பழமொழி.....

Saturday, June 18, 2011

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு



விமானங்கள் தரையில் நகர்வதையும், வானில் பறப்பதையும் கட்டுப்படுத்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (air traffic control) அமைப்பு உள்ளது. இந்தக் கட்டுப்பாடு, விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் இருக்க மிக அவசியம்.

விமானிகள் உண்மையில் விமானத்தை ஒரு குறிப்பிட்ட திசையிலும், வேகத்திலும், உயரத்திலும் விமானம் பறக்கும் வகையில் அதைக் கட்டுப்படுத்திய வண்ணம்தான் இருக்கிறார்கள். அந்தத் திசை, வேகம் மற்றும் உயரத்தை ஒவ்வொரு விமானத்திற்கும் அது பறக்கும் ஒவ்வொரு கணத்திற்கும் தீர்மானித்து விமானிக்கு ஆணையிடுவோர் தரையிலிருந்து இயங்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்தான்.

இவர்கள்தான் விமானத்தை அது புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடம் வரை செலுத்துகிறார்கள் என்றால் அது மிகையாகாது. விமானிகள் இவர்கள் ஆணைகளை முக்கால் வாசி நேரம் ஒரு இயந்திரம் போலத்தான் செயல் படுத்துவார்கள். அப்படிச் செய்யாத விமானிகளுக்கு அவர்கள் விமான ஒட்டும் உரிமம் ரத்து செய்யப் படும்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானங்களின் இருப்பிடத்தை தரையில் அமைக்கப் பட்டிருக்கும் ராடார் (radar) கருவிகள் மூலம் அறிந்து கொள்கிறார்கள். தங்களுக்கு முன் இருக்கும் ராடார் திரையில் விமானங்களின் இயக்கத்தை நகரும் பச்சைப் புள்ளிகளாகப் பார்க்கிறார்கள்.

ராடார் கட்டமைப்புகள் விலை உயர்ந்தவை. அவை தரையில் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அமைக்கப் பட்டிருக்கும். ஆகவே விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானங்களை அந்த ராடார்களின் தொலையுணர்வு தூரத்திற்குள்ளாகவே விமானங்கள் இயங்கும் வகையில் அவற்றைச் செலுத்துவர்.

ஒரு விமானத்திற்கும் பக்கத்தில் பறக்கும் இன்னொரு விமானத்திற்கும் குறைந்த பட்ச இடைவெளி (பக்கவாட்டிலோ அல்லது உயரவாக்கிலோ) 1000 அடி இருக்க வேண்டும். விமானம் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பறக்கும் போது இந்த இடைவெளி 2000 அடியாக உயர்த்தப் படும்.

மேற்கூறிய இந்த (ராடார் இருக்கும் இடத்தில் மட்டுமே பறப்பது, மற்றும் விமானங்களுக்கிடையே குறைந்தபட்ச இடைவேளி போன்ற) கட்டுப்பாடுகளால் விமானங்கள் பறக்க ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் தரையில் சாலைகள் உள்ளது போலவே வானத்தில் முன்னமே நிர்ணயிக்கப் பட்ட விமான பாட்டைகள் உள்ளன. ஆகவே, உதாரணமாக, பெங்களுரிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ஒரு விமானம் கிளம்பியவுடன் நேர்கோட்டில் டெல்லியை நோக்கிப் பறக்க முடியாது. அதற்கு தேர்ந்தளிக்கப் பட்ட பாட்டையில் மட்டுமே பறக்க வேண்டும்.

இதனால் நேரச்செலவும், எரிபொருள் செலவும் அதிகமாகக் கூடுமே என்று உங்களுக்குத் தோன்றுவது மிகச் சரியான எண்ணம்.



ஒரு பறவை போல விமானி அவர் விரும்பிய பாதையில் விமானத்தை ஓட்டிச் செல்ல அனுமதிக்கும் தொழில் நுட்பம் இப்போது ஆய்வுச் சாலையில் உள்ளது. இது பறக்கும் விமானங்களுக்கிடையே நடுவானில் வானலைகளை (radio) உபயோகித்து ஒரு இணையம் அமைக்க உதவுகிறது. இந்த இணையத்தில் ஒவ்வொரு பறக்கும் விமானமும் அதன் அடையாளக் குறி, அது பறக்கும் திசை, அதன் தற்போதைய இருப்பிடம், உயரம், வேகம் முதலிய தகவல்களை சுற்று வட்டாரத்தில் பறக்கும் மற்ற விமானங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். விமானத்தில் அமைக்கப் பட்டிருக்கும் மென்பொருள் செயலி இந்தத் தகவல்களை வகைப் படுத்தி விமானிக்குக் கொடுத்து அவர் விமானத்தை எங்கும் முட்டிக் கொள்ளாமல் ஊர் போய்ச் சேரும் படி செலுத்த அவருக்கு வழிகாட்டித் தந்து உதவும்.

இந்தக் கட்டமைப்பின் முன்மாதிரி ஒன்றை அமெரிக்காவின் நாசா (NASA) கூடிய விரைவில் வெள்ளோட்டம் விட இருக்கிறது.

புதிய தொழில் நுட்பம் முழுமையாக செயலுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் வரை ஆகும். புதிய தொழில் நுட்பத்தால் பயணிகளுக்கு நேரச் செலவும், எரிபொருள் சிக்கனத்தால் பொருட்செலவும் குறையும். வானத்தில் அதிகப் போக்குவரத்தை அனுமதிக்க முடியுமாதலால் சாதகமான சேவைகளும் கிடைக்கும்.

புதிய மென்பொருள் செயலியை வடிவமைக்கப் போகும் பொறியாளர்கள் வேலைநேரத்தில் வலைப்பதிவு படிக்காமல் கருத்துடன் வேலை செய்து குறையில்லாத மென்பொருள் செயலியை வடிவமைப்பார்கள் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். பிற்காலத்தில் பறப்பவர்கள் உயிரெல்லாம் அந்த மென்பொருளில் பொறியாளர்கள் விட்டு வைக்கப் போகும் குறைகளில்தான் இருக்கப் போகிறது.



No comments: