பழமொழி.....

Tuesday, March 1, 2011

sonic cruisers....



தொலைதூரத்திற்கான தொடர்ச்சியான பயணிகள் விமானப் பயணமென்பது தற்போது பயன்பாட்டிலிருக்கும் போக்குவரத்து விமானங்களினால் சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது. உதாரணமாக, அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கான விமானப்பயணம் இடைத்தரிப்பு இல்லாமல் சாத்தியமில்லை. இக்குறைபாடுகளை நீக்கும்விதமான அறிவிப்பு ஒன்று Boeing விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
ஆம், இவ்வாறான குறைகளற்று நெடுந்தூரப் பயணங்களை குறுகிய நேரத்தில் மேற்கொள்ளவல்ல sonic cruisers விமானத்தின் வடிவம் 2001 மார்ச் மாதத்தில் இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. கொன்கோட் விமானத்தைவிட இவ்விமானத்தின் வேகம் குறைவாகக் காணப்பட்ட போதிலும், கொன்கோட் விமானத்தினால் எட்டமுடியாத பறப்புத்தூரத்தை இவ்விமானம் எட்டவல்லதாகக் காணப்படும் என்றது அவ்வறிவிப்பு.
ஐரோப்பாவின் Airbus நிறுவனம் 555 பயணிகளைக் காவிச்செல்லவல்ல A380 விமான வடிவமைப்பில் கவனம்செலுத்திய வேளை, Boeing நிறுவனம் 100 தொடக்கம் 300 வரையான பயணிகளுடன் தொடர்ச்சியாக நீண்டதூரப் பயணத்தினை மேற்கொள்ளவல்ல விமான வடிவமைப்பில் கவனம் செலுத்தியது. இந்த sonic cruisers விமான வடிவமைப்பிற்கான ஆய்வுகள், 1990 களின் இறுதிப்பகுதியிலேயே ஆரம்பித்து விட்டன. பல்வேறு வகையான விமானத் தொழிநுட்பங்கள், வடிவமைப்புக்கள் என்பன ஆய்விற்குட்படுத்தப்பட்டன. இவ்வாய்வின் ஒரு பகுதியாக, Boeing நிறுவனம் தம்மிடம் விமானக் கொள்வனவில் ஈடுபடும் விமானசேவை நிறுவனங்களிடம் இருந்து, அவ்விமான சேவை நிறுவனங்களின் புதிய விமானங்களுக்கான தேவை, அப்புதிய விமானங்களின் சிறப்பியல்புகள் தொடர்பாக கருத்தெடுப்பு ஒன்றை நடாத்தியிருந்தது. இக்கருத்தெடுப்பினூடு பெற்ற முடிவுகளின்படி, பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் தற்போதுள்ளவற்றைவிட வேகமாகவும் தொடர்ச்சியாக நெடுந்தூரத்திற்கும் பறக்கவல்ல விமானங்களையே விரும்பின. ஆகவே, அந்தத் தேவையை நிறைவுசெய்யத்தக்க வகையிலான விமானமொன்றை வடிவமைக்கும் பணியில் Boeing நிறுவனம் ஈடுபட்டது. அந்த முயற்சியின் விளைவாக உருவானதே இந்த sonic cruisers விமானமாகும்.
வேகமாகப் பறக்கவல்ல விமானம் எனும்போது அவ்விமானம் மிகையொலி அல்லது அதற்கு அண்மித்த வேகத்திற் பறக்கவல்லதாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இருப்பினும் மிகையொலி வேகத்திற் பறக்கும்போது நீண்டதூரத் தொடர்ச்சியான பறப்பு என்பது கேள்விக்குறியான விடயமாக இருக்கின்ற காரணத்தினால், மிகையொலியிலும் குறைவான ஆனால் தற்போதிருக்கும் விமானங்களிலும் வேகமானதாக பறக்கவல்லதாகவே இவ்விமானம் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு Boeing நிறுவனம் வந்தது. எனவே near-sonic என்றழைக்கப்படும் மிகையொலிக்கு அண்மித்த வேகத்தில் பறக்கவல்லதாக இவ்விமானம் வடிவமைக்கப்பட்டது.
ஏனைய பயணிகள் விமானத்துடன் ஒப்பிடும்போது இவ்விமானம் பல்வேறு தனிப்பட்டimage002சிறப்பியல்புகளுடன் வடிவமைக்கப்பட்டது. அதிலொன்று, இவ்விமானத்தின் இயந்திரங்களது அமைவிடமாகும். பொதுவாகப் பயணிகள் விமானங்களில் அவற்றின் இயந்திரங்கள், இறக்கைகளின் கீழ்ப்பகுதியில் இருக்கக்கூடியவாறே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இவ்விமானத்தில் இயந்திரங்கள் விமானத்தின் பின்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். இயந்திரங்களின் உடற்பகுதியால் ஏற்படுத்தப்படும் வளியுராய்வைத் தவிர்ப்பதும் இவ்வாறு இயந்திரங்கள் விமானத்தின் பின்பகுதியில் பொருத்தப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
ஆரம்பத்தில், Boeing-777 விமானங்களிற் பயன்படுத்தப்படும் 777 வகுப்பைச் சேர்ந்த (777-class engine) இயந்திரங்களே இவ்விமானத்திற் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் 777 வகை விமானங்களை விட இவ்வகை விமானங்கள் எடை குறைவானவையாகவும் குறைந்தளவு பயணிகளையே காவிச்செல்ல வல்லனவாகவும் காணப்பட்டபடியால், அவ்வியந்திரங்களின் மூலமாகவே இவ்விமானத்தால் near-supersonic வேகத்தை எட்ட முடிந்தது.
0.95 Mach வேகத்திற் பயணிக்கவல்ல இவ்விமானமே, 2 Mach வேகத்திலும் கூடுதலாகப் பயணிக்கவல்ல கொன்கோட் (Concord) விமானத்திற்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது வேகமான வர்த்தக விமானமாகும். இதன் வேகமானது சாதாரண வர்த்தக விமானங்களிலும் பார்க்க 15 மடங்கு வேகமானது. Boeing நிறுவகத்தின கணிப்புப்படி, 3000 கிலோமீற்றர் தூரத்தை, தற்போது பயன்பாட்டிலுள்ள ஏனைய பயணிகளி விமானத்திலும் பார்க்க ஒரு மணித்தியாலம் குறைவான நேரத்தில் பறக்கவல்லது என்பதுடன் பயணிகளின் 20 வீதமான நேரத்தையும் சேமிக்கவல்லது.
சாதாரணமானதொரு விமானப் பயணத்தில், பயணநேர அதிகரிப்பிற்கு விமானத்தின் வேகம் மட்டுமே காரணமல்ல. இடைத்தரிப்பு நிலையங்களில் விமான ஒழுங்குபடுத்தல், எரிபொருள் மீள்நிரப்புகை எனப் பல்வேறு காரணங்களினால் விமானப்பயணத்தில் பயண நேரம் அதிகரிக்கின்றது. sonic cruisers விமானமானது நீண்டதூரப் பறப்பினைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வல்லதாகக் காணப்படுவதன் காரணமாக இவ்வாறான தாமதங்கள் அனைத்துமே தவிர்க்கப்படுகின்றன. Boeing நிறுவனத்தின அறிக்கைப்படி இவ்விமானம் 9000 கடல்மைல்கள் (16668 km) தூரத்தைத் தொடர்ச்சியாகப் பறந்து கடக்கவல்லது. இந்தத் தூரத்தை 10000 கடல்மைல்களாக அதிகரிக்கும் முயற்சியை Boeing நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
எதுவாயிருப்பினும், பெற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றிற்கும் நாம் விலைசெலுத்தியே ஆகவேண்டும். ஆம், இவ்விமானம் எமது நேரத்தைச் சேமித்தாலும், அதற்கான எரிபொருட் செலவு ஏனைய பயணிகள் விமானங்களுடன் ஒப்பிடும்போது அதிகமானதே. ஏனைய பயணிகள் விமானங்களை விட இவ்விமானத்திற்கு 15 தொடக்கம் 20 வீதம் வரை அதிகமான எரிபொருள் தேவைப்படுகின்றது.
விமான சேவை நிறுவனங்களுக்கு இவ்வகையான விமானம் ஒன்றின் தேவை இருந்தபோதிலும், விமானத்திற்கான அதிகரித்த பராமரிப்புச் செலவு, எரிபொருட் செலவு போன்றவற்றின் காரணமாக இவ்விமானம் விமான சேவை நிறுவனங்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. அதுமட்டுமன்றி, அதிகரித்த விமானச்செலவு பயணிகள் கட்டணத்தையும் அதிகரித்ததன் காரணமாக, விமானப் பயணிகளிடமும் இவ்விமானம் வரவேற்பைப் பெறவில்லை. sonic cruisers விமானம். விமானப் போக்குவரத்து வரலாற்றில் புதியதொரு பாதையைத் திறந்து விட்டுள்ள போதிலும், இன்றுவரை பயன்பாட்டிற்கு வருவதில் அது பல்வேறு தடைகளை எதிர்கொண்டவண்ணமே உள்ளது. இவ்விமானத்திற் பயணிக்க விரும்புவோர் அதற்கான காலம் கனியும்வரை காத்திருக்க வேண்டும்.

No comments: