பழமொழி.....

Wednesday, March 2, 2011

AV-8B Harrier II போர் வானூர்தி...



சாதாரண விமானங்களைப் போலல்லாது, சிறிய ஓடுபாதையில் ஓடியோ அல்லது உலங்குவானூர்தி போன்று நிலைக்குத்தாகவோ (vertical) மேலெழக்கூடிய திறனுடைய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த விமானமே harrier விமானமாகும். பல்வேறுபட்ட தாக்குதல் நடவடிக்கைகளிற் பயன்படுத்தவல்ல இவ்விமானம் சிறியரக விமானங்தாங்கிக் கப்பல்களிற் பயன்படுத்துவதை நோக்காகக் கொண்டே உருவாக்கப்பட்டன.
இவ்விரண்டாம் தலைமுறை harrier போர்விமானமானது பிரித்தானியத் தயாரிப்பான முதற்தலைமுறை harrier போர்விமானமான AV-8A இன் தொடர் வடிவமேயாகும். 1957 இல் பரிந்துரை செய்யப்பட்ட harrier வகை விமானங்களுக்கான வடிவமைப்புக்களுடனேயே இவ்வகை விமானங்களின் வரலாறு ஆரம்பமாகின்றது.
கழியொலி (subsonic) வேகத்தில் பறக்கவல்ல இந்தப் போர்விமானம் இரண்டு வளி உள்ளிளுக்கும் அமைப்புகள் மற்றும் நான்கு விசை வெளியேற்றும் வழிகள் (nozzle) ஆகியவற்றுடன் கூடிய தாரை இயந்திரம் ஒன்றைக் கொண்டிருக்கின்றது. இவ்விமானம், உடற்பகுதியில் இரண்டு மற்றும் இருபக்க இறக்கைகளிலும் இரண்டு என நான்கு தரையிறங்கு சக்கரங்களைக் (landing gears) கொண்டிருப்பதுடன் போர்க்கருவிகளைக் காவிச்செல்வதற்கான அமைப்புக்கள் (hardpoints) ஆறினையும் கொண்டிருக்கின்றது. இவ்வகை விமானங்கள் பகல்நேரத் தாக்குதல் நடவடிக்கைகளை பிரதான நோக்காகக் கொண்டே வடிவமைக்கப்பட்டன. தொடர்ந்து220px-BAE-McDonell-Douglas_AV8B_edit5இவ்விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவங்களான Night Attack Harrier மற்றும் Harrier II Plus போன்றவற்றின் வருகையைத் தொடர்ந்து இவ்விமானங்கள் படிப்படியாகச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றன.
இவ்வகை விமானங்களில் விமானியின் குரல்மூலமான கட்டளை வழங்கும் மின்னணுக்கருவி பரிசோதனை முயற்சியாகப் பயன்படுத்தப்பட்டது. 1991 இல் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மேம்படுத்தப்பட்ட Night Attack Harrier போர்விமானம் இரவுநேரத்தாக்குதல்களுக்கு ஏற்றவகையில் இரவுப்பார்வை சாதன வசதிகளைக் கொண்டதாகக் காணப்பட்டது. இதன் இன்னொரு மேம்படுத்தப்பட்ட வடிவமான Harrier II Plus விமானம் Night Attack Harrier விமானத்தின் வசதிகளைக் கொண்டிருந்ததுடன் மேலதிகமாக கண்பார்வைக்கு அப்பாலுள்ள இலக்குகளைக் கண்டறிவதற்காகவும் அவற்றினைத் தாக்கியழிப்பதற்கான ஏவுகணைகளை வழிநடாத்துவதற்குமான மின்காந்த தொலையுணரி (radar) ஒன்றினை அதன் மூக்குப்பகுதியில் (nose) கொண்டிருக்கின்றது.
பனிப்போர் காலப்பகுதியில் NATO நாடுகளின் பாதுகாப்புத் தேவைகளுக்காக அமெரிக்க-பிரித்தானியக் கூட்டுத் தயாரிப்பிலேயே Harrier II விமானம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இரு நாடுகளும் இணைந்தே இவ்விமானத்தைத் தயாரித்த போதிலும், இரு நாடுகளுமே தனித்தனியே தமது பிரத்தியேக வடிவங்களை உருவாக்குவதிலே ஆர்வம் காட்டின. இதனைத் தொடர்ந்து இப்போது இவ்விரு நாடுகளும் தனித்தனியே வெவ்வேறு வடிவங்களில் இவ்விமானங்களைத் தயாரிக்கின்றன.
போக்லண்ட் போரின்போது (Falklands War) இவ்வகை விமானங்கள் பிரதான பங்குவகித்தன. இப்போரின்போது இவை சிறப்பாகச் செயற்பட்ட போதிலும், ஆர்ஜென்ரீன விமானங்களின் தாக்குதல்களை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதிலோ அல்லது ஆர்ஜென்ரீனப் படைகளின் விநியோக நடவடிக்கைகளைத் தடுத்துநிறுத்துவதிலோ இவ்விமானங்களினால் வினைத்திறனுடன் செயற்பட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ஜென்ரீனப் படைகளின் தரை இலக்குகளைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைகளுக்கே இவ்விமானங்கள் பெருமளவிற் பயன்படுத்தப்பட்டன என்பதுடன் இப்போரின்போது பல விமானங்கள் ஆர்ஜென்ரீனப் படைகளின் தாக்குதல் மற்றும் விபத்து போன்ற காரணங்களினால் இழக்கப்பட்டன.
Harrier வகை விமானங்களின் விமானமோட்டிகள் சாதாரண போர்விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் ஆகிய இருவகை வானூர்திகளையும் ஓட்டிய அனுபவமிக்கவர்களாகவே தெரிவுசெய்யப்படுவர். அதுமட்டுமன்றி இவ்வகை விமானங்களை ஓட்டுவதற்காக அவர்கள் இவ்விருவகை விமானங்களை ஓட்டிய அனுபவத்துடன் மேலதிகமாக harrier வகை விமானங்களுக்கான சிறப்புப் பயிற்சிக்கும் உட்படுத்தப்படுவர்.
Harrier வகை விமானங்களில் thrust vacator மற்றும் reaction control system ஆகிய இரு சிறப்பு அமைப்புக்கள் காணப்படுகின்றன. இவ்விரு அமைப்புக்களும் சாதாரண விமானங்களிற் காணப்படமாட்டா. thrust vacator அமைப்பின் மூலமாக உந்துவிசை வெளியேற்றும் வழியின் (nozzle) கோணத்தை மாற்றுவதன் மூலம் உந்துவிசை வெளியேறும் திசையினை மாற்ற முடியும். இதுவே விமானத்தை நிலைக்குத்தாக மேலெழ உதவுகின்றது. அடுத்த அமைப்பு reaction control system ஆகும். இவ்வமைப்பானது விமானப் பறப்பின்போது விமானத்தின் பறப்புத்திசையை வேகமாக மாற்றுவதற்கு உதவுகின்றது. இவ்விரு அமைப்புக்களையும் ஒருசேரப் பயன்படுத்தும்போது, விமானத்தின் வேகம் மற்றும் பறப்புயரம் போன்றவற்றைச் சடுதியாகக் குறைக்க முடியும்.
220px-Spanish_Navy_AV-8B_Harrier_II_070223-N-3888C-004இவ்வகை விமானங்களின் சக்கர (landing gear) அமைப்பானது, இவ்விமானம் சாதாரண விமானங்கள் போன்று ஓடுபாதையொன்றில் தரையிறங்குவதைக் கடினமாக்குகின்றது. இவ்விமானத்திற்கு பிரதான சக்கரம் ஒன்று விமான உடலின் நடுப்பகுதியில் காணப்படுகின்றது. இரண்டு துணைச் சக்கரங்கள் இரு இறக்கைகளிலும் காணப்படுகின்றன. எனவே சாதாரண விமானம்போன்று இவ்விமானத்தை தரையிறக்கும்போது கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது.

                            

No comments: