விமானம் என்றாலே மிகப்பெரிய ராட்சத இறக்கைகளுடன் மிகப்பெரிய இடி இடிப்பது போல வந்திறங்கும். விமான நிலையங்களின் அருகில் உள்ள வீடுகள் எல்லாம் இரைச்சலில் அதிரும். அந்த அளவிற்கு அதிக ஒலி காதை பிளக்கும். விமானத்தில் உள்ளவர்களில் சிலருக்கு விமானம் இறங்கும்போது அல்லது புறப்படும்போது ஏற்படும் இரைச்சலால் காது வலியே உண்டாகிவிடும். இதற்கெல்லாம் காரணம் விமானத்தில் உள்ள ராட்சத இறக்கைகள், அதனுள் இருக்கும் இயந்திரங்கள் மற்றும் பிற இயந்திரங்கள் எழுப்பும் ஒலியே காரணம். இந்தப் பிரச்சினைகளை ஒழித்துக்கட்டி இரைச்சல் இல்லாத வான்வழி பயணத்தை ஏற்படுத்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் மற்றும் அமெரிக்காவிலுள்ள மஸ்சாச்சுசட் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூட்டு முயற்சியில் இந்த சப்தமில்லாத விமானம் உருவாக இருக்கின்றது. விமானமா? அல்லது இது பறவையா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இது வந்திறங்குவதோ அல்லது புறப்படுவதோ தெரியாது. மஸ்ஸாச்சுசட் பல்கலைக் கழகத்தின் ஏரோனாட்டிக்ஸ் பேராசிரியர் ஜோல்டன் என்பவர் கூறுகையில், "இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய இலக்கே சப்தத்தை குறைப்பதற்கு எந்த வகையான யுக்தி தேவைப்படுகிறது. எந்த தொழில்நுட்பத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்பதை கண்டறிவதுதான்'' என்கிறார். இவர் இந்த திட்டத்தின் தலைமை பொறியாளர் ஆவார்.
இத்தொழில் நுட்பத்தில் உருவாகும் விமான இறக்கைகள் தற்போதுள்ள விமான இறக்கைகளில் இருந்து மாறுபட்டது. இதில் சில பகுதிகளில் அசைவுகள் இருக்காது. இதனால் விமானம் இறங்கும்போதோ அல்லது ஏறும்போதோ மிகப்பெரிய சப்தமோ இரைச்சலோ தவிர்க்கப்படுகிறது.
விமானம் புறப்படும் போது அல்லது இறங்கும் போது சப்தம் எழாத வகையில் அதனுடைய ஜெட் இயந்திரங்கள் இறக்கைகளில் தொங்கிக்கொண்டிப்பதற்கு மாறாக விமானத்தின் உடல் பாகத்தின் உட்பகுதியிலேயே பொருத்தப்பட்டிருக்கும். பலவாறான ஜெட் மூக்குக்குழாய் (nozzles) இயந்திரங்கள் விமானம் இறங்கும்போதோ அல்லது ஏறும்போதோ அத்தருணத்தில் சப்தம் ஏற்படுத்தாதவாறு குறைந்த விசையுடன் (Slower Jet Propulsion) அதே சமயத்தில் அதிவிரைவாக செயல்படுகிறது.
இத்திட்டத்தில் உருவாக்கப்படும் விமானத்தில் சுமார் 215 பயணிகள் வரை பயணம் செய்யலாம். எரிபொருள் பெருமளவில் சிக்கனம் ஆகிறது. 2008-ல் வடிவமைக்கப்பட உள்ள ஹபோயிங் 787' ரக விமானம் கூட இதனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இதைவிட குறைந்த எரிபொருள் சிக்கனத்தையே கொடுக்கிறது. மேலும் இந்த சப்தமில்லாத விமானம் சுற்றுப்புற சு10ழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படும். இதனால் மாசு எதுவும் கிடையாது.
கேம்ப்ரிட்ஜ் மற்றும் மஸ்சாச்சுசட் பல்கலைக் கழகங்களின் 40 ஆராய்ச்சியாளர்களுடன் உலகில் பல்வேறு பகுதியிலிருந்தும் 30 விமான நிறுவனங்கள் இந்த விமான வடிவமைப்பில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஈடுபட்டுள்ளது, இதில் விமான தயாரிப்பின் பிரசித்திப்பெற்ற போயிங் நிறுவனம் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் நிறுவனமும் அடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான நிதி முதலீடுகளில் பெரும்பகுதியை இங்கிலாந்து அரசின் தொழில் மற்றும் வர்த்தக இலாகா 7 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியுள்ளது. இன்னும் பத்தாண்டுகளில் பயண விமானங்களில் இந்த ரக விமானத்தை அதிகமாக காணலாம் என்று நம்பப்படுகிறது. அடுத்த ஓராண்டிற்குள் இதனுடைய ஆரம்ப மாதிரி வடிவம் தயாராகிவிடும். அடுத்த பத்தாண்டில் சோதனை ஓட்டத்திற்கு வந்துவிடும்.
"இது வழக்கத்தில் இருக்கும் இறக்கை மற்றும் இயந்திரங்களை விட முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பாக இருக்கும். இதில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு விமானத்தில் பறப்பது போன்ற உணர்வே இருக்காது. ஒரு சினிமா தியேட்டரில் இருக்கையில் இருப்பது போலவே இருக்கும். அந்தஅளவிற்கு ஒரு நிசப்தமாகவும், புதிய வடிவமைப்பு பயணிகளுக்கு வசதியாகவும் ரம்மியமாகவும் இருக்கும்'' என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
விஞ்ஞானிகளின் முயற்சியில் எதிலும் பின்னடைவு ஏற்பட்டதே இல்லை. எல்லாமே வெற்றிதான். விஞ்ஞானிகள் எதையும் அமைதியாக சாதித்து விடுவார்கள். அதன் பலன்களின் ஒன்றுதான் இந்த அமைதியான சப்தமில்லாத விமானம்!
No comments:
Post a Comment