பழமொழி.....

Sunday, June 5, 2011

கறுப்புப்பெட்டி..



கறுப்புப்பெட்டி(Blackbox) என்பது விமானங்களின் தொழில்நுட்ப நிலைகளைப் பதிவு செய்ய விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு தகவல் சேமிப்பு கருவி. விமானத்தில் கறுப்புப்பெட்டி பொருத்துவதென்பது ஓவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக முயற்சிக்கப் பட்டு மேம்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக 70 வருடங்களுக்கு முன்னால் பிரான்ஸில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதே இதன் ஆரம்பம்.


கறுப்புப்பெட்டி ஒரு சுவாரஸ்யமான கருவி, அதன் குணாதிசயங்கள் ஆச்சர்யமானவை. 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 60 நிமிடங்களுக்கு மேலாகவும், அழுத்தம் மிகுந்த கடல் நீரில் நான்கு வாரம் வரைக்கும், சுமார் முப்பாதாயிரம் அடி உயரத்தில் இருந்து தரையில் வீழ்ந்தாலும், 2000 கிலோ வரையிலான சுமையைத் தாங்கினாலும் எந்த சேதாரமும் இல்லாமல் அமைதியாய் இருக்கும். எப்படி? முதலில் அலுமினியம், பின்னர் உலர் சிலிகா, அதன் பின்னர் டைட்டானியம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு மிக மிக உறுதியான கொள்கலனுக்குள் வைக்கப் பட்டிருப்பது தான் எதையும் தாங்கும் இதயமாக கறுப்புப்பெட்டி இருக்கக் காரணம். இவ்வளவு பாதுகாப்பாகத் தயாரிக்கப்பட்டாலும், எல்லா சம்பவங்களிலும் கறுப்புப்பெட்டி சேதமின்றி கிடைப்பதில்லை. இந்தக் கறுப்புப்பெட்டி கறுப்பு வண்ணத்தில இருக்காது, சிவப்பு அல்லது அடர்மஞ்சள் வண்ணத்தில் இரவிலும், பகலிலும், தண்ணீருக்கடியிலும் எளிதில் அடையாளங்காணும் வகையில் இருக்கும். இருந்தாலும் ஏன் கறுப்புப்பெட்டி என்று பெயர் வந்தது?, ஆரம்ப காலத்தில் photosensors (தமிழில்?) பயன்படுத்தித் தான் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுவந்தது, அதனால் ஒளி ஊடுருவ இயலாத வகையில் பெட்டி வடிவமைக்கப்பட்டதால் blackbox கறுப்புப்பெட்டி என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் photosensors நீக்கப்பட்டு மின்காந்த நாடாக்கள் (Electromagnetic tapes) அதன் பின் மெமரி போர்டுகளாக மாற்றம் பெற்றது.

கறுப்புபெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால்பகுதியிலேயே பொருத்தப்பட்டிருக்கும், சில சமயங்களின் மேற்கூரையிலும் பொருத்தப்படுவதுண்டு. காரணம் அந்த பகுதிகளில் தான் விபத்தின் போது ஏற்படும் அதிர்வுகள் குறைந்து இருக்கும், மேலும் அனேகமாக கடைசியாக விபத்தினால் பாதிக்கப்பட போகும் இடமாகவும் இருக்கும். கறுப்புப்பெட்டியில் இரண்டு பகுதிகள் உண்டு, விமானிகளின் கட்டுப்பாட்டு அறையில் எழும் அனைத்து ஒலிகளையும் பதிவு செய்ய cockpit voice recorder (CVR) மற்றும் விமானத்தின் பறக்கும் உயரம் உட்பட இயந்திர பாகங்களின் செயல்பாட்டு நிலைமை அனைத்தையும் பதிவு செய்ய flight data recorder (FDR). பெருவாரியான விபத்துகள் அத்துவானக் காடுகளிலோ அல்லது கடல்பகுதியிலேயோ தான் நடைபெறுகின்றன. விபத்து குறித்துத் தகவல் கிடைத்தவுடன் மீட்புப்பணிகள் ஒருபுறம் நடந்தாலும் அதைவிட பரபரப்பாக விசாரணை அதிகாரிகளின் கறுப்புப்பெட்டித் தேடல் வேலையும் நடந்து கொண்டிருக்கும்.


FDR மற்றும் CVR தவிர beacon எனப்படும் ultrasonic ஒலிக்கருவியும் கறுப்புப்பெட்டியில் இருக்கும். ஒருவேளை விபத்துகள் கடல்பகுதியில் நடந்தால், தண்ணீரில் மூழ்கிய மறுகணம் ஒவ்வொரு நொடியும் beacon கருவி ultrasonic ஒலியலைகளை சுமார் 14000 அடி வரை பரப்பும். தேடல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் sonar கருவிகள் மூலம் ஒலியலைகளை இனம் கண்டு கடலுக்கடியில் இருக்கும் கறுப்புப்பெட்டியைக் கண்டுபிடிப்பார்கள். இந்த beacon கருவி கருப்புப்பெட்டியை மட்டுமின்றி விமான விபத்து நடந்த கடல்பகுதியையும் கண்டுபிடிக்க உதவி செய்து, அதன் மூலம் யாரேனும் தப்பிப்பிழைத்திருந்தால் அவர்களையும் கூடுமானவரை விரைவில் மீட்டெடுக்க உதவி புரிகிறது.

விபத்துக்கான சரியான காரணங்கள் பற்றியும், அதனைத் தவிர்ப்பதற்கான விமானிகளின் கடைசி நிமிட போராட்டங்கள், அவர்கள் கையாண்ட உத்திகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமின்றி எதிர்காலத்தில் அது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க விமானிகளுக்கு சிறப்புப் பயிற்சி அல்லது விமான வடிவமைப்பில் அதிக நவீனப்படுத்தப்பட்ட மாற்றம் ஆகியவற்றின் தேவை குறித்து முடிவெடுக்கவும் கறுப்புப்பெட்டியே மூலாதாரம்.



No comments: