய உலகின் நவீன போரியல் விற்பனர்களின் உயர்நிலப்பகுதி விண்வெளியேயாகும். அதாவது அவர்கள் விண்ணிலிருந்து எதிரிகளைக் கண்காணித்து எதிரிப்படைகளின் மீது தாக்குதல் நடாத்தவோ அல்லது எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கவோவல்ல தொழிநுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். அதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் செய்மதிகளை விண்ணில் நிறுத்தி இப்பணிகளை இலகுவாக்கிக் கொண்டுள்ளனர். இதன் பயனாக எதிரிப் படைகளின் நடமாட்டங்கள் அனைத்தும் துல்லியமாக அவதானிக்கப்படுகின்றன.
இவ் உயர் தொழிநுட்பத்தின் காரணமாக ஈராக்கியப் படைகளின் எந்தவொரு நகர்வும் அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகளின் பார்வையிலிருந்து தப்பவில்லை. இவ்வாறான கண்காணிப்புப் பணியுடன் தாக்குதல் பணியையும் இணைப்பதே விண்வெளிப் போர்முறையின் முக்கிய அம்சமாகும். அதாவது, அணுவாயுத மற்றும் பிற ஏவுகணைகளை எதிரிநாட்டு வான்பரப்பிற்குள் வைத்தே செய்மதியில் பொருத்தப்பட்டிருக்கும் சீரொளிக் கதிர் ஆயுதங்களின் (laser weapon) மூலம் தாக்கியழிப்பதாகும்.
space-war-plane1983 ஆம் ஆண்டு, Strategic Defense Initiative (SDI) எனப் பெயரிடப்பட்ட இந்த விண்வெளிப் போர்முறை தற்போது Ballistic Missile Defense என்று அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவினை ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் குடை (umbrella of protection) என வர்ணிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக வருடமொன்றிற்கு 4 பில்லியன் ($4 billion) அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டளவில் மேலும் 6.6 பில்லியன் ($6.6 billion) அமெரிக்க டொலர்கள் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் இந்த விண்வெளிப் போர்முறைத் திட்டங்கள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த நாடுகள் தம்மைத் தமது பாதுகாப்புக் குடையின்கீழ் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்தக் குடையில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளிகள் ஏனைய சிறிய நாடுகளைப் பாதிக்காதிருக்குமா? இது ஒரு விடைதேடவேண்டிய வினாவே.

No comments: