பழமொழி.....

Monday, June 6, 2011

கறுப்புப்பெட்டி 2..



ஒரு விமானத்தின் கறுப்புப் பெட்டி அந்த விமானத்தை இயக்கும் நிறுவனத்தின் சொத்து. அதில் உள்ள தகவல்கள் குறித்து அந்த விமான நிறுவனத்துக்கும் விபத்து நடந்த நாட்டைச் சேர்ந்த விசாரணைக்குழுவுக்குமே முழு அதிகாரம் உண்டு. அவர்கள் விரும்பினால் வெளியிடலாம் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக,மோசமான வானிலை காரணமாக என்று எதாவது சொல்லலாம். அவை விபத்துக் காரணங்களில் உள்ள வில்லங்கத்தைப் பொறுத்தது. விமான விபத்து என்பது பெரும்பாலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கறுப்புப்பெட்டித் தகவல்கள் அதிமுக்கியம் வாய்ந்தவையாக கருதப்படும்.

ஒரு கறுப்புப்பெட்டி எந்த ஒரு நிலையிலும் கடந்த 25 மணி நேர விமானத் தகவலும், 30 நிமிட விமானி அறையின் உரையாடல்களையும் கொண்டிருக்கும். கறுப்புப்பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்றுகளும், பூஜ்யங்களுமாகவே இருக்கும் (Binary Format). கருப்புப்பெட்டியில் இருக்கும் மெமரி, data frame எனப்படும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த data frame பகுதிகளில் தகவல் சேமிப்பதற்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஒரு data frame என்பது 48 bits கொண்ட ஒரு binary word ஆக இருக்கும். இதற்கும் மேலாக இந்த data frame தன்னிடத்தில் சேமித்து வைத்திருக்கும் ஒன்றுகளும், பூஜ்யங்களும் விமானத்தகவல்களில் எதைக் குறிக்கின்றன, எந்த வரிசையில் குறிக்கின்றன (உயரம், நேரம், இயந்திரங்களின் நிலைகள்) இவையெல்லாம் பற்றிய தகவல் கோர்வையே data frame layout என்று அழைக்கப்படுகிறது. கறுப்புப்பெட்டி மெமரியின் data frame layout பற்றித் தெரியாமல் ஒருவர் அதிலுள்ள தகவல்களைப் பார்த்தால் வெறும் ஒன்றுகளும் பூஜ்யங்களுமாகத் தான் தெரியும்.

கறுப்புப்பெட்டி உலகில் பல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனங்கள் சர்வதேச வரைமுறைகளின் படி தயாரித்தாலும். data frame layout என்பது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். எனவே எந்த ஒரு விமான சேவை நிறுவனமும் தாங்கள் இயக்கும் அனைத்து விமானங்களிலும் இருக்கும் கறுப்புப்பெட்டி குறித்தான தகவல்கள் மற்றும் அவற்றின் data frame layout ஆகியவ்ற்றை உயிரினும் மேலாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். விபத்து நடந்த பின் கறுப்புப்பெட்டித் தகவல்களின்றி தலை சொரியும் விமான சேவை நிறுவனங்கள் தங்கள் உரிமத்தைக் கூட இழக்க நேரிடும்.

எப்பொழுதுமே இந்த கறுப்புப்பெட்டி செய்திகளில் அடிபடும் போதெல்லாம் கூர்ந்து கவனித்தால் விபத்து குறித்த தகவல்கள் தெரிவிக்க பத்து நாட்களாகும், ஒரு மாதமாகும் என்று சொல்லுவார்கள். ஏன்?. உண்மையில் கறுப்புப்பெட்டியில் இருக்கும் தகவல்கள் கணினிகளில் சில நிமிடங்களில் மேலே படத்தில் உள்ள கருவி (Blackbox readout interface module) மூலம் சேமிக்கப்படும். மற்ற ஒன்பது நாட்களும் சேமித்த தகவல்கள் அனைத்தையும் மீள்கட்டமைப்பு (decoding) செய்வதிலே தான் செலவாகும். இந்த தகவல்களை மீள்கட்டமைப்பு செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. அதைச் செய்ய ஒரு குழு அமைக்கப்படும். விபத்துக்குள்ளான விமானத் தயாரிப்பு நிறுவனம், விசாரணைக் குழு, விமானத்தின் உரிமையாளர்/நிறுவனம் இவர்கள் அனைவரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் தான் தகவல்களை மீள்கட்டமைப்பார்கள். தொழில்நுட்ப ஆலோசனைகளை உடனுக்குடனே பெறவும், தகவல் பறிமாற்றம் எளிதாக நடக்கவுமே இந்த ஏற்பாடு.



இவை அனைத்துக்கும் மேலே கறுப்புப்பெட்டி விபத்துக்குப்பின் கண்டுப்பிடிக்கப்படும் போது உள்ள நிலையும் தாமதத்திற்குக் காரணமாக அமையும். பெரும்பாலும் அடிவாங்கிய சொம்பு போல தான் கறுப்புப்பெட்டி கிடைக்கும். சில சமயங்களில் மெமரி போர்டுகளும் பாதிப்படைவதுண்டு. தண்ணீருக்குள் இருந்து கண்டெடுக்கப்படும் கறுப்புப்பெட்டிகள் ஆய்வு மையங்களுக்கு அனுப்பப்படும் போது beacon கருவியை நீக்கிவிட்டு ஒரு தண்ணீர் நிரப்பிய பாலிதீன் பையில் வைத்தே அனுப்புவது வழக்கம். ஈரம் உலர்வதால் ஏற்படும் ரசாயன மாற்றங்களைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. ஆய்வு மையத்தை அடைந்ததும் கறுப்புப்பெட்டித் திறக்கப்பட்டு மெமரி போர்டுகளுக்கு முதலுதவி அளித்து, பாதிக்கப்பட்ட உதிரி பாகங்களை மாற்றி தகவல்களை மீட்டெடுப்பார்கள்.

இந்த கறுப்புப்பெட்டி ஆய்வகம் அமைப்பதென்பது எளிதானது தான் என்றாலும் அதற்குரிய நிபுணர்கள் உலகளவில் மிகக்குறைவு. மேலும் அனுபவமிக்க நிபுணர்கள் மிகமிகக் குறைவு. மேலும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் நிபுணர்கள் அவ்வப்போது கறுப்புப்பெட்டித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுத்தால் மிக நன்று. இந்த ஆய்வக வசதிகள் உலகில் எந்தெந்த நாடுகளில் உள்ளன?

நைஜீரியா,தென்னாப்பிரிக்கா,ரஷ்யா, இந்தியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், தைவான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனோசியா, தென் கொரியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, சால்வடர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, பிரேசில் மற்றும் கொலம்பியா என அனைத்து நாடுகளிலும் கறுப்புப்பெட்டி ஆய்வகங்களும் இருப்பது தனிச்சிறப்பு.

மற்ற நாடுகள் தங்கள் நாட்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மேற்கூறிய நாடுகளில் ஒன்றுக்கு அனுப்பி விசாரணையைத் தொடங்குவார்கள். அதுபோக கைப்பற்றப்பட்டக் கறுப்புப்பெட்டியின் நிலைமை, ஆய்வக வசதி இருந்தாலும் அந்நாட்டின் நிபுணர்களின் அனுபவம், மெமரி போர்ட் பாதிப்புகள் ஆகியவற்றைப் பொருத்து அனுபவமிக்க நாடுகளுக்கு அனுப்புவதும் உண்டு. கறுப்புப்பெட்டி விபத்து மர்மங்களுக்கு அருமருந்தாக இருப்பதை அனுபவத்தில் உணர்ந்து கார் தயாரிப்பாளர்கள் பல உயர்ரக கார்களிலும் கூட கறுப்புப்பெட்டி பொருத்தத் துவங்கினர்

  A. Aircraft Interface Board 
      B. Audio Compressor Board
         C. High Temperature Insulation     
D. Stainless Steel Shell
         E. Underwater Locator Beacon
    F. Stacked Memory Boards
   G. Memory Interface Cable
         H. Acquisition Processor Board

No comments: