பழமொழி.....

Thursday, May 30, 2013

சூரியக் கப்பல்...


இறக்கைகள் மற்றும் எரிபொருட்கள் இல்லாமல் வானூர்தியோ அல்லது உலங்கு வானூர்தியோ பறக்க இயலாது. ஆனால் இந்த வானூர்தி இறக்கைகள் மற்றும் எரிபொருட்கள் இல்லாமல் பறக்கக் கூடியது இதன் பெயர் தான் (Solar Ship) சூரியக் கப்பல்.

இந்த வானூர்தியின் மேற்ப்பகுதியில் ஹீலியம் (He) வாயு நிரப்பப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் தான் சூரியக் கப்பல் மேலே மிதந்து பறக்கிறது. ஹீலியம் வாயு அடங்கியது என்பதால் அது வடிவில் பெரியதாகவும் இருக்கிறது சூரியக் கப்பலின் மேற்புறத்தில் நிறைய சூரிய சக்திப் பலகைகள் (Solar panels) பொருத்தப்பட்டுள்ளன .இவை மின்சாரத்தை அளிக்கும். சூரியக் கப்பல் வானில் முன்னோக்கிச் செல்வதற்கு வலு கொடுக்கும் இயந்திரங்கள் இயங்க இந்த மின்சாரம் உதவும். சூரியக் கப்பலில் குளிர் சாதனப்பெட்டி இருக்கும். விசேஷ வகை மருந்துகளை இதில் எடுத்துச் செல்லலாம்.


சூரியக் கப்பல் தரையிலிருந்து கிளம்பவோ தரை இறங்கவோ நீண்ட ஓடுபாதை தேவையில்லை. பள்ளிக்கூட சிறிய மைதானம் அளவுக்குத் திறந்த வெளி இருந்தால் போதும்.சிறியது, நடுத்தரம், பெரியது என மூன்று ரகங்களில் இவை தயாரிக்கப்படும். சிறிய வானூர்தி ஒரு தொன் பொருட்களை ஏற்றிக்கொண்டு, அதிகபட்சம் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியது. பெரிய வானூர்தியில் 30 தொன் அளவுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லலாம்.


பூகம்பத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்ல சூரியக் கப்பல் ஏற்றதாக விளங்கும். அத்துடன் தகுந்த சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு வானூர்திகளோ அல்லது உலங்கு வானூர்திகளோ போய் இறங்க முடியாத பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பவும் நிபுணர்கள் செல்லவும் இந்த வாகனம் உதவியாக இருக்கும்.

கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சூரியக் கப்பலை உருவாக்கியுள்ளது. இதன் நிறுவனரான ஜே காட்சால் (Jay Godsall) ஆப்பிரிக்காவில் மருந்து விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இப்படியான ஒரு வானூர்தியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குது தோன்றியது. பல முயற்சிகளுக்குப் பிறகு அவரது கனவு நனவாகியது.


சூரியக் கப்பல் சோதனை ஓட்டமாகப் பல தடவைகள் பறந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் இணையதளம்  http://solarship.com





Wednesday, May 29, 2013

உடற் தரையிறக்கம்... (belly landing)


வானூர்தியின் "உடற் தரையிறக்கம்" (belly landing or gear-up landing) என்பது வானூர்தியின் உடலால் தரையிறங்குவது அதாவது வானூர்தியின் வயிற்றுப்பகுதியை (கீழ்ப்பகுதி) ஓடுபாதையில் (Run Way) தேய்த்துக்கொண்டு தரையிறக்குவதாகும்.

‘belly landing’ என்பது மிகவும் ஆபத்தான நடைமுறை. ஆனால் வானோடிக்கு வேறு வழியில்லை என்றால் தரையிறங்க இதைவிட வேறு வழியுமில்லை. இப்படி தரையிறங்குவதன் காரணம் வானூர்தியின் சில்லுகள் (undercarriage or landing gear) வெளியே வராமல் வானூர்திக்கு உள்ளே சிக்கியிருப்பது தான்.



இதில் என்ன பயமென்றால்,

  1. தரையிறங்கிய வானூர்தி ஓடு பாதையில் உராய்வதால் தீப்பற்றிக் கொள்ளலாம். 
  2. வானூர்தி ஒரே மட்டத்தில் தரையில் தொடாவிட்டால் கவிழ்ந்து போகலாம். 
  3. காற்று வேகமாக அடித்தால் வானூர்தியின் இறக்கை தரையில் மோதி உடையலாம் (இறக்கையில் தான் எரிபொருள் சேமிப்பகம் உள்ளது) 

belly landing மூலம் தரையிறங்கும் போது,
  1. வானூர்தியில் இறங்குவதற்கான எரிபொருளுடன் மட்டும் தரையிறக்க வேண்டும்.
  2. கட்டுப்பாட்டு கோபுரத்துடன் துல்லியமான தொடர்பை பேணவேண்டும்.
  3.  வானூர்தி நிலையத்தில் Runway மற்றும் Taxiway எந்தவொரு வானூர்தியும் இல்லாது பார்த்துக் கொள்ளப்படவேண்டும்.
  4. தீயணைப்பு வண்டிகள் மற்றும் மருத்துவ வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளப்படவேண்டும.
  5. வானோடி மிகத் திறமையுடன் வேகம் மற்றும் உயரத்தைக் கணித்து ஓடுபாதையில் தரையிறக்க வேண்டும்.
  6. ஓடுபாதையின் மீதான வானூர்தியின் தொடுகை மிக முக்கியம். அதில் தவறு ஏற்பட்டால் வானூர்தி சறுக்கி விபத்து ஏற்படும்.

belly landing தரையிறக்க நிலைமையை ஏற்ப்படுத்தும் காரணிகள், 
  1. வானோடிகளின் தவறுகள். (வானோடிகள் அறிவித்தல் பட்டியல் படி(Checklist) செயற்ப்படமை)
  2. காலநிலை. (வானூர்தியின் landing gears அமைப்பின் உள்ளே பனிக்கட்டிகள் உருவாகி landing gears செயற்படாமல் இருத்தல்)
  3. இயந்திரக் கோளாறு. (வானூர்தியின் landing gears அமைப்பைக் கட்டுப்படுத்தும் electric motors (மின் இயந்திரங்கள்) or hydraulic actuators (நீரியல் முனைப்பிகள்) பழுதடைதல் அல்லது செயற்ப்படாமை)
ஆனால் A-10 Thunderbolt II போன்ற சில வானூதி வகைகள் பாதுகாப்பாக
belly landing மூலம் தரையிறக்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 


Thursday, May 9, 2013

Solar Eagle..


ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பறக்கும் வகையில் சூரியசக்தி உளவு வானூர்தி ஒன்றை போயிங் (Boing) நிறுவனம் தயார் செய்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் இந்த உளவு வானூர்தியை தயாரிக்க அமெரிக்க இராணுவம் போயிங் நிறுவனத்திடம் அனுமதி வழங்கியது.
 
சோலார் ஈகிள் (Solar Eagle) ன்ற பெயரில் உளவு வானூர்தியைத் தயாரித்துள்ள போயிங் நிறுவனம் அதைப் பரிசோதித்து வருகிறது. இந்த வானூர்தி நிற்காமல் விண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பறக்குமாம்.

இந்த வானூர்தியின் இறக்கையில் உள்ள சூரியத் தகடுகள் (Solar Impulse) பகல் நேரத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும். இதன் மூலம் வானூர்தியின் மின்னியல் இயந்திரங்கள் (Electric Motors) மற்றும் உந்துகணைகள் (Propellers) இயங்கும். வானில் மிக உயரத்தில் தொடர்ச்சியாக பறந்து படங்கள் மற்றும் உளவுத் தகவல்களைத் தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த வானூர்தி அனுப்பிக் கொண்டிருக்கும்.

முதல் முறையாக சோதனை ஓட்டத்துக்கு விடப்படும் வானூர்தி 30 நாள் தொடர்ந்து பறக்கவுள்ளது. இந்த சோலார் ஈகிள் வானூர்தி 2014ம் ஆண்டு, அமெரிக்க ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.