சாலையில் நிற்கும் போது அதிவேகமாக ஒரு வாகனம் கடந்தாலே சட்டை படபடக்கும், நெஞ்சு திடுதிடுக்கும், தூசி வாரியடிக்கும். சுமார் மணிக்கு 150000 மைல் வேகத்தில் ஒரு ஏவுகணை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றால் எப்படி இருக்கும்?. அந்த நேரத்தில் செயல்படுவதா, வியர்வையைத் துடைப்பதா என்று யோசிப்பதற்குள் படம் முடிந்துவிடும்.
வான் பாதுகாப்புப் பணியில் உள்ள சவாலே, தாக்குதலின் அதிவேகம் தான். அதிவேக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள் 5000 முதல் 10000 கிலோ மீட்டர் வரை 15000 மைல் வேகத்தில் ஆயிரம் கிலோ எடையுடன் பயணிக்கும் அசுரபலம் பெற்றது. கிட்டத்தட்ட பூமிப்பந்தின் சரிபாதியை ஒரு மணிக்குள், ஒலியை விட ஐந்து ம்டங்கு அதிகான வேகத்தில் கடக்கும் ஒரு வஸ்துவைச் சமாளிப்பது தான் குறிக்கோள். ஒரு நாடு ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடித்தவுடன் அதன் திறன்களை, பெருமைகளை முரசறிவிப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு கிலியேற்படுத்ததான் இந்த ஏற்பாடு. இவ்வாறு அறிவித்தவுடன் அதன் எதிரி நாடுகள் உடனே ஒரு காகிதம், எழுதுகோலோடு சம்மணமிட்டு வீட்டுப்பாடம் செய்யும் குழந்தையைப் போல கணக்குப் போட ஆரம்பிப்பார்கள். என்ன கணக்கு?. அந்த ஏவுகணையால் நம் நாட்டில் இருக்கும் முக்கியமான இடங்களில் அடிவாங்க எவ்வளவு நேரமாகும் என்று தான்.
ஒரு உதாரணக் கணக்கு. இஸ்லாமாபாத்திலிருந்து மும்பைக்கு எப்படி கணக்கிடுவார்கள் என்று பார்ப்போம். முதலில் இரண்டு நகரங்களின் அகலாங்கு, நெட்டாங்கு (latitude & longitude) விவரங்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும். இஸ்லாமாபாத் (33.6° N 73.1° E), மும்பை (18°55'N, 72°50'E). இந்த இரண்டு அகலாங்கு, நெட்டாங்குகளுக்கிடையே உள்ள தூரத்தினைக் கணக்கிட ஒரு சூத்திரம் (formula) இருக்கிறதென்றாலும், உற்றுப்பார்த்தால் தலைவலிக்கும் வாய்ப்பிருப்பதால் மக்கள் நலன் கருதி தவிர்க்கப்படுகிறது. தெரிந்து கொள்ள விருப்பம் மற்றும் துணிந்த மனமுள்ள அன்பர்கள் பின்னூட்டத்தில் தெரிக்கவும். இதற்கென்று கணினியில் நிரல் எழுதி வைத்திருப்பார்கள். உ.தா.http://www.nhc.noaa.gov/gccalc.shtml
மேலுள்ள சுட்டியின் பக்கத்திற்கு சென்று அகலாங்கு நெட்டாங்கு விவரங்களை அளித்தால் தூரத்தைக் கணக்கிடலாம். நாம் தேர்ந்தெடுத்த நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 851 வான்மைல்கள் (nautical miles). நிமிடத்திற்கு 140 வான்மைல்கள் பயணிக்கும் பாகிஸ்தானின் ஷாகின் வகை ஏவுகணைகளைக் கணக்கில் கொண்டால் 6 அல்லது 7 நிமிடங்களில் பத்திரமாக மும்பையில் தரையிறங்க வாய்ப்புகள் அதிகம். புள்ளிவிவரங்களின் படி பாகிஸ்தானிடம் பலவகை ஏவுகணைகள் இருந்தாலும், விமர்சகர்கள் பார்வையில் அவர்களிடம் உள்ளது இரண்டே வகைதான் என்பது கிளைக்கதை. ஒன்று சைனா பொங்கல் சீராகக் கொடுத்தது மற்றது வடகொரியாவில் தலைத்தீபாவளிக்கு வாங்கியது.
இவ்வாறு ஏவுகணைகள் அனுப்பும் போது எதிர்-ஏவுகணைகள் மூலம் வானிலேயே வானவேடிக்கை நிகழ்த்தப்படும் வாய்ப்பிருப்பதால் எப்போதுமே இவை சிங்கம் போல் தனித்து வந்து ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை. கூட்டமாக அனுப்பப்படுவதே வழக்கம். அதில் ஒன்று அல்லது இரண்டைத் தவிர மற்றதெல்லாம் புஸ்வாணமாக இருக்கும். இவற்றுக்கிடையே உள்ள வித்தியாசங்களை உணர்ந்து குறிபார்த்து அடிக்கும் கடமை வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையத்தின் பொறுப்பு. எப்படி கண்டுப்பிடிக்கிறார்கள்?. புஸ்வாண ஏவுகணைகள் (decoys) காற்று வெளியில் பயணிக்கும் போது உண்மையான ஏவுகணைகளை விட விரைவில் வெப்பம் குறைந்து விடும். அதனால் ரேடார் வானலைகளின் பிரதிபலிப்பில் ஏற்படும் வித்தியாசங்களை வைத்து புஸ்வாணங்களைத் தவிர்த்துவிட்டு எதிர் தாக்குதல் நடக்கும்.
இத்தனை பிரயத்தனப்பட்டு வான்பரப்புப் பாதுகாக்கப் பட்டாலும், நாடு முழுமைக்குமான பாதுகாப்பு இதுவரை எந்த நாட்டுக்கும் இல்லை. அமெரிக்கா மட்டும் அதற்கானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தாக்குதல் நடக்கும் சமயத்தில் அத்தனைத் தொழில்நுட்பங்களும் துருப்பிடித்து விடாமல் சரியாக செயல்பட வேண்டியது அதிமுக்கியம். அதற்காக இந்தியா போன்ற கைப்புள்ளைகள் அவ்வப்போது போர்ப்பயிற்சியிலும், அமெரிக்கா போன்ற மைனர் குஞ்சுகள் அவ்வப்போது தீவிரவாதம் அடக்கி, அமைதி பரப்பும் காரணம் காட்டி நேரடியாகப் போரிலும் ஈடுபடுவது வழக்கம் :).
வான் பாதுகாப்பு மையங்களுக்கும் சில குறைகள் உள்ளன. அரிதாக சில சமயங்களில் சூரியனோ, சந்திரனோ சரியாக ரேடாரின் நேர்க்கோட்டில் வரும்போது, மேகக்கூட்டங்களும் இருந்து அதிகமான ஒளியை ரேடாரை நோக்கி செலுத்தும் வண்ணம் சந்தர்ப்பங்கள் நேரலாம் (false alarm). இங்கு பணியில் இருப்போர் எச்சரிக்கைத் தகவல் கிடைத்ததும், வகுப்பில் தூங்குபவனை எழுப்பிய மறுவினாடி சிலிர்த்துக் கொண்டு வாத்தியாரைக் கவனிப்பது போல், உடனே பதில் தாக்குதலுக்குத் தயாராகி விடக் கூடாது. எச்சரிக்கைத் தகவல் உண்மை தானா, அல்லது பிழையான எச்சரிக்கையா என்றெல்லாம் ஆராய்ந்து விட்டே அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும்.
No comments:
Post a Comment