பழமொழி.....

Wednesday, March 2, 2011

ஒலி குறைந்த வானூர்திகள்...



விமானப் போக்குவரத்து தொடங்கிய ஆரம்ப காலங்களில், பெரும்பாலும் விமான நிலையங்கள் அனைத்தும் மக்கள் குடியிருப்புக்களிலிருந்து வெகு தொலைவிலேயே அமைக்கப்பட்டன. இதற்கான பிரதான காரணம் விமானங்கள் மேலெழும் மற்றும் தரையிறங்கும்போது எழும் அதிக ஒலியே.
விமானங்கள் தரையிறங்கும் மற்றும் மேலெழும் போது அவற்றின் இயந்திரங்களால் எழுப்பப்படும் அதிசக்திவாய்ந்த ஒலியினை தொடர்ச்சியாகக் கேட்கும் ஒருவர் நாளடைவில் பாதிப்படைந்து அவர் தனது கேட்கும் சக்தியை விரைவிலேயே இழக்கலாம். அத்துடன் குழந்தைகள் அதிசக்திவாய்ந்த அந்தச் சத்தத்தினால் பல்வேறுபட்ட பாதிப்புக்களுக்கு உள்ளாகலாம்.
இவ்வாறான காரணங்களுக்காக விமான நிலையங்கள், குடியிருப்புக்களிலிருந்து எப்போதும் தொலைவிலேயே அமைக்கப்பட்டு வந்தன. இருந்தபோதிலும் அதிகரித்த சனத்தொகைப் பெருக்கம். அதனால் ஏற்படும் இடப்பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக மக்கள் குடியிருப்புக்கள் படிப்படியாக விமான நிலையங்களை அண்மித்தும் அமைக்க வேண்டிய தேவைகள் எழுந்தன. எனவே, இவ்வாறான சந்தர்ப்பத்தில் விமானங்களின் அதிசக்திவாய்ந்த ஒலியினால் எழும் பாதிப்பினைத் தடுப்பதற்கு மாற்றுவழிகளைக் கண்டறிவதற்கான தேவை எழுந்தது.
2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அடுத்துsai-2வரவுள்ள 10 தொடக்கம் 20 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து அப்போது இருந்ததைவிட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரித்தானியாவின் விமான நிலையங்களை அண்மித்து வசிக்கும் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மற்றும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்ட பிரித்தானிய அரசாங்கம் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களுக்கு, குறைவான ஒலியினை எழுப்பவல்ல இயந்திரங்களுடனான விமானங்களை (silent aircraft) உருவாக்குவதற்கான ஆய்விற்கான அழைப்பினை விடுத்திருந்தது.
பல்வேறு நாடுகளைச்சேர்ந்த பட்டப்படிப்பு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் விமானப் பொறியாளர்கள் எனப் பல்வேறுபட்ட தரப்பினரின் கூட்டு முயற்சியின் பயனாக, 2006 ஆம் ஆண்டு SAX-40 என்ற குறைவான ஒலியை எழுப்பவல்ல விமானம் ஒன்றின் வடிவமைப்பு, பல்வேறு வழிமுறைகளில் கணனி மூலமான பரிசோதனைகளின் பின்னர் பரிந்துரை செய்யப்பட்டது. இவ்வடிவமைப்பு குறைந்த ஒலியெழுப்பவல்லதாகக் காணப்பட்டதுடன் சுற்றுச்சூழல் மாசடைவதைப் பலவழிகளிலும் குறைக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நிதிநெருக்கடி மற்றும் அரசியற் சூழ்நிலைகள் போன்ற பல்வேறு காரணிகளினால் இவ்விமானத்தின் உற்பத்திச் செயற்பாடுகள் தடைப்பட்டுப் போனது. எனினும் இவ்விமான இயந்திரத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட இயந்திர எரிபொருட் கட்டுப்பாட்டுத் தொகுதி பின்னர் சாதாரண போக்குவரத்து விமானங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எரிபொருட் கட்டுப்பாட்டுத் தொகுதியைப் பயன்படுத்துவதன் மூலம் விமான இயந்திரங்களில் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த முடிவதுடன் விமானத்திகால் வெளியேற்றப்படும் புகை பாரியளவில் வளியினை மாசுபடுத்தாதவாறு பேணப்படுகின்றது.
பரிந்துரைக்கப்பட்ட இந்த SAX-40 என்ற விமான வடிவம், சாதாரண விமானங்களிலிருந்து வடிவம் மற்றும் அளவு போன்றவற்றில் பெரிதும் வேறுபட்டுக் காணப்பட்டது. இருப்பினும் இவ்வகை விமானங்கள் Boeing 757/767 விமானங்களுடன் ஒப்பிடக் கூடியனவாகக் காணப்பட்டன.
இந்த SAX-40 வகை விமான வடிவமைப்பினை மேற்கொண்டோர், விமானத்தின் இயந்திர ஒலியினைக் குறைப்பதனையே பிரதான நோக்காகக் கொண்டிருந்தனர். ஏனைய தற்போது பயன்பாட்டிலுள்ள சாதாரண விமானங்களுடன் ஒப்பிடும்பொழுது, புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் 35% அதிக சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்த வல்லதாகக் இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டதுடன் இவ்விமானம் மேலெழும் போதோ அல்லது தரையிறங்கும் போதே, அதன் இயந்திரச் சத்தம் விமான நிலைய எல்லைகளுக்கு வெளியே கேட்காது என்கின்றனர் அதன் வடிவமைப்பாளா்கள்.
இருப்பினும், இவ்விமானத்தின் சிக்கலான உடலமைப்பு வடிவம், இவ்வகை விமானங்களின் உற்பத்திச் செலவை தற்போது பயன்பாட்டிலுள்ள விமானங்களின் உற்பத்திச் செலவைவிடப் பலமடங்கு உயர்த்துகின்றன. உருளையான உடலமைப்பைக்கொண்ட தற்போதைய விமானங்களைப் போலல்லாது, இந்த SAX-40 வடிவ விமானங்கள் வித்தியாசமான உடலமைப்புடன் காணப்படுகின்றன.
இருந்த போதிலும், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளின் மூலம், 2030 ஆம் ஆண்டளவில் ஏனைய விமானங்களைப் போன்ற உடலமைப்புடன் கூடிய SAX-40 வகை விமானங்களை வடிவமைத்து அவற்றின் உற்பத்திச் செலவையும் குறைத்து விட முடியும் என்று கேம்பிரிஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


No comments: