பழமொழி.....

Saturday, March 16, 2013

வானூர்தி விபத்து -02

வானூர்தி விபத்துக்கான காலநிலை தவிர்த்த வேறு காரணிகள்..........
  1. பறவைகள்.
  2. தூரப்புலமானியின் (Redar) கண்காணிப்பிலிருந்து காணாமல்போதல்.
  3. மலிந்த விலை (Budget Carrier) வானூர்திப் பயணங்கள்.
  4. மனிதத் தவறுகள்.
  5. சமர்கள். (Wars)

                                                        பறவைகள்

சாதாரணமாக ஒரு கிலோ எடையுள்ள பறவைகள் வானூர்திகளில் மோதுவதால் வானூர்திகள் விபத்துக்களைச் சந்திக்க நேர்கின்றன. வானூர்தியின் இயந்திரப் பகுதியை நோக்கி அதிவேகமாகக் காற்று ஈர்க்கப்படும் நேரத்தில் அப்பகுதியில் பறந்துகொண்டிருக்கும் பறவைகளும் ஈர்க்கப்படுகின்றன. பறவைகள் குறித்த இயந்திர அலகுகளில் மோதுவதால் இயந்திரத்தின் உற்பகுதிக்குள் இழுக்கப்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டு வானூர்தி விபத்துக்குள்ளாகலாம்.

1988 முதல் உலகம் முழுதும் வானூர்திகளில் பறவைகள் மோதியதன் விளைவாக 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2007 ஆம் ஆண்டில் வானூர்திகள் பறக்க ஆரம்பிக்கும்போது அல்லது இறங்கும்போது 5000 இற்கும் அதிகமான தடவைகள் பறவைகள் மோதிய நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு 155 பேருடன் பயணித்த அமெரிக்க வானூர்தி ஒன்றின் இயந்திரத்தில் பறவையொன்று சிக்கியதால் அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்காக வானூர்தி உடனடியாக நியுயோர்க் நதியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆய்வுக் குழு இப்பறவைகளை இறக்கையுள்ள தோட்டாக்கள் என வர்ணிக்கிறது. தரையிலிருந்து சில ஆயிரம் அடி உயரம் வரையான பகுதிகளிலேயே இத்தகைய அபாயம் காணப்படுகின்றது.


                       தூரப்புலமானியின் (Redar) கண்காணிப்பிலிருந்து                
                                                காணாமல்போதல்

வானூர்திகள் பறக்கும்போது அவை தூரப்புலமானியின் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அதன்போதுதான் வானூர்தி செல்லும் பாதை பற்றியும் வரும் தடங்கள் பற்றியும் காலநிலை குறித்தும் எச்சரிக்க முடியும். தற்செயலாக தூரப்புலமானியின் கண்காணிப்பிலிருந்து வானூர்தி மறைந்தால் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். சமுத்திரங்களின் மீது பறக்கும் வானூர்திகளை தூரப்புலமானியால் அவதானிப்பது கடினம்.

அட்லான்டிக் சமுத்திரங்களைக் கடந்துவரும் பல வானூர்திகள் சிலநேரத்தில் தூரப்புலமானியின் கண்காணிப்பிலிருந்து விடுபடுவதால் எதிர் திசையிலிருந்து வரும் வானூர்திகளுடன், வர்த்தக வானூர்திகள் மோதி விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்களும் உள்ளன. சமுத்திரங்களின் மீது பறக்கும் வானூர்திகள் மோதிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு வானூர்திற்கும் 80 கடல்மைல் இடைவெளி இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.


                   மலிந்த விலை (Budget Carrier) வானூர்திப் பயணங்கள்

மலிந்த விலையில் வானூர்திப் பயணங்களை மேற்கொள்ளும் போது பல அசௌகரியங்களை எதிர்நோக்கவேண்டி வருகின்றது. நேரம் தவறாமை என்ற ஒழுங்குகள் இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை. பயணிகளை அதிகம் ஏற்றிச் செல்வதற்காக ஆசனங்கள் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். இங்கு விடப்படும் தவறுகள் காரணமாக கூடுதலான அளவு விபத்துக்கள் நிகழ்வது வழமையாகிவிட்டது.

                                              மனிதத் தவறுகள்

கட்டுப்பாட்டுக் கோபுரம் (Control Tower) கொடுக்கும் அறிவுறுத்தல்களை வானோடிகள் தவிர்ப்பதால் விபத்துக்கள் நிகழ்கின்றன. கட்டுப்பாட்டாளர்களின் தவறுகள், மாசடைந்த எரிபொருள், வானூர்திகள் முறையாகப் பராமரிக்கப்படாமை, அறிவித்தல்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றமை என்பன காரணமாகவும் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்கின்றன.

அத்துடன் பயணிகள் வானூர்தி பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் இருப்பதும் வானூர்தி விபத்துக்களுக்கும் மற்றும் விபத்துக்களின்போது நேரும் உயிர்ச்சேதங்களுக்கும் காரணமாகும். ஆசனப் பட்டிகளை அணியாமல் இருப்பது, இருக்கைகளை விட்டு எழுந்து விமானத்தில் உலாவுவது, போன்ற அநாவசியமான செயல்களால் சேதங்கள் அதிகளவில் நிகழ்கின்றன.


                                                                    சமர்கள்(Wars)

வானூர்திஙகள் தமது நாட்டு வான் பரப்பில் பறக்கும்போது சுட்டுவீழ்த்தப்படுவதாலும், வானூர்திக் கடத்தல்கள் மற்றும் குண்டுவைப்புகளாலும் சேதத்துக்குள்ளாகின்றன.

1988 ஜுலை 3ம் திகதி ஈரானியப் பயணிகள் வானூர்தி ஒன்று பாரசீக வளைகுடாவுக்கு மேலாகச் சென்றுகொண்டிருந்தபோது அமெரிக்கக் கடற்படைக்கலத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதனால் 290 பயணிகள் கொல்லப்பட்டனர். இதே ஆண்டில் அமெரிக்க வானூர்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து தரையில் வீழ்ந்ததால் தரையிலிருந்த 11 பேர் மற்றும் பயணிகள் 270 பேரும் உயிரிழந்தனர்.

No comments: