பழமொழி.....

Saturday, November 9, 2013

RQ-4 GLOBAL HAWK....


எதிரி நாடுகளை வேவு பார்ப்பது என்பது பாதுகாப்பு உத்திகளுள் மிக முக்கியமான ஒன்று. ஒற்றர்கள் மூலமாக மட்டுமே எல்லாவற்றையும் வேவு பார்த்துவிடமுடியாது. ஒற்றர்கள் நுழைய முடியாத இடத்திலும் தொழில்நுட்பம் நுழைந்து விடுகிறது.

உலக நாடுகள் அனைத்தையும் தனது ஆயுத பலத்தால் கட்டி வைத்திருக்கும் அமெரிக்காவின் அதி நவீன கண்காணிப்பு வானூர்திகளுள் ஒன்று RQ-4 GLOBAL HAWK எனப்படும் இந்த ஆளில்லா வானூர்தி. பயணிகள் வானூர்திகளைக் காட்டிலும் 2 மடங்கு உயரத்தில் பறந்தபடி, ஒரே நாளில் சுமார் 40000 சதுர மைல் பரப்பைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கொண்டது இந்த வானூர்தி.


ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் உலகின் மேற்பரப்பில் பாதியைச் சுற்றி வந்துவிடலாம். எவ்வளவு அடர்த்தியான மேக மூட்டம் இருந்தாலும் பூமியில் நடப்பவற்றைத் கண்காணிக்கும் திறன் இந்த ஆளில்லா வானூர்திக்கு உண்டு. இந்தத் திறன்கள் காரணமாக, எதிரி நாட்டின் வான் எல்லைக்குள் செல்லாமலேயே அந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் நேரலையாக அமெரிக்காவில் உள்ள பென்டகனுக்கு அனுப்பிவிடும்.

இந்த வானூர்தியின் உயரம் 15 அடி, நீளம் 48 அடி. சிறகுப் பகுதியின் அகலம் 132 அடி. இந்த வானூர்தியில் 1360 கிலோ எடை கொண்ட மின்னணுக் கருவிகளை எடுத்துச் செல்ல முடியும். இந்த வானூர்தி பற்றிய முக்கியமான பல தகவல்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.


அண்மைக்கால மதிப்புப்படி, ஒரு RQ-4 GLOBAL HAWK வானூர்தியைத் தயாரிப்பதற்கு ஆகும் செலவு மட்டும் சுமார் 5000 கோடி ரூபாய். அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படை ஆகியவை இது போன்ற 45 வானூர்திகளைப் பயன்படுத்தி வருகின்றன.

போர்க்காலங்கள், ஆய்வுப் பணி, உளவு பார்ப்பது தவிர, அணுஉலை வெடிப்பு, கலிபோர்னியா காட்டுத் தீ உள்ளிட்ட பேரிடர்க் காலங்களிலும் இந்த வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் நேட்டோ நாடுகள் சார்பில் இதுபோன்ற 5 வானூர்திகள் வாங்கப்பட்டுள்ளன.


தற்போது தென் கொரியாவும் ஒரு வானூர்தியை வாங்க முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதையும் ஒரே நேரத்தில் பார்க்கும் அமெரிக்காவின் கண்கள் என்றே இந்த ஆளில்லா வானூர்திகளைக் கூறலாம்.



No comments: