1925 இல் ஹெர்மன் ஓபெர்த் எழுதிய ‘அண்டவெளிக் கோள்களுக்கு ராக்கெட் ‘ என்னும் நூலைப் படித்து பிரெளனின் வேட்கை ராக்கெட் மீது ஈடுபட்டது! 1932 இல் எஞ்சினியரிங் பட்டம் பெற்ற பிறகு ராக்கெட் எஞ்சின் ஆய்வுகள் செய்து, ‘எரிமுறைச் சோதனைகள்’ என்னும் ஆய்வு நூல் எழுதி Ph.D. பட்டமும் பெற்றார். அந்நூல் 300, 660 பவுண்டு உதைப்பு [Thrust] ராக்கெட் எஞ்சின்களின் டிசைன், அமைப்பாடு ஆகியவற்றை விளக்கின. 1934 இல் பிரெளனின் சோதனைக் குழு முதன் முதல் 1.5 மைல் உச்சிக்கு ஏறும் இரண்டு ராக்கெட்களை ஏவியது. அவை 47 அடி நீளமுடன், 1600 பவுண்டு பளுவை [Payload] ஏந்திக் கொண்டு, ஆல்ககால், திரவ ஆக்ஸிஜனை [Alcohol, Liquid Oxygen] எரித்திரவமாக உபயோகித்து 60,000 பவுண்டு உதைப்பு கொண்ட V2 ராக்கெட்கள். மேலும் அவை ஒலி வேகத்தைத் தாண்டி 50 மைல் உயரத்தில் எழும்பி, 200 மைல் தூரம் சென்று தாக்கும் வல்லமை பெற்றவை! அவற்றின் திடீர்ப் பாய்ச்சலைக் காணவும் முடியாது! அவற்றின் திடீர்த் தாக்குதலைத் தடுக்கவும் முடியாது! அத்தகைய அசுர வல்லமை பெற்றவை V2 ராக்கெட்கள் !
இரண்டாம் உலகப் போரில் அவரது குழு ஹிட்லரின் ஆணைக்குக் கீழ், பயங்கர V2 ராக்கெட்களை ஏவி, பேரழிவுச் சேதத்தை உண்டாக்கியது! முதல் ராணுவ ராக்கெட் 1942 அக்டோபர் 3 இல் ஏவப்பட்டு வெற்றிகரமாகச் சோதனை முடிந்ததும், 1944 செப்டம்பர் 6 ஆம் தேதியில் முதல் V2 கட்டளை ஏவுகணை [Guided Missile] பாரிஸின் மீது வீசப்பட்டது!
அதன் பின் லண்டன் மீது 1000 ஏவுகணைகள் அடுத்தடுத்து அனுப்பப் பட்டு அங்கே உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் பேரளவில் உண்டாக்கின! யுத்த முடிவிற்குள் ஜெர்மனி 4000 V2 ஏவுகணைகளை ஐரோப்பிய பகை நாடுகள் மீது ஏவியதாக அறியப்படுகிறது!
1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வெர்னர் ராக்கெட் குழுவினர் அமெரிக்கரிடம் சரணடைந்தனர்! 1952 ஆம் ஆண்டு ஹன்ட்ஸ்வில், அலபாமாவில் [Huntsville, Alabama] அமெரிக்க ராணுவக் கட்டளை ஏவுகணை ஆயுதத் திட்டத்தில் [US Army Ballistic Weapon Program] பணி செய்ய அனைவரும் அனுப்பப் பட்டனர்! 1957 அக்டோபர் 4 ஆம் தேதி ரஷ்யா ஸ்புட்னிக்கை விண்வெளியில் ஏவி, அண்டவெளி யுகத்தை ஆரம்பித்து வைத்தது! அதன் பின் வெர்னர் பிரெளன் குழுவினர் விண்வெளி ராக்கெட் பணியில் தள்ளப் பட்டு அமெரிக்காவில் மகத்தான விண்வெளி விந்தைகள் புரிந்தனர்! வெர்னர் பிரெளன் நாசா [National Aeronautics & Space Administration] நிறுவனம் தோன்றியதும் மார்ஸெல் விண்வெளிப் பயண மையத்தின் ஆணையாளராக [Director, George Marshall Space Flight Center] நியமிக்கப் பட்டார்! அப்போது வெர்னர் சந்திர மண்டலப் பயணத்துக்குப் பலவித ராட்சத ராக்கெட்களை [Saturn I, Saturn IB, Saturn V] டிசைன் செய்து, பல விண்வெளித் தீரர்களை நிலவில் இறக்கிப் பாதுகாப்பாக பூமிக்கு மீளச் செய்திருக்கிறார்!
No comments:
Post a Comment