பழமொழி.....

Wednesday, March 2, 2011

Antonov An-225 வானூர்தி..



Antonov என்று சுருக்கமாக அழைக்கப்படும் Antonov Aeronautical Scientist/Technical Complex விமான உற்பத்தி நிறுவனமானது உக்ரெய்னைத் தலைமையகமாகக் கொண்டு 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட Antonov An-225 விமானமே உலகின் மிகப்பெரிய விமானமாகும். இவ்விமானம் சோவியத் ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்காக, விண்ணோடங்களை இடம்மாற்றல் மற்றும் விண்ணோடங்களுக்கான உந்துகணைகளை ஏற்றிச்செல்லல் போன்ற செயற்பாடுகளிற் பயன்படுத்தப்படுகின்றது. 1988 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஒரேயொரு விமானமே Antonov நிறுவனத்தினால் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.
பொருட்களை ஏற்றுவதனையே பிரதான நோக்காகக் கொண்டு உருாக்கப்பட்ட இவ்விமானம், விமானத்தின் உட்பகுதியில் 250000 கிலோக்கிராம் நிறையையோ அல்லது அதன் உடற்பகுதியின் மேற்புறத்தே 200000 கிலோக்கிராம் நிறையையோ காவிச்செல்ல வல்லது.
An-225 விமானமானது அதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட விமானமான An-124 விமானத்தின்220px-Buran_On_Antonov225அடியொற்றியே தயாரிக்கப்பட்டது. மேலதிக சுமை ஏற்றத்தக்கதாக விமானத்தின் உடற்பாகம் மற்றும் இறக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன் மேலதிகமான இரு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு ஆறு இயந்திரங்களைக்கொண்ட விமானமாக உருவாக்கப்பட்டது. அத்துடன் அதிக எடையைத் தாங்கவல்லதாக, பிரதான சக்கரத்தொகுதி (landing gear) 32 சக்கரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டதுடன் உடற்பகுதியின் மேற்புறத்தில் சுமையேற்றிச்செல்ல வல்லதாகக் காணப்படுவதன் காரணமாக, விமானத்தின் காற்றியக்க நிலையைச் சமன்செய்வதற்காக இரட்டை நிலைக்குத்துச் சமநிலைச் செட்டைகள் (twin vertical stabilizer) கொண்டதாக இவ்விமானம் உருவாக்கப்பட்டது. இந்த விமானம் An-124 விமானத்தினை அடியொற்றி உருவாக்கப்பட்ட போதிலும், முன்னணி இராணுவ நிலைகளுக்கான விநியோகத்திற்கோ அல்லது குறுந்தூரப் பறப்புக்களுக்கோ பயன்படுத்தப்படுவதில்லை.
An-225 விமானத்தின் மேலெழும் நிறையானது (takeoff weight), அண்மையில் பயன்பாட்டிற்கு வந்த Airbus A-380 உள்ளடங்கலாக அனைத்து விமானங்களிலும் அதிகமாகும்.
இவ்வகை விமானம் உலகிலேயே ஒன்றேயொன்றுதான் காணப்படுகின்றது. இரண்டாவது விமானத்தின் உற்பத்திச் செயற்பாடுகள் 1980 களின் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விரண்டாவது விமானம் முதல் விமானத்தின் வடிவத்திலிருந்து சிறிது மாறுபட்டுக் காணப்பட்டது. ஆயினும் சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து இரண்டாவது விமானத்தின் உற்பத்திச் செயற்பாடுகள் யாவும் இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு அந்த இரண்டாவது விமானத்தின் உற்பத்திப் பணியினைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டளவில் அதனை முடிப்பதாகத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேறவில்லை.
1989 ஆம் ஆண்டில் Antonov Design Bureau எனப்படும் சோவியத்தின் விமான உற்பத்தி நிறுவனமானது Antonov Airline என்ற பெயரில் விமான சேவை நிறுவனமொன்றை ஆரம்பித்தது. இங்கிலாந்தின் Air Foyle Heavylift நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்ட இவ்விமான சேவை நிறுவனம் பாரியளவில் சரக்குகளை (cargo) இடம்நகர்த்தும் சேவையினை பிரதானமானதாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்திலேயே சோவியத் ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட விண்ணோடம் தயாரிக்கும் திட்டமும் அதன் இறுதிப் பகுதியில் இருந்தது. எனவே, அவ்விண்ணோடத்தினை இடம் நகர்த்தும் பணிக்காக Antonov Airlines விமான சேவை நிறுவனத்தினால் இயக்கப்பட்ட An-225 விமானத்தினைப் பயன்படுத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டது.
220px-An-225_D-18T2001 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாளன்று An-225 விமானம் Interstate Aviation Committee Aviation Register இடமிருந்து அதற்கான சாண்றிதழைப் பெற்றுக்கொண்டது. 2001 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில், An-225 விமானமானது 253.82 தொன் நிறையுடன் 6600 அடி உயரத்தில், மணிக்கு 763.2 கிலோமீற்றர் வேகத்தில் 1000 கிலோமீற்றர்கள் தூரமுடைய ஒரு சுற்றுப்பாதையில் பறந்து அதன் திறனை நிரூபித்து சாதனை படைத்தது.
Antonov An-225 விமானத்தின் வருகையைத் தொடர்ந்து, ஒருகாலத்தில் அவசரகால நிலைமையின்போது சாத்தியமற்றதாகக் காணப்பட்ட பல செயற்பாடுகள் சாத்தியமாகின. இவ்விமானத்தின் உதவியுடன் அவசரகால மீட்புப்பணியாளர்களுக்குத் தேவையான பிறநாடுகளால் வளங்கப்படும் பாரிய மின்பிறப்பாக்கிகள் போன்ற பொருட்கள்கூட உடனுக்குடன் வான்வழியான அனுப்பிவைக்கப்பட்டன.
An-225 விமானம், கனேடிய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களினால் மத்திய கிழக்கிலுள்ள அவர்களது படையினருக்கான விநியோக நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

No comments: