பழமொழி.....

Thursday, May 30, 2013

சூரியக் கப்பல்...


இறக்கைகள் மற்றும் எரிபொருட்கள் இல்லாமல் வானூர்தியோ அல்லது உலங்கு வானூர்தியோ பறக்க இயலாது. ஆனால் இந்த வானூர்தி இறக்கைகள் மற்றும் எரிபொருட்கள் இல்லாமல் பறக்கக் கூடியது இதன் பெயர் தான் (Solar Ship) சூரியக் கப்பல்.

இந்த வானூர்தியின் மேற்ப்பகுதியில் ஹீலியம் (He) வாயு நிரப்பப்பட்டுள்ளது. இந்த காரணத்தால் தான் சூரியக் கப்பல் மேலே மிதந்து பறக்கிறது. ஹீலியம் வாயு அடங்கியது என்பதால் அது வடிவில் பெரியதாகவும் இருக்கிறது சூரியக் கப்பலின் மேற்புறத்தில் நிறைய சூரிய சக்திப் பலகைகள் (Solar panels) பொருத்தப்பட்டுள்ளன .இவை மின்சாரத்தை அளிக்கும். சூரியக் கப்பல் வானில் முன்னோக்கிச் செல்வதற்கு வலு கொடுக்கும் இயந்திரங்கள் இயங்க இந்த மின்சாரம் உதவும். சூரியக் கப்பலில் குளிர் சாதனப்பெட்டி இருக்கும். விசேஷ வகை மருந்துகளை இதில் எடுத்துச் செல்லலாம்.


சூரியக் கப்பல் தரையிலிருந்து கிளம்பவோ தரை இறங்கவோ நீண்ட ஓடுபாதை தேவையில்லை. பள்ளிக்கூட சிறிய மைதானம் அளவுக்குத் திறந்த வெளி இருந்தால் போதும்.சிறியது, நடுத்தரம், பெரியது என மூன்று ரகங்களில் இவை தயாரிக்கப்படும். சிறிய வானூர்தி ஒரு தொன் பொருட்களை ஏற்றிக்கொண்டு, அதிகபட்சம் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடியது. பெரிய வானூர்தியில் 30 தொன் அளவுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லலாம்.


பூகம்பத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்ல சூரியக் கப்பல் ஏற்றதாக விளங்கும். அத்துடன் தகுந்த சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு வானூர்திகளோ அல்லது உலங்கு வானூர்திகளோ போய் இறங்க முடியாத பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பவும் நிபுணர்கள் செல்லவும் இந்த வாகனம் உதவியாக இருக்கும்.

கனடாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சூரியக் கப்பலை உருவாக்கியுள்ளது. இதன் நிறுவனரான ஜே காட்சால் (Jay Godsall) ஆப்பிரிக்காவில் மருந்து விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இப்படியான ஒரு வானூர்தியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குது தோன்றியது. பல முயற்சிகளுக்குப் பிறகு அவரது கனவு நனவாகியது.


சூரியக் கப்பல் சோதனை ஓட்டமாகப் பல தடவைகள் பறந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் இணையதளம்  http://solarship.com





No comments: