பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தளவில் கப்பல்கள் பெருமளவிற் பயன்படுத்தப்படுவதில்லை.
பெரும்பாலும் கப்பல்கள் சரக்கு மற்றும் எண்ணெய் காவும் பணிகளிலேயே ஈடுபடுத்தப்படுகின்றன. இங்கு நாம் பார்க்கவிருப்பதும் எண்ணெய் மற்றும் சரக்கு காவும் பணிகளில் ஈடுபடும் மற்றும் ஈடுபட்ட பாரிய கப்பல்களில் சிலவற்றைப் பற்றியே.
Seawise Giant
இந்தக் கப்பல் ஜப்பானின் கப்பல் கட்டும் நிறுவனமான Sumitomo Heavy Industries எனும் நிறுவனத்தினால் 1979 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது ஒரு எண்ணெய்க் கப்பலாகும். உலகிலேயே மிகப்பெரிய கப்பலான இக்கப்பல் ஆரம்பத்தில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்காகவே கட்டப்பட்டது. ஆனால் குறித்த அந்த நிறுவனத்தினால், கப்பல் கட்டி முடிக்கப்பட்டதும் அதனை பெற்றுக்கொள்வதற்கு முடியாது போனதன் காரணமாக, கப்பல் கொங்கொங்கைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டது. அந்நிறுவனம் கப்பலின் சுமைக் கொள்ளளவை அதிகரிகத்து மேலும் 87000 மெற்றிக்தொன் சுமை ஏற்றவல்லதாக மீள் வடிவமைப்புச் செய்தது.
இம்மீள் வடிவமைப்பின் பின்னர் கப்பலின் மொத்த சுமைக்கொள்ளளவு 564763 மெற்றிக்தொன்னாக அதிகரித்தது.. 458.45 மீற்றர் நீளமுள்ள இக்கப்பல் சுமையேற்றப்பட்ட நிலையில் 16 கடல்மைல் வேகத்தில் பயணிக்கவல்லது. ஈரான்-ஈராக் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றிச்சென்றுகொண்டிருந்தவேளை ஈராக்கிய வான்படைத் தாக்குதலுக்குள்ளான இக்கப்பல் பாரிய சேதத்திற்குள்ளானது.
தொடர்ந்து திருத்தியடைக்கப்பட்டு சேவையிலீடுபடுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் கைகளிற்கு மாறிய இக்கப்பல், Happy Giantஇ Jahre Viking மற்றும் Knock Nevis என வெவ்வேறு பெயர்களுடன் சேவையிலீடுபட்டது. இறுதியாக 2009 ஆம் ஆண்டு Mont எனும் பெயருடன் தனது இறுதிப்பயணத்தை இந்தியா நோக்கி இக்கப்பல் மேற்கொண்டது. இந்தியாவில் இக்கப்பல் உடைக்கப்பட்டு தனது ஆயுளை முடித்துக்கொண்டது. 36 தொன் நிறையுடைய இக்கப்பலின் நங்கூரம், உடைக்கப்படாது கொங்கொங்கிலுள்ள கடல்சார் அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
Nimitz வகை விமானந்தாங்கி
இது அமெரிக்கக் கடற்படையின் சேவையிலிருக்கும் விமானந்தாங்கிக் கப்பலாகும். அணுசக்தியால் இயக்கப்படுமி் இந்த விமானந்தாங்கிக் கப்பல் 1975 ஆம் ஆண்டு அமெரிக்கக் கடற்படையின் சேவையில் இணைக்கப்பட்டது.
90 வரையான விமானங்களைத் தாங்கிச்செல்லவல்ல இக்கப்பல் வளைகுடா யுத்தம், ஈராக் மற்றும் ஆப்கான் போர் எனப் பல்வேறு களங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இக்கப்பலிலிருந்து, அமெரிக்க வான்படையின் பிரதான அதிசக்திவாய்ந்த தாக்குதல் வான்கலங்களான F/A-18F Super Hornets, F/A-18C Hornets மற்றும் F-14 Tomcat போன்றவற்றை இயக்க முடியும். 320.8 மீற்றர் நீளமுடைய இந்த விமானந்தாங்கிக் கப்பல் 30 கடல்மைல் வேகத்தில் பயணிக்கவல்லது.
இக்கப்பல் அணுசக்தி இயந்திரங்கள் இரண்டினைக் கொண்டுள்ளது. இவ்விரு அணுசக்தி இயந்திரங்களும் கப்பலின் நான்கு சுழலிகளையும் இயக்குகின்றன. இக்கப்பலின், 7.6 மீற்றர் விட்டம் கொண்ட சுழலிகள் ஒவ்வொன்றும் 66000 பவுண்ட் நிறயும் 8.8 மீற்றர் உயரமும் 6.7 மீற்றர் நீளமும் கொண்ட இரண்டு சுக்கான்கள் ஒவ்வொன்றும் 110000 பவுண்ட் நிறையும் உடையவை.
இவற்றுடன் இக்கப்பல், ஏவுகணை எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
RMS குயின் மேரி 2
உலகில் பயன்பாட்டிலுள்ள பாரிய பயணிகள் கப்பல்களில் இதுவும் ஒன்றாகும். 1969 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டிலிருந்த குயின் எலிசபெத் என்ற பயணிகள் கப்பலே இக்கப்பல் கட்டப்படும்வரை உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக இருந்தது.
தற்போது உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் இதுவாகும். 345 மீற்றர் நீளமுடைய இக்கப்பல் 2003 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. பிரான்சில் கட்டப்பட்ட இக்கப்பல் மொத்தம் 17 அடுக்குக்களைக் கொண்டு காணப்படுகின்றது. இவற்றுள் 13 அடுக்குகள் பயணிகள் அடுக்குகள் ஆகும். மொத்தம் 3056 பயணிகளைக் காவிச்செல்லவல்ல இந்தக் கப்பல் 29.62 கடல்மைல் வேகத்தில் பயணிக்கவல்லது. இக்கப்பலில் 1253 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இக்கப்பல் நான்கு டீசல் இயந்திரங்களால் இயக்கப்படுகின்றது. அத்துடன் மேலதிகமாக இரண்டு gas turbine இயந்திரங்களையும் கொண்டுள்ளது. மேலதிக சக்தி தேவைப்படுமிடத்து இந்த இரு இயந்திரங்களும் இயக்கப்படும்.
No comments:
Post a Comment