பழமொழி.....

Wednesday, March 9, 2011

அப்படி என்ன இருக்கு அந்த கறுப்புப் பெட்டியில்?



பொதுவாக, விமான விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களில் தேடப்படும் பொருள் கறுப்புப் பெட்டி.
கருப்புப் பெட்டி என்பது உண்மையில் ஆரஞ்சு நிறத்திலான பெட்டியாகும். விபத்து நடந்த பிறகு தேடிக் கண்டுபிடிக்க வசதியாக ஆரஞ்சு நிற பெயிண்ட் அடிக்கிறார்கள்.
இது விமானத்தின் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டிருக்கும். தீ, நீர் உள்பட எதனாலும் அவ்வளவு சீ்க்கிரத்தில் பாதிக்கப்படாத அளவுக்கு எஃகுத்தகடுகளாலான கவசம் கொண்டது. கடலுக்கடியில் கிடந்தாலும் அதைக் கண்டுபிடிக்க உதவும் டிரான்ஸ்மிட்டர்கள் அதில் உண்டு.
இதில் இரண்டு பாகங்கள் உண்டு. ஒன்று காக்பிட்வாய்ஸ் ரெக்கார்டர் (சி.வி.ஆர்.). இதில் விமானியின் அறையில் நடக்கும் பேச்சுக்கள் பதிவாகும். விமானிகளிடையிலான உரையாடல், விமானிகளுக்கும் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் இதில் பதிவாகும்.
இன்னொரு பகுதி டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் (எப்.டி.ஆர்.). இதில் விமானம் கிளம்பியது முதல் தரையிறங்கியது வரையிலான அத்தனை தொழில்நுட்ப விவகாரங்களும் பதிவாகும். விமானம் எந்த நொடியில் எந்த வேகத்தில் பறந்தது, எந்த உயரத்தில் பறந்தது, என்ஜின் உள்பட விமானத்தின் அனைத்துக் கருவிகளின் செயல்பாடுகள், அதில ஏற்பட்ட குறைபாடுகள் என விமானத்தின் அனைத்து விவரங்களும் பதிவாகும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாலேயே விபத்து நடந்த உடனேயே, விமானத்தின் கறுப்பு பெட்டியை தீவிரமாக தேடுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள விமான ஆராய்ச்சி ஆய்வு கூட விஞ்ஞானி டேவிட் வாரன் என்பவர், கடந்த 1953-ம் ஆண்டு கறுப்புப் பெட்டியை கண்டு பிடித்தார்.
உலகிலேயே விமானத்தில் கறுப்பு பெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது, ஆஸ்திரேலியதான். 1960-ம் ஆண்டில் இந்த கறுப்புப் பெட்டி பொருத்தும் முறை அமலுக்கு வந்தது. முன்பெல்லாம் இந்த பெட்டிக்குள் ஒலிப்பதிவு செய்ய மின்காந்த ஒலி நாடாக்களைப் பயன்படுத்தி வந்தனர். இப்போது கம்ப்யூட்டர் சிப்களைப் பயன்படுத்துகின்றனர்.
பல பெரிய விமான விபத்துக்களின் உண்மையான காரணத்தை இந்தக் கறுப்புப் பெட்டிகளே வெளிப்படுத்தியுள்ளன.
குறிப்பு: மங்களூரில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டியின் பிளைட் ரெகார்டர் கருவி, விபத்து நடந்து முடிந்து 3 நாட்களாகியும் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments: