பழமொழி.....

Thursday, April 28, 2011

விண்தூக்கிகள் (space elevators)..



இன்னும் பலநாடுகளில் வாழும் மக்களுக்கு விமானத்தில் பறப்பது ஆடம்பரம் தான். அளவான வருமானம் , முதலாளித்துவம், மலைக்க வைக்கும் விமானக் கட்டணம் ஆகியவை இதற்கு முழு முதற்காரணங்கள் .
ஆனால் இது எல்லா நாட்டுக்கும் பொருந்தாது . முக்கியமாக அமெரிக்காவுக்கு பொருந்தாது ! அங்கே விமானங்கள் போக்குவரத்தின் அன்றாட தேவை; அதுவும் போக கட்டணங்களும் அங்கு மிக குறைவு. எந்தவொரு கண்டுபிடிப்பும் அந்நாட்டில் தான் நடைமுறைப் படுத்தப்படுகிறது . அதுவும் போக மற்ற நாடுகள் ஒரடி வைத்தால் ஆயிரம் அடி வைக்கத் துணிந்தவர்கள் அமெரிக்கர்கள் . அதனால் தான் இந்தப் பொருளாதார நெருக்கடியிலும் அந்நாடு முதன்மையானதாகத் திகழ்கிறது .

என்னடா இவன் தலைப்பை விட்டு எதோ சொல்கிறானே என்று யோசிக்க வேண்டாம். நான் மேல் கூறிய அனைத்திற்கும் இனி வரப்போவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆம்! விமானமும் , நம் வானத்தின் கூரைக்கடியே வாழ்கையும் அவர்களுக்குச் சலித்து விட்டது போலும்.space-elevator-345உலகைவிடவும் வேறு கிரகங்களைத் தங்கள் வீடாக்க அவர்கள் துணித்து விட்டார்கள் , இதெல்லாம் சாத்தியமில்லை என்று ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்த நாடுகள் , அவர்கள் கண்டுபிடித்திருக்கும் ஸ்பேஸ் எலிவேட்டர் (space elevator) மாதிரிகளைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கின்றன.
என்ன இதுவென்று யோசிப்பீர்கள். இதோ விளக்குகிறேன் . இவை தான் அமெரிக்கர்கள் கண்டுபிடித்திருக்கும் வருங்கால வானூர்திகள். இப்போதிருக்கும் ராக்கெட்டுகளை வைத்து விண்ணுக்குப் போக கிலோவுக்கு 10,000 டாலர்கள் செலவாகிறதாம். அனால் இவர்களின் புதிய கண்டுபிடிப்பான ஸ்பேஸ் எலிவேட்டர்கள்(விண்ணுந்திகள் ) மூலம் ஒரு கிலோ எடையை வெறும் 100 டாலர் செலவில் விண்ணுக்கு எடுத்துச்செல்ல முடியுமாம்! சரி, இது எப்படி சாத்தியம் என்று தெரிவதற்கு முன்பு ஸ்பேஸ் எலிவேட்டர்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் .

ஸ்பேஸ் எலிவேட்டர் என்றால் என்ன ?

இந்த விண்தூக்கியின் செயற்பாடு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்தூக்கியை ஒத்தது . இவற்றின் பிரதான பணி ஆட்களை அல்லது சுமைகளை மேலே தூக்கிச் செல்வது . ஆனால் ஒரு மின்தூக்கியால் மீறிப்போனால் இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு மேலே செல்ல முடியாது. இதை புதிய கண்டுபிடிப்பான வின்தூக்கிகளுடன் ஒப்பிட்டால் தெரியும் அவற்றின் சக்தி என்னவென்று ! ஸ்பேஸ் எலிவேட்டர்கள் என்னும் தூக்கிகளால் பல்லாயிரம் மைல்கள், அதுவும் அசுர வேகத்திற் செல்ல முடியும்!
இது எவ்வாறு சாத்தியம்? இதனை ஒரு சிறு உதாரணத்தினூடாக விளங்கிக்கொள்ள முடியும். நாம் ஒரு சிறு கயிற்றிலோ அல்லது நூலிலோ, அதன் ஒரு முனையில் சிறிய கல்லொன்றினைக் கட்டி அதன் மறுமுனையை கையிற்பிடித்துச் சுற்றும்போது அந்தக்கல் நூலினைச் சுற்றும் வேகத்திற்கேற்ப குறித்தவொரு விசையுடன் வெளித்திசையில் இழுவையினை ஏற்படுத்தும். இவ்வாறு ஏற்படுத்தப்படும் விசையானது, நூலினைத் தொய்வின்றி வைத்திருப்பதைக் காணமுடியும்.

இந்த எளிய பௌதீகச் செயற்பாட்டின் அடிப்படையினைப் பயன்படுத்தியே விஞ்ஞானிகள் விண்தூக்கியினை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலையானதோர் அமைவிடத்தில் நீண்ட வடம் ஒன்றின் ஒரு முனையைப் பொருத்தி மறுமுனையை விண்வெளிக்கு எடுத்துச்சென்று மறுமுனையில் ஒரு குறிப்பிட்டளவு நிறையினைப் பொருத்துதல் வேண்டும். இவ்வாறு பொருத்தப்பட்ட நிறையானது புவிச்சுழற்சியின் காரணமாக புவியுடன் சேர்ந்து சுற்றும். இச்சுழற்சியின் போது ஏற்படுத்தப்படும் விசை, குறித்த வடத்தினைத் தொய்வின்றிப் பேணும். புவிச்சுழற்சி சார்பாக, குறித்த வடம் புவியில் நிலையாக அமைந்திருக்கும். இவ்வாறு நிலையாக அமைந்திருக்கும் அந்த வடத்தினைப் பற்றி பொருள் ஒன்றினை மேல்கீழாக நகர்த்த முடியும்.

இவ்வாறு அந்த வடத்தினைப் பற்றி நகரும் பொருளுக்குப் பதிலாக விண்தூக்கி ஒன்றினை அமைப்பதனூடாக விண்வெளிப் பயணத்தினை இலகுவில் மேற்கொள்ள முடியும் என்பது விஞ்ஞானிகளின் உறுதியான நம்பிக்கை.
பதினைத்து வருடம் முன்பு வரை இந்த விண்தூக்கி என்பது நம் பூமியின் எதிர்காலத்தைக் கணித்துகொண்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு ஒரு கனவாகவே இருந்தது . எனென்றால் இந்த விண்தூக்கிகளை ஸ்பேஸ் ரிப்பன் என்னும் கயிறுதான் பாதை மாறாமல் விண்ணிற்குக் கூட்டிச் செல்ல வேண்டும் . கீழே இருக்கும் படம் இதை நன்கு விளக்கும்.

ஆனால் இந்த விண்கயிறு பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு நீளக்கூடியதாகவும் , மிகவும் சக்தி வைந்ததாகவும் இருந்தால்தான் விண்தூக்கியைப் பத்திரமாய் அக்கயிற்றால் மேலே தூக்கிச்செல்ல முடியும். பத்து வருடங்களின் முன்புவரை இப்படி ஒரு கயிறு என்பது சாத்தியமில்லையென்றே கருதப்பட்டது. ஆனால் 'நானோ டெக்னாலஜி' என்னும் புதிய தொழில் நுட்பம் ஒரு வடிவம் உருவாவதின் அடிப்படையையே புரட்டிப் போட்டு இது நிச்சயம் சாத்தியமெனச் சொன்னது !!

இது எப்படி சாத்தியம் என்பதற்கான பதில் இதோ ....

தங்கத்தை எப்படி நாம் அடையாளம் காண்கிறோம் ? அதன் நிறத்தில், அதன் எடை மற்றும் அழியாத்தன்மையை வைத்தல்லவா ? இதை விஞ்ஞானியொருவரின் கண்கள் வேறொரு விதமாகப் பார்க்கும். அதாவது, தங்கத்தில் உள்ள அணுக்களின் அமைப்பு அதைத் தங்கமாக்குகிறது, அமைப்பு மாறினால் அது வேறோர் உலோகமாக மாறிவிடும். ஆக, நம்மால் அணுக்களைக் கட்டுப்படுத்த முடிந்தால், நிச்சயம் அதனால் ஆன பொருட்களின் அத்தனை தன்மையையும் மாற்ற முடியும். அப்படி மாற்றும் சக்தி படைத்ததுதான் 'நானோ டெக்னாலஜி' விஞ்ஞானம். இதை வைத்துத்தான் விண்கயிற்றின் தன்மையை ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாகவும், நூறு மடங்கு எடை குறைவானதாகவும் மாற்றி அமைத்திருகிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஓர் அசல் விண்தூக்கி மாதிரியை 2012 ஆம் வருடத்திற்குள் ஏவ சபதம் பூண்டிருகிறார்கள் அவர்கள் !!

No comments: