பழமொழி.....

Tuesday, July 5, 2011

மசகு எண்ணெய்.. (Fossil Fuel)



இந்த ஃபாசில் எரிபொருட்கள் (Fossil Fuel) எங்கிருந்து வருகிறது? பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த தாவர மற்றும் விலங்குகள் மாண்டழியும் பொழுது அவைகள் புதையுண்டு பலவேறுபட்ட நிலைகளில் பல வேதி மாற்றங்களினூடே பயணித்து இன்று நமக்குப் பயன்படும், எரிவாயுவாகவும், நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும் கிடைக்கிறது.
ஒரு லிட்டர் பெட்ரோலியம் கிடைக்க ஒரு காலத்தில் பல ஆயிரம் நிலப்பரப்பில் இருந்த வனம் அழிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாம். ஏன் அவ்வளவு, ஒரு அடி நிலக்கரி கிடைக்க பத்து சதுர அடி தாவரப் பொருள் அவசியமாம், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள், எவ்வளவு இயற்கைவளம் அழிந்திருந்தால் நாம் இன்று அழித்துத் தீர்க்கும் இந்த வளங்கள் கிடைத்திருக்கக் கூடுமென்று.

இந்த நிலையில் எண்ணெய்க்கென பூமியைத் துளை போட ஆரம்பித்த 19ஆவது நூற்றாண்டிலிருந்து நாம் 100 பில்லியன் டன் கச்சா எண்ணெயைத் தோண்டி எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
நாம் இது போன்ற பெட்ரோலியப்பொருட்களின் பயன்படுத்தும் வேகத்தினை வைத்துப் பார்க்கும் பொழுது மிக விரைவிலேயே, உலகம் தழுவிய முறையில் எண்ணெய்க்கான தட்டுப்பாடு வெளிக்கிளம்பப் போவதாக பல ஆண்டுகளாகவே அச்சம் இருந்து வருகிறது.
மாண்டழிந்து போன தொன்மையான தாவர/விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியானதாகக் கருதப்படும் பெட்ரோலியமும், இயற்கை வாயுவும் உருவாவதற்கு இது போன்ற இயற்கை கச்சா பொருட்களின் தேவை இல்லை என்று இப்பொழுது ஓர் ஆய்வின் மூலமாக முன்மொழியப் பட்டுள்ளது.

இது போன்ற தர்க்கம் அறிவியல் உலகில் முன்பிலிருந்தே நடந்து வருவதாக தெரியவரும் நிலையில் அண்மைய ஆராய்ச்சி இதனை மேலும் உறுதிப் படுத்துகிறது. அதாவது பூமியின் மேல் ஓட்டிலிருந்து 10 கிலோ மீட்டர்களுக்குக் கீழேயுள்ள பாறைப் படிமங்களின்(bedrock) ஊடாக நிகழும் வெப்பமும், அழுத்தமும் பெட்ரோலியப் பொருட்களின் அடிப்படை மூலமான ஹைட்ரோ கார்பன்களை உருவாக்குவதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் கொண்டிருப்பதாக ஸ்வீடனைத் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு ஆதாரமாக அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் 10.5 கிலோமீட்டர்களுக்கு கீழ் ஊடுருவிச் சென்றிருக்கும் இந்தப் பெட்ரோலிய கச்சா எண்ணெய்வளம் கண்டிப்பாக ஈர்ப்புச் சக்தியாலோ அல்லது வேறு சில ஆற்றல்களாலோ நிகழ்ந்திருக்க முடியாது எனவும், பாறைகளுக்கிடையே நிலவிய வெப்ப மற்றும் அழுத்தம் காரணமாகவே உருவாகியிருக்கக் கூடும் என்றும் கருதுகிறார்கள்.
அப்படியாக இருக்கும் பட்சத்தில் உலகத்தின் எல்லா இடங்களிலும் இது போன்ற எண்ணெய் வளம் இருக்க அனேக வாய்ப்பும் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. 61 விழுக்காடுகள் இன்றைய அளவில் நம்மின் எரிபொருள் தேவை இது போன்ற இயற்கை ஃபாசில் எண்ணைகளைக் கொண்டே இயங்கி வருவதால் இந்தக் கண்டுபிடிப்பு உண்மையாகி நடைமுறைப்படுத்தப்பட்டு, சாத்தியப்படும் நிலையில் நம் எதிர்கால எரிபொருள் தேவைக்கு உகந்ததாக அமையும்.
நாம் இது போன்ற பெட்ரோலியப்பொருட்களின் பயன்படுத்தும் வேகத்தினை வைத்துப் பார்க்கும் பொழுது மிக விரைவிலேயே, உலகம் தழுவிய முறையில் எண்ணெய்க்கான தட்டுப்பாடு வெளிக்கிளம்பப் போவதாக பல ஆண்டுகளாகவே அச்சம் இருந்து வருகிறது
இருப்பினும் என்னுடைய தர்க்க எண்ணம் இது போன்ற ஃபாசில் எரிபொருட்கள் அதிக அளவில் தோண்டி எடுக்கப்படும் இடங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது, அவைகள் பாலைவனம், கடல், பனிப் பிரதேசம் போன்ற இடங்களிலேயே அதிகமாக நடைபெறுவதாகப் படுகிறது (உ. தா: பாலை வன மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா, அமெரிக்காவில் டெக்சாஸ், அரிசோனா, அலாஸ்கா, ரஷ்யாவில் வடதுருவப் பனிப் பிரதேசங்கள்...).
இது போன்ற பூமிப் பகுதிகள் ஒரு காலத்தில் நல்ல மரங்களடர்ந்த, ஜீவராசிகள் கொழித்து வளர்ந்த இடங்களாக அமைந்து பிறிதொரு காலகட்டத்தில் அழிந்து போயிருக்கலாம் என்றே எண்ணச் செய்கிறது. அவைகளே இன்று நமக்கு பெட்ரோலிய கச்சா பொருட்களைத் தந்து கொண்டிருப்பதற்கான அடிப்படையாகவும் கருதச் செய்கிறது. எப்படி இருப்பினும் இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலமாக அது போன்ற தாவர/விலங்குகளின் தேவையில்லாமல் இயற்கையில் எரி பொருள் கிடைப்பதற்கான வாய்ப்பிருந்தால் இன்னும் கொண்டாட்டம்தான்.
எது எப்படியாகினும் இது போன்ற எரி பொருட்களால் இயற்கை விரைந்து மாசுபடுவதனையும் ஒதுக்கிப் புறந்தள்ளுவதற்கில்லை.

No comments: