பழமொழி.....

Monday, May 30, 2011

செயற்கை கோள்..




பெரிய அமைப்பு அல்லது தொகுப்பை, தொடர்ந்து சுற்றிவரும் ஒன்றிணைக்கப்பட்ட சிறிய தொகுதி அல்லது பொருளுக்கு பெயர்தான் விண்கோள். இது இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கை விண்கோள், மற்றொன்று செயற்கை விண்கோள். இயற்கை விண்கோள்களுக்கு உதாரணம், சூரியனைச் சுற்றி வரக்கூடிய அனைத்து கோள்களும். பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரனையும் விண்கோள் என்றுதான் அழைக்கப்படும். செயற்கை விண்கோள் என்பது மனிதனால் வடிவமைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட செயற்கை சாதனமாகும்.


செயற்கை விண்கோள்கள்












வானில் எய்தப்படுகின்ற எப்பொருளாக இருந்தாலும், புவியின் ஈர்ப்பு சக்தியின் காரணமாக அவைகள் பூமிக்கு திரும்ப வந்துவிடும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் விண்கோள்கள் புவியின் ஈர்ப்பு சக்தியைக் கணக்கிட்டு, பூமிக்கு திரும்ப வராமலும் அதே நேரம் பூமியின் இழு சக்தியின் நீள்வட்டப் பாதையின் உள்ளிருந்தே பூமியை சுற்றிவரும் தொலைவிற்குள் செலுத்தப்படுகின்றன. குறைந்தப் பட்சம் 200 கி.மீ தொலைவிலிருந்து அதிகபட்சமாக 35,000 கி.மீ தொலைவிற்குள்ளேயே பெரும்பாலும் எல்லாவிதமான செயற்கைக் கொள்களும் சுற்றிவரச் செலுத்தப் படுகின்றன.

விண்கோள்களை புவியின் ஈர்ப்பு சக்தியைத் தாண்டி செலுத்துவதற்கு தேவைப்படும் சாதனத்தின் பெயர் ராக்கெட் அல்லது ஏவுகணை என்று பெயர். இது பொதுவாக விண்கலங்களை அல்லது செயற்கை கோள்களை தேவையான உயரத்திற்கு சுமந்துச் சென்று வானில் விட்டுவிடும். ஏவுகணைகள் உயரத்திற்கு ஏற்றார்போல் பலவிதமான அடுக்குகளாக செயல்படும். உதாரணத்திற்கு மூன்று அல்லது அதற்கு அதிகமான ஏவுகணைகள் செயற்கைகோளை சுமந்து கொண்டு பூமியிலிருந்து புறப்படும். ஒவ்வொரு ஏவுகணையும் அதனுள் செலுத்தப்பட்ட எரிபொருள் தீரும் வரை விண்கலத்தை சுமந்து சென்று கொண்டிருக்கும். முதலாவது ஏவுகணையின் எரிபொருள் தீர்ந்துவிடும் பட்சத்தில் இரண்டாவது ஏவுகணை செயல்பட ஆரம்பித்துவிடும். இரண்டாவது ஏவுகணையின் எரிபொருள் தீரும்பொழுது, மூன்றாவது ஏவுகணை செயல்படத் தொடங்கிவிடும். ஒவ்வொரு ஏவுகனையும், ஒன்று முடிவுறுவதற்கு முன்னதாக தானியங்கி முறையில் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட உயரத்திற்கு விண்கோளை எடுத்துச் சென்று விட்டுவிடும்.

ஏவுகணைகள் வானில் அதிக தொலைவு செல்வதற்கு ஏதுவாக இரண்டுவிதமான எரிபொருள்களை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். ஒன்று நீரியலானது 
(liquid)மற்றொன்று திடமானது (solid). நீரியலில் ஹைட்ரஜன், கெரசின் மற்றும் ஆக்சிஜன் மூன்றும் பயன்படுத்தப்படுகின்றன. திட எரிபொருளில் அலுமினிய மாவும், அம்மோனியம் நைட்ரேட் அல்லது அம்மோனியம் பெர்குலேரேட் என்ற வேதியியல் பொருட்களை பயன்படுத்துகின்றனர். திட எரிபொருட்களே ஆபத்தில்லாமல் ஏவுகணையை செலுத்துவதற்கு சிறந்தது.

விண்கோள்கள் பூமியைச் சுற்றி வருதல்

விண்கோள்கள் இரண்டு விதமாக பூமியைச் சுற்றி வருகின்றன. ஒன்று ஈக்குவேட்டர் ஆர்பிட் என்று அழைக்கப்படும் கிழக்கு மற்றும் மேற்கு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருபவை. இன்னொன்று போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வடக்கு மற்றும் தெற்கு சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து சுற்றிவரும்.

ஈக்குவேட்டர் பாதையில் சுற்றிவரும் விண்கோள்கள் 36,000 கி.மீ உயரம் வரை செலுத்தப்படும். ஈக்குவேட்டர் விண்கோள்கள் சற்று அதிகமான உயரத்தில் பூமியை ஒரு சுற்றுவருவதற்கு ஏறக்குறைய 24 மணிநேரம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு தகுந்தார்போல் உள்ள வேகத்திலும் உயரத்திலும் சுற்றிவரச் செய்யப்படும். இதன் உயரம் ஏறக்குறைய 35,900 கி.மீ. தெலைவாகும். இப்படி சுற்றிவரும் விண்கோளை ஜியோஸ்டேஷனரி சேட்டிலைட் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். ஒருவகையில் இது பூமியைச் சுற்றிவரும் விண்கோளைப் போன்றில்லாமல் ஒரு குறிப்பிட்ட பூமியின் மேல்பரப்பில் எப்போதும் நின்று கொண்டிருப்பதுபோல் தோன்றும். இவ்வாறு ஒரே நிலையில் நிற்பதுபோல் தோன்றும் விண்கோள்களின் உதவியால்தான் தொலை தொடர்பு மற்றும் தொலைகாட்சி சாதனங்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு ஒளிபரப்பப்படுவதும் மற்றும் பெறுவதுமான செயல்களை செய்கின்றன. மேலும் இந்தவகை கோள்களே புயல், இயற்கை சீரழிவுகளுக்கான எச்சரிக்கைகள் செய்யவும், வானிலை ஆராய்ச்சிகளுக்கும், பூமியின் நிலவளங்கள், கனிமங்கள் மற்றும் நீர் நிலைகளை அறிந்துக் கொள்ளவும் உதவுகின்றன.

போலார் ஆர்பிட் என்று அழைக்கப்படும் வட்டப் பாதையில் சுற்றிவரும் செயற்கை கோள்கள் பூமிக்கு அருகாமையிலேயே சுற்றிவரும் உயரத்தில் அதாவது 200 கி.மீ தொலைவில் மட்டுமே செலுத்தப்படும். இவைகள் பெரும்பாலும் பூமியை ஒரு சுற்றுவர இரண்டு மணி நேரமே எடுத்துக் கொள்ளும், அது மட்டுமல்லாமல் அதிகமான இடங்களையும் சுற்றி வந்துவிடும். இவ்வகையான செயற்கை கோள்கள் பெரும்பாலும் உளவு பார்க்கும் பணிக்காகவே செலுத்தப்படும். வசதிமிக்க நாடுகள் இது போன்ற செயற்கை கோள்களை எதிரி நாடுகள் மற்றும் தனக்குப் பிடிக்காத நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார செயல்பாடுகளை உளவு பார்க்கும் நோக்கத்துடன் மட்டுமே வானில் செலுத்தப்படுகின்றன. போலார் ஆர்பிட்டில் சுற்றிவரும் கோள்கள் சூரிய வெளிச்சத்தைக் கணக்கில் கொண்டு பகல் முழுக்க தான் சுற்றிவரும் பகுதியை ஸ்கேனிங் செய்தபடி நிலக்கட்டுப்பாட்டுத் தளத்தினுடன் தொடர்பு கொண்டு புகைப்படங்களையும், இன்னும் பிற ரேடார் சமிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கும். போர்க்காலங்களில் இந்த செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள் மிகவும் அவசியமானதாக இருக்கும்.



No comments: