பழமொழி.....

Thursday, June 2, 2011

வான் பாதுகாப்பு - 3



வெறும் ரேடார்களை மட்டும் நம்பி இருக்கும் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையங்கள், ஏவுகணைகள் தொடுவானப் பகுதியைத் தாண்டிய பின்னரே தாக்குதலைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப் பட்ட மையங்கள் வெவ்வேறு பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ரேடார்களை நிறுவி அனைத்தையும் ஒரு வலையமைப்பில் ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படும். இதன் மூலம் தவறான எச்சரிக்கைகளை ஒரே நேரத்தில் அனைத்து ரேடார்களையும் சோதித்து அறிந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில்அனைத்துத் தகவல்களும் தவறானதாக இருந்தால், அது சரியான தகவலாகிவிடும் :D.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் ஏவுகணைகளின் பயணிக்கும் தூரம் மற்றும் வேகத்தின் காரணத்தினால் ரேடார்கள் கொடுக்கும் தகவல்கள் சுதாரித்துக் கொள்ள மிகக் குறைந்த கால அவகாசத்தையே கொடுக்கிறது. இதனைச் சமாளிக்கத்தான் செயற்கைக்கோள்கள் மூலமாக பூமியைக் கண்காணிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் எந்நேரமும் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையத்துடன் தொடர்பில் இருக்கும். 'பாதுகாப்புப் பணிகளுக்கு இப்பொழுது நாங்கள் செலுத்தியிருக்கும் செயற்கைக்கோள் மிகவும் உபயோகமாக இருக்கும்' என்று சொல்லப்படுபவற்றில் அனேகம் இந்த வேலையைத் தான் செய்கின்றன. இந்த செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையின் கீழ் பூமியில் எந்த இடத்தில் பெரிதாக வெடிவெடித்து ஒளிப்பிழம்பு தோன்றினாலும் முன்னெச்சரிக்கைத் தகவல் மையத்திற்கு தெரிவிக்கும். D. ஏவுகணைகள் ஏவப்படும் போது தோன்றும் மிகப்பெரும் ஒளிப்பிழம்பின் மூலம், ' அது வந்துட்டு இருக்கு.. எல்லாரும் ஓடுங்க..' என்று கூவுவது இந்த செயற்கைக்கோள்கள் தான்.

இதன் காரணமாகத் தான் ஏவுகணைச் சோதனைகள் நடத்தும் நாடுகள் வெளிப்படையாக இந்த நாள், இந்த நேரத்தில் சோதனை செய்யப் போகிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு செய்கிறார்கள். அறிவிக்காமல் சோதனை செய்யும் பட்சத்தில், 'நம்ம வீட்டுக்கு வெடி வச்சிட்டாங்க' என்று எதிரிகள் பதிலடி தாக்குதலில் குமுறி விட வாய்ப்பிருக்கிறது. மேலும் ரகசியமாக செய்யப்படும் அணுகுண்டுச் சோதனைகளும் இத்தகைய செயற்கைக்கோள்களின் பார்வையில் இருந்து தப்பும் பொருட்டே பூமி அல்லது கடலுக்குள் அடியில் வெளிச்சம் வராமல் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு இந்தியாவின் போக்ரான் சோதனை ஓர் உதாரணம்.

ஆண்ட்ரோபோவ்

தவறுவது மனித இயல்பு என்பதைப் போல எத்தனை தான் கவனமாக வடிவமைக்கப்பட்டாலும் தொழில்நுட்பங்கள் சமயத்தில் தவறுவது உண்டு. அதற்கு செயற்கைக்கோள்களும் தப்புவதில்லை. உதாரணத்திற்கு 1983ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா புதிய தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோள் உதவியுடன் புதிய வான் பாதுகாப்பு மையத்தினை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது. அப்போது அமெரிக்காவுடனான பனிப்போர் உச்சத்திலிருந்த நேரம். எந்த நொடியும் இரண்டு பக்கங்களுமே போருக்குத் தயாராக இருந்தன, ஆயிரணக்கான அணுகுண்டுகளுடன். அப்போதைய சோவியத் தலைவர் ஆண்ட்ரோபோவ் (andropov) ஒரு சுடுதண்ணி :), அதுவும் அமெரிக்கா என்று காதில் சொன்னாலே உடனடி கொதிநிலைக்கும் வரும் திறனை கைவரப்பெற்றவர்.

புதுமனைவிக்குப் பார்த்துப் பார்த்து செய்வது போல, மிகச் சிறந்த, நம்பகமான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து புதிய முன்னெச்சரிக்கை மையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அதில் ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவும் (lt. col. stanislov petrov) அடக்கம். 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று நள்ளிரவில் முன்னெச்சரிக்கை மையத்தில் பணியிலிருந்தார் பெட்ரொவ். அமெரிக்காவிலிருந்து சியோலுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் விமானத்தை, ரஷ்யாவின் வான்பகுதியில் அத்துமீறி நுழைந்து வேவு பார்த்ததாக 269 பேர்களுடன் சுட்டு வீழ்த்தி, அமெரிக்காவை வெறியேற்றிய சம்பவம் நடந்து மூன்று வாரங்களே ஆகியிருந்தது. பனிப்போரின் உஷ்ணம் வரலாற்றில் அதிகமாக இருந்த தருணங்கள். இரண்டு நாடுகளுமே மொத்த அணுஆயுதங்களுடன், போர் மூண்டால் இரண்டு பேருமே அழியும் வண்ணம் (Mutual Assured Destruction - MAD) தயார் நிலையில் இருந்தன. இரண்டு பேருமே அழிந்து போவோம் என்ற பயமே, கடைசி வரை நேரடிப் போர் நிகழாமல் காத்ததென்பது உபதகவல். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பணியிலிருந்த பெட்ரோவுக்கு வந்தது சோதனை. மொத்த எச்சரிக்கை மையமும் ஏவுகணைத் ஏவப்பட்டு விட்டது என்ற எச்சரிக்கை அலற ஆரம்பித்தது. திரையில் ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாகக் காட்டியது. திகைத்துப் போன பெட்ரோவ் என்ன செய்வது என்று யோசித்து முடிப்பதற்குள்ளேயே அடுத்தடுத்து புதிய எச்சரிக்கை ஒலிகள் அலறியது. கணினிக்குள் எட்டிப் பார்த்தால் ஒன்று, இரண்டு, மூன்று என்று அடுத்தடுத்து கூடிக்கொண்டே போய் மொத்தம் ஐந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் காண்பித்தது. பெட்ரோவின் பணி இத்தகவலை மேலதிகாரிகளிடம் தெரிவித்து பதில் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வதே. ஆனால் பெட்ரோவ் அது தவறான எச்சரிக்கை என்று எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து விட்டார். ஏன்?.

சமபலம் பொருந்திய ஒரு நாட்டுடன் அணுஆயுதப் போர் தொடங்க எந்த புத்திசாலியும் வெறும் ஐந்து ஏவுகணைகள் மட்டும் அனுப்பி வைப்பான் என்று பெட்ரோவுக்குத் தோன்றவில்லை. அவர் எதிர்பார்த்தது நூற்றுக்கணக்கில். மேலும் அந்த வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் முற்றிலும் புதிய தொழில்நுட்பம், அதனால் அதன் நம்பகத்தன்மையின்பால் ஏற்பட்ட சந்தேகம். உண்மையிலேயே ஏவுகணைப் புறப்பட்டதாக இருந்தால், எச்சரிக்கைக்குப் பிறகு சில நிமிடங்களில் தொடுவானப் பகுதியைத் தாண்டியிருக்க வேண்டும். ஆனாலும் மற்ற ரேடார்கள் எந்த கூச்சலும் போடாமல் அமைதியாக இருந்தன. இவையனைத்துமே பெட்ரோவ் தவறான எச்சரிக்கை என்று முடிவு செய்து கமுக்கமாகிவிட்டதற்குக் காரணம். அந்த கணம் பெட்ரோவ் அம்முடிவை எடுக்காமலிருந்தால் மூன்றாவது உலகப்போர் தொடங்கியிருக்கும். அணுகுண்டுகளால் அனேக நாடுகள் குளியலாடியிருக்கும். காரணம் அந்த சூழ்நிலையில் போருக்குத் தயாராக இருந்தது மற்றும் ஆண்ட்ரோபோவின் மனநிலை, சட்டதிட்டங்கள் படி பதிலடி குறித்து முடிவெடுக்க அவருக்குக் கொடுக்கப்பட்ட நேரம், செய்தி கிடைத்த பிறகு 2 நிமிடங்கள் மட்டுமே.

ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவ்

பின்னாளில் இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காததால் கடும் ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெட்ரோவ், மனமுடைந்து இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றார். விசாரணையில் சூரியனின் ஒளிக்கற்றைகள் அடர்த்தியான மேகக்கூட்டங்களால் பிரதிபலிக்கப்பட்டதில் செயற்கைக்கோளின் கண்கள் கூசிப்போன விஷயம் தெரியவந்தது. 1990 களில் பெட்ரோவின் மேலதிகாரி ஓய்வு பெற்ற பின், பாரம்பரிய வழக்கப்படி தனது அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்ட பின்னரே வெளியுலகிற்கு இச்சம்பவம் தெரிந்தது. பெட்ரோவை அமெரிக்காவும், ஐரோப்பாவும் கொண்டாடின. ரஷ்யாவுக்குத் தன் தொழிநுட்பத் தவறுகள் குறித்து வெளிக்காட்டிக் கொள்ள முடியாத மானப்பிரச்சினை, முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. பின்னாளில் ஐக்கிய நாடுகள் சபையில் விருதளித்து கவுரவிக்கப் பட்டார் பெட்ரோவ். வரலாற்றில் மிகப்பெரிய அணுஆயுதப் பேரழிவின் விளிம்பில் உலகம் தள்ளாடிய தருணமாக இச்சம்பவம் நினைவுகூறப்படுகிறது.

No comments: