பழமொழி.....

Friday, March 4, 2011

விமானம் செய்யும் உலோகம்......




பொதுவாக நிர்மாணப் பணிகளில் இரும்பும், உருக்கும் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இரும்பு கடினத் தன்மையும் பலமும் கொண்டது. ஆனால் இரும்பு துருப்பிடிக்கும். அதன் எடையும் அதிகம். விமானம் செய்வதற்கு உறுதியானதும் எடை குறைந்ததுமான உலோகம் வேண்டும். இரும்பும், அலுமினியமும் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இரும்பின் எடையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு எடைதான் அலுமினியம் இருக்கும். ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடிய  பறக்கும் பலூன்களைத் தயாரிக்கத் தொடங்கியபோது, ஏற்ற கனமற்ற உலோகத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 





அலுமினியம் துருப்பிடிக்காது. இரும்பு துருப்பிடித்து படல் படலாகப் பெயர்ந்து விழும். அப்போது அதன் அடியில் உள்ள படலம் மீண்டும் துருப்பிடிக்கும். அலுமினியம் பூமியில் சாதாரணமாகக் காணப்படுகிற ஒன்றுதான். இரும்பைவிட இரண்டு மடங்கு அதிகமான அலுமினியம் பூமியில் உண்டு. ஆனால் தொடக்க காலத்தில் அதை மற்ற தாதுக்களிலிருந்து பிரித்து எடுப்பது சிரமமாக இருந்தது.    அதனால் அலுமினியம் மிகவும் அதிகமான விலைக்கு விற்றது. "எலக்ட்ரோ லைட்டிக்' தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு சுத்தமான அலுமினியம் நிறையக் கிடைத்தது. அப்போதுதான் அதை விமானங்கள் செய்யப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். தொடக்க கால விமானங்கள் மரத்தால் செய்யப்பட்டன.




சுத்தமான அலுமினியத்தைப் பயன்படுத்தி விமானம் செய்ய முடியாது. அது கொஞ்சம் மென்மையாக இருக்கும். எனவே சுலபமாக வளையும்; சுருளும். 1906 - ஆம் ஆண்டு ஜெர்மன்காரர்கள் இதற்கொரு வழி கண்டுபிடித்தார்கள். அலுமினியத்தில் கொஞ்சம் "மக்னீஷியம்' சேர்த்தால் அதன் கடினத் தன்மை அதிகரிக்கும். ஆனால் எடை அதிகரிக்காது. இந்தக் கலப்பு உலோகத்திற்கு "சுராலுமின்' என்று பெயர்.


இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்கள் இந்தக் கலப்பு உலோகத்தைக் கொண்டு "டிரிஜிபிள்'களைத் (கட்டுப்படுத்த முடிகின்ற ஆகாயக் கப்பல்கள் )தயாரித்தார்கள்.   அவற்றைப் பயன்படுத்தி பிரிட்டனில் குண்டுபோட்டார்கள்.

அவற்றில் ஒரு ஆகாயக் கப்பல் அங்கேயே விழுந்து உடைந்தது. ஆங்கிலேயர்கள் உடனே ரசாயனப் பரிசோதனைகள் செய்து, அந்த ஆகாயக் கப்பலைத் தயாரிக்கப் பயன்படுத்திய உலோகம் என்னவென்று கண்டுபிடித்தார்கள். அதன் பிறகு சுராலுமின் உலோகத்தைப் பரவலாக உபயோகப்படுத்தத் தொடங்கினார்கள். இன்று வாக்குவம் கிளீனர் முதல் ராக்கெட் வரை தயாரிப்பதற்கு இந்த உலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

No comments: