பழமொழி.....

Wednesday, February 16, 2011

பறப்பு நேர எரிபொருள் மீள்நிரப்புகை (Aerial Refueling)







220px-Usaf.f15.f16.kc135.750pixவிமானங்களின் தொடர்ச்சியான நெடுந்தூரப் பயணத்தை மட்டுப்படுத்தும் காரணிகளில், விமானங்களின் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கொள்ளளவு பிரதான காரணியாகும். போர் விமானங்களைப் பொறுத்தமட்டில் நீண்ட நேரப் போர் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடையாக எரிகொருள் கொள்ளளவும் ஒரு காரணியாகும். பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகையானது விமானங்களுக்கு அவை பறந்துகொண்டிருக்கும்போது எரிபொருள் தாங்கி விமானத்தின்மூலம் எரிபொருளினை நிரப்புதலாகும். இச்செயற்பாடு விமானம் மேலும் தொடர்ந்து பறப்பதற்கு வழிசெய்கின்றது.
போர்விமானங்கள் பெருமளவான போராயுதங்களைக் காவிச்செல்வதன் பொருட்டு ஆரம்ப மேலெழும் நிறையை சமன் செய்வதற்காக தொடக்கத்தில் குறைந்தளவு எரிபொருளையே எர்பொருட்தாங்கியில் நிரப்புகின்றது. இதன்காரணமாக தொடர்ச்சியான போர்நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை இன்றியமையாததாகின்றது. இருப்பினும் அனைத்து வகையான விமானங்களுக்கும் பறப்புநேர எரிபொருள் மீள் நிரப்புகை செய்ய முடியாது. விமானம் பறப்புநேர மீள்நிரப்புகை செய்யக்கூடிய வகையில் பறப்புநேர மீள்நிரப்புகை முனையினைக் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
பறப்புநிலைஎரிபொருள் மீள்நிரப்புகைக்கான ஆரம்பகட்டப் பரிசோதனை 1920 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்டது. விமானம் ஒன்றிலிருந்து இன்னொரு விமானத்திற்கு பறப்புநேர எரிபொருள் மீள்நிரப்புகை செயற்பாடு முதன்முதலில் 1923 ஆம் ஆண்டு ஜுன் 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து 1929 ஆம் ஆண்டு, அமெரிக்க விமானப் படையைச்சேர்ந்த விமானத் தொகுதி ஒன்று பறப்புநேர மீள்நிரப்புகை மேற்கொண்டு 150 மணிநேரம் தொடர்ச்சியான பறப்பை மேற்கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து 1930 ஆம் ஆண்டு அமெரிக்க விமானப்படையின் இன்னொரு விமானத் தொகுதி 553 மணி 40 நிமிடங்கள் பறந்து புதிய சாதனை படைத்தது.
தொடர்ந்து 1940 இல் போயிங் விமான நிறுவனம் அமெரிக்க விமானப் படைக்காக எரிபொருள் மீள்நிரப்பும் விமானத்தினைத் தயாரித்தளித்தது. இவ்விமானம் அதனது பின்புறத்தில் எரிபொருள் வழங்கும் குழாயினைக் கொண்டிருக்கும். இக்குழாய் விமானத்திலிருந்து எரிபொருள் நிரப்பப்படவேண்டிய விமானத்தை நோக்கி நீண்டு செல்லக்கூடியது. எரிபொருள் தாங்கி விமானத்திக் எரிபொருட் கட்டுப்பாட்டறையிலிருந்து எரிபொருள் நிரப்புனர் குாயினைக் கட்டுப்படுத்தி நகர்த்தி எரிபொருள் நிரப்பப்பட வேண்டிய விமானத்தின் பறப்பு நேர எரிபொருள் நிரப்பு முனையில் பொருத்தி எரிபொருளினை நிரப்ப முடியும்.
220px-Helicopter_aerial_refuelingஇவ்வாறு பறப்பு நேரத்தில் எரிபொருள் மீள்நிரப்பும் செயற்பாடானது, விமானங்களைத் தொடர்ச்சியாகப் பறப்பதற்கு வழிவகை செய்கின்ற போதிலும், விமான வடிவமைப்பு மற்றும் மீள்நிரப்பும் எரிபொருட் தாங்கி விமானத்தின் வடிவமைப்பு என்பன சிக்கல் நிறைந்தவையாகக் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி விமானிகள் மற்றும் எரிபொருள் நிரப்புனர் ஆகியோருக்கான சிறப்புப் பயிற்சிகள் பெரும் செலவுடையவை. எரிபொருள் மீள்நிரப்பும் இச்செயற்பாடு மிகவும் துல்லியமாகவும் அவதானமாகவும் மேற்கொள்ளப்படவேண்டும்.
உலங்கு வானூர்திகளும் இவ்வாறு பற்ப்பு நேர எரிபொருள் மீள்நிரப்புகை செய்யவல்லன. இதற்கென உலங்கு வானூர்திகளில் சிறப்பாக எரிபொருள் நிரப்பும் முனை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறான முனைகளைக் கொண்ட உலங்கு வானூர்திகளுக்கு சாதாரண விமானங்களைப் போன்று பறப்பு நேரங்களில் எரிபொருள் மீள்நிரப்புகை செய்ய முடியும்.

No comments: