பழமொழி.....

Saturday, June 4, 2011

விண்ணுந்து பயணத்தில் 2..



வ்வொரு விமானத்திற்கும் தனக்கென பிரத்யேகமாக அழைப்புக் குறியீடு (Call Sign - உ.தா. BAW10H) இருக்கும். இந்த அழைப்புக் குறியீடு, தான் தரையிறங்க வேண்டிய இடம், அவசர கால குறியீட்டு எண்கள் போன்றவற்றை வானலைகள் மூலம் ஒலிபரப்பி விமான நிலையத்தின் ரேடாருக்கு அனுப்பும் வேலையைச் செய்வது ACARS Aeronautic Communications and Reporting System. இதன் மூலம் தான் ஒரே விமானத்தை ஒவ்வொரு சுற்றிலும் மீண்டும் மீண்டும் பார்க்கும் போது ரேடார் அடையாளம் கண்டுகொள்கிறது.

இவற்றைத் தவிர விமானத்தில் அவசர காலத் தொடர்பிற்கு செய்மதி தொலைபேசி SATCOM (Satellite communications to a land based telephone system) , அருகிலிருக்கும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தைத் தொடர்பு கொள்ள மிக உயர்நிலை வானொலித் தகவல் தொடர்பு சாதனங்கள் (VHF Radios), வானில் சக விமானங்களோடு மோதிக் கொள்ளாமல் தவிர்க்க Traffic alert and Collision Avoidance System (TCAS) எனப்படும் சிறிய ரேடார் ஒன்றும் செயல்பாட்டில் இருக்கும்.

விமானிகள் விமானத்திலுள்ள ரேடியோ கருவிகள் மூலம் அருகாமையிலுள்ள விமானங்களுக்கும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கும் தொடர்பு கொண்டு பேச முடியும். இந்த உரையாடல்கள் அனைத்தும் மற்றும், விமானத்தின் உயரம், அகலாங்கு, நெட்டாங்கு, தட்பவெட்ப நிலை, அனைத்துக் கருவிகளின் இயங்குநிலை ஆகியவை cockpit voice recorder மற்றும் flight data recorder (famously referred as blackboxes which are either red or yellow in color) ஆகியவற்றில் பதிவாகிக் கொண்டே இருக்கும். அதேபோல ஒவ்வொரு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்திலும் அனைத்து அதிகாரிகளின் உரையாடல்களும் 24 மணி நேரமும் பதிவாகிக் கொண்டே இருக்கும், பணியில் தவறு செய்பவர்கள் தப்புவதற்கு வாய்ப்பே இல்லை.

Operational Control Program எனப்படும் மென்பொருளை உபயோகிக்கும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தாங்கள் விரும்பும் விமானங்களை தேர்வு செய்து கொண்டு வழிநடத்துவார்கள். ஒரு அதிகாரி தேர்வு செய்ததும், மற்றவர்களுக்கு அந்த விமானத்தை தேர்வு செய்த விபரம் கணினியில் தெரிவிக்கப்படும். ஒரு விமானத்தை ஒரே நேரத்தில் இருவர் தேர்வு செய்ய முடியாது. இவர்களுக்கு ஆங்கிலப் புலமை அத்தியாவசியம். விமானிகள் நமிதாவின் தமிழ் போன்ற ஆங்கிலத்தில் பேசினால் கூட புரிந்து கொள்ளும் திறன் இருக்க வேண்டும். ஆங்கிலம் தவிர விமான நிலையம் இருக்கும் இடத்தின் பூர்வீக மொழி விமானி மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி இருவருக்கும் தெரிந்திருந்தால் பேச அனுமதியுண்டு.

கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் விமானிகளின் வேலைக்குத் தேவையான வசதிகளுக்கோ அல்லது கவனத்திற்கோ சிறு பாதிப்பு வந்தாலும் விளைவு, நூற்றுக்கணக்கான உயிர்கள். உதாரணத்திற்கு 1996ல் தில்லி விமான நிலையம் அருகே சவுதி அரேபியாவின் விமானமும், கசகசஸ்தான் விமானமும் நேருக்கு நேர் மோதி 300க்கும் மேற்பட்ட பயணிகள்,விமானிகள் என அனைவரும் மரணமடைந்தனர். பெரும்பாலும் விமானப் போக்குவரத்து ஒரளவுக்கு அதிகம் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கும், மேலெழும்புவதற்கு தனித்தனி வான்பகுதியை உபயோகப்படுத்துவர். இப்போதும் கூட சில சமயங்களில் விமானம் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு எதிர் திசையில் மேலேழும்பி, குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் அப்படியே விமானம் திரும்பி பறப்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் அப்பொதைய கால்கட்டத்தில் தில்லி விமான நிலையம் ஒரே ஒரு வான் பகுதியை தரையிறங்கவும், மேலெழும்பவும் பயன்படுத்தி வந்தது, காரணம் பெரும்பான்மையான வான்பகுதி விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதன் காரணத்தால் மேலெழும்பிய சவுதி அரேபிய விமானமும், தரையிறங்க வந்த கசகசஸ்தான் விமானமும் ஒரே வான் பகுதியில் சந்தித்து கொண்டன.

கட்டுப்பாட்டு அதிகாரிகள் இரண்டு விமானங்களும் 14 மைல்கள் தொலைவில் இருக்கும் போதே நிலைமையை உணர்ந்து இரண்டு விமானிகளுக்கும் தெரியப்படுத்தினார்கள். இதில் ச்வுதி அரேபிய விமானி எச்சரிக்கப்பட்டவுடன் தனது பறக்கும் உயரத்தைக் குறைத்தார், இருந்தாலும் ஆங்கிலம் புரியாத காரணத்தால் கசகச்ஸ்தான் விமானியும் உயரத்தைக் குறைக்க, கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குக் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போனது போல் தெரிந்தும் விபத்தைத் தடுக்க முடியாமல் போனது. எல்லாம் நடந்து முடிந்த பின்னர் இந்தியா வழக்கம் போல விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்து தில்லி விமான நிலையத்தை விரிவு படுத்தி ரேடார்களை நவீனப்படுத்தியது. ரேடார்களை நவீனப் படுத்தியதற்குக் காரணம் பொதுவாக ரேடாரில் Primary & Secondary என்னும் இரு ரேடார் கருவிகள் இருக்கும். இதில் secondary radar தான் விமானங்களின் உயரத்தை துல்லியமாகக் கணிக்கும். விபத்து நடந்த காலம் வரைக்கும் நம்து தில்லி விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வெறும் primary radar மட்டுமே வைத்துக் கொண்டு குத்துமதிப்பாகவே தங்கள் வேலையைச் செய்தது விசாரணையில் அம்பலமாகி விபத்துக்கு அதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.



No comments: