நீங்கள் ஓவ்வொரு முறை விமானத்தில் பயணிக்கும் போதும், உங்கள் பயணத்தின் பாதுகாப்புக்காக தரையில் பல நூறு பேர் அதீத கவனத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அன்றாட பணியில் ஒவ்வொரு நிமிடமும் கவனம் தப்பினால் மரணம் தான், இங்கு மரணம் என்பது பிரயாணிகளுக்கு. ஒவ்வொரு விமானத்தின் பாதுகாப்பான மேலெழும்புதலுக்கும், தரையிறங்குதலுக்கும் பின்னணியில் இவர்களின் உழைப்பிருக்கிறது. யார் அவர்கள், எப்படி இயங்குகிறார்கள், என்னென்ன கருவிகளை உபயோகிக்கிறார்கள், அவற்றின் தொழில்நுட்பம் முதலியவை குறித்து ஒரு பார்வை தான் இப்பதிவு.
முதலில் ரேடார் ( RADAR, Radio Detection And Ranging) தொழில்நுட்ப வல்லுநர்கள். வான் போக்குவரத்து நிலைமை மற்றும் மேககூட்டங்களின் அடர்த்தி குறித்து ரேடார் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருட்கள் உதவியுடன் நொடிக்கு நொடி ஒரு படம் போல் தருவித்து கொடுப்பவர்கள்.
அடுத்து அப்படத்தின் உதவியுடன் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள் வான்பரப்பில் எத்தனை விமானங்கள் ப்றந்து கொண்டிருக்கின்றன, எவையெல்லாம் தங்கள் வான்பரப்பைக் கடந்து வேறு இலக்குக்குப் பயணிக்கப் போகின்றன, எவையெல்லாம் தரையிறங்கப் போகின்றன, அவ்வாறு தரையிறங்கப் போகும் விமானங்களுக்கு ஓடுபாதையை ஒழுங்குபடுத்தி கொடுப்பது மற்றும் விமான நிலையத்தில் இருந்து வெளிக்கிளம்பும் விமானங்களுக்கு மேலெழும்பும் வண்ணம் அவர்களுக்கு ஓடுபாதை வழங்குவது என அனைத்து வேலைகளையும், நேரம் கடத்தாமல் செய்து முடிப்பவர்கள் 'வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள்' (Air Traffic Control- ATC officers ).
விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறையாலோ, விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டாலோ விமானிகள் முதலில் தொடர்பு கொள்வது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தான். இது போன்ற அவசர கால சூழ்நிலைகளைத் தெரிவிப்பதற்கென்றே குறியீட்டு எண்கள் உள்ளன (emergency squawk code) விமானிகள் முதலில் இந்த குறியீட்டு எண்களைத் தெரிவித்ததுமே கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளைக் கையாள்வார்கள்.
ஒவ்வொரு நாட்டுக்கும் நிலப்பரப்பில் எல்லைகள் இருப்பது போல வான்பரப்பிலும் எல்லைகள் உண்டு. அவற்றுக்கு வரைபடங்களும் உண்டு, அதில் நிலவரைபடத்தில் உள்ளது போல ஓவ்வொரு இடங்களுக்கு பெயர்கள் உண்டு. பெரும்பாலும் மூன்றெழுத்துப் பெயர்களாக இருக்கும் (Navigation Points), அந்த இடங்களை இணைக்கும் கோடுகள் தான் வான் வழிகள் (air routes). இந்த Navigation pointகளின் பெயர்களுக்கு நிலப்பரப்பில் இருக்கும் பெயர்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இல்லாதிருக்கும், அவற்றைக் கடக்கும் விமானங்கள் இந்த கோடுகளிலேயே பயணிக்கும். உலக அளவில் இவற்றைக் கண்காணித்து நெறிப்படுத்தும் பணியினை மேற்கொள்ள International Air Transport Association(IATA) என்ற அமைப்பு உள்ளது. ஓவ்வொரு நாடும் தங்கள் நாட்டிலுள்ள விமான நிலையங்களின் விபரங்கள் அவற்றின் குறியீட்டுப் பெயர்கள் (உ.தா. singapore - SIN) ம்ற்றும் தங்கள் வான்பரப்பின் வரைபடங்களை Navigation points & Air routes விபரங்களோடு IATA விடம் சமர்ப்பித்து, அவர்களின் அனுமதியோடு அந்தந்த நாடுகளில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும்.
மேற்கூறிய அனைத்து விபரங்களையும் ஒன்றுபடுத்தி வான் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளுக்கு அடிப்படை ரேடார் மற்றும் வானில் உள்ள போக்குவரத்து நிலைகளைக் காட்சிப்படுத்தி தரும் சிறப்பு மென்பொருட்களைக் கொண்ட கணினிகளும் தான்.
சராசரியாக இவற்றுக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் 30 கி.மீ உயரத்தில் 300 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திரட்டும் திறன் பெற்றிருக்கும். இவை விமான நிலையத்திற்கும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு கோபுரத்திற்கும் வெகு அருகில் நிறுவப்பட்டிருக்கும். இவை ஒவ்வொரு சுற்றாக வான் அலைகளை காற்றில் அனுப்பி, அவை பிரதிபலிக்கப்பட்டால் திரும்பி உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கக் காரணமான பொருளின் (வானூர்திகள்) உயரம், தூரம், அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கு (lattitude and longitude) ஆகியத் தகவல்களைப் பெற்றுத் தரும். இப்படி ஒவ்வொரு சுற்றாக தொடரும் போது விமானங்களின் இடமாற்றத்தை கணக்கில் கொண்டு அவைகளின் வேகத்தையும் கணித்துத் தரும். இத்தகவல்களனைத்தையும் ஒருங்கிணைத்துப் படமாகத் தருவது Operational Control Program எனப்படும் மென்பொருள். இந்த மென்பொருளில் குறிப்பிட்ட விமான நிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வான்பரப்பின் வரைபடம் (navigation points & air routes) , ஒடுபாதைகள், இடங்களின் பெயர்கள் ஆகியவை உள்ளிடப்பட்டிருக்கும். இந்த வரைபடத்தில் ரேடார் தரும் தகவல்களின் படி விமானங்கள் அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கில் பறந்து கொண்டிருப்பது போன்ற காட்சியினை அளிக்கும். இவற்றை மொத்தமாக பார்க்கும் காட்சி தான் மேலே உள்ள படம் படத்தைக் க்ளிக்கி பெரிது படுத்திப் பார்த்தால் விமானங்களின் நகர்வுகளைக் காணலாம்.
No comments:
Post a Comment