முதல் உலகப் போருக்குப் பின் 1922 இல் ஜெர்மனியின் ஹைடல்பர்க் பல்கலைக் கழகத்தில் [University of Heidelberg] Ph.D. பட்டம் பெற ஹெர்மன் ஓபெர்த் எழுதிய ‘அண்டவெளிப் பயணத்திற்கு ராக்கெட்’ என்னும் ஓர் ஆய்வுப் பதிவுநூல் [Thesis] நிராகரிக்கப் பட்டது! ராக்கெட் டிசைன் பற்றிய பொறி நுணுக்கமான அந்நூல் பல்கலைக் கழகத்தால் விலக்கப் பட்டது, ஒரு விந்தையே! ராக்கெட் எவ்விதம் பூமியின் ஈர்ப்பியல் கவர்ச்சியைத் [Earth's Gravitational Pull] தாண்டி, விடுதலை வேகத்தை [Escape Velocity] எட்டும் என்ற கணித விளக்கங்கள் அந்நூலில் இருந்தன! புறக்கணிக்கப் பட்ட அந்த அரிய ஆய்வு நூலை ஹெர்மன் புத்தகமாக வெளி யிட்டதும், அவரது புகழ் ஓங்கியது!
1922 ஆண்டு வரை ஹெர்மனுக்கு அமெரிக்க ராக்கெட் முன்னோடி, ராபர்ட் கோடார்டைப் பற்றி எதுவும் தெரியாது! அதே போல் 1925 வரை ரஷ்ய ராக்கெட் முன்னோடி ஸியோல்கோவிஸ்கியைப் பற்றி அறிய ஹெர்மனுக்கு வாய்ப்பில்லாமல் போனது! அமெரிக்க, ரஷ்ய ராக்கெட் மேதைகளைப் பற்றி அறிந்தபின் இருவருக்கும், ஹெர்மன் கடிதம் எழுதித் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்! அவர் இருவருடன் அளவளாவிய பின், ஹெர்மன் அவர்களது ராக்கெட் முன்னோடிச் சாதனைகள் தன்னை விட முந்தியவை என்று ஒப்புக் கொண்டார்!
1929 இல் ஹெர்மன் ஓபெர்த் எழுதிய ‘விண்வெளிப் பறப்புக்கு வழிமுறைகள் ‘ [Ways to Spaceflight] என்னும் நூல் பிரான்ஸின் 10,000 பிராங்க் முதற் பரிசைப் பெற்றது! 1931 இல் அவரது முதல் எரித்திரவ சோதனை ராக்கெட் பெர்லினுக்கு அருகில் ஏவப்பட்டது! இரண்டாம் உலகப் போரின் சமயம் 1940 இல் ஜெர்மன் குடிநபராகி, 1941 இல் ஜெர்மன் ராக்கெட் ஏவுதளத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டார்!
நவீன ராக்கெட் பொறிநுணுக்கத்தை விருத்தி செய்து, இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஆணைக்குப் பணிந்து, ஜெர்மன் எஞ்சினியர் வெர்னர் ஃபான் பிரெளன் என்பவரின் கீழ்க் கட்டளை ஏவுகணைகளைப் படைத்து, ஐரோப்பிய நாடுகளை நோக்கி வீசி அழிவை உண்டாக்கியவர்! ஒருகாலத்தில் வெர்னர் ஃபான் பிரெளன், ஹெர்மன் ஓபெர்த்தின் உதவியாளராகப் பணிபுரிந்து ராக்கெட் பொறிநுணுக்கத்தைக் கற்றவர்! அமெரிக்காவில் 1955 முதல் 1958 வரை ‘விண்வெளி முற்போக்கு ஆய்வாளராகப்’ [Advanced Space Research] பணி புரிந்து, பின் மீண்டும் ஜெர்மனிக்கு வந்து நூரன்பர்க்கில் தனது ஓய்வுக் காலத்தைத் தள்ளினார்!
No comments:
Post a Comment