கடந்த வாரம் இப்பகுதியில் அமெரிக்கத் தயாரிப்பான AH-65 தாக்குதல் உலங்குவானூர்தி தொடர்பாகப் பார்த்திருந்தோம். இவ்வாரம். பறக்கும் டாங்கி என ரஸ்ய விமானிகளால் அழைக்கப்படும் Mi-24 தாக்குதல் உலங்குவானூர்தி தொடர்பாகப் பார்க்கவிருக்கின்றோம். 1972 ஆம் ஆண்டு தொடக்கம் சோவியத் விமானப்படையினால் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் உலங்குவானூர்தியானது தாக்குதற்திறன் மிக்கதாக இருப்பது மட்டுமல்லாது சிறு எண்ணிக்கையான துருப்புக்களையும் நகர்த்தவல்லது.
இலங்கையில் இந்தியகொலைவெறிபடைகள் நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே, அங்கு இவ் உலங்கு வானூர்தி தமிழ் மக்களுக்கு அறிமுகமானது. “முதலைக் கெலி , மூஞ்சுறு “ என்று இது தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது.
1960 களில். தாக்குதற் திறனுடன் கூடியதும் துருப்புக்களைக் காவிச்செல்லக் கூடியதுமானஉலங்குவானூர்திகளின் தேவை சோவியத்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான Mikhail Leont'yevich Mil என்பவரால் உணரப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் படைகளின் பயன்பாட்டிலிருந்த UH-1A Huey என்ற உலங்குவானூர்தியின் வடிவத்தை ஒத்த வடிவமுடைய உலங்குவானூர்தியே Mil அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அவரது வடிவம் எட்டுத் துருப்புக்களைக் காவிச்செல்லக் கூடியதாகவும் இருபக்கங்களிலுமமைந்த இறக்கைகளில் மொத்தம் ஆறு ஏவுகணைகளைத் தாங்கிச்செல்லக் கூடியதாகவும் அமைந்திருந்தது.
இவ்வடிவத்தைப் பூர்த்தி செய்ததும் Mil சோவியத் படைகளுக்கு தன்னுடைய தாக்குதல் உலங்குவானூர்தி வடிவத்தைப் பரிந்துரை செய்தார். சோவியத் படையதிகாரிகளிடையே இப் புதிய உலங்குவானூர்திக்கு வரவேற்புக் காணப்பட்ட போதிலும் எதிர்ப்புகளும் காணப்பட்டன. இருப்பினும் பலத்த வாதப்பிரதிவாதங்களின் பின் புதிய உலங்குவானூர்தி சோவியத் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வியட்னாமிய யுத்தத்தின்போதான அமெரிக்கப் படைகளின் தாக்குதல் உலங்குவானூர்திப் பயன்பாடும், சோவியத் படைகளுக்கு புதிய தாக்குதல் உலங்குவானூர்தியின் தேவையை உணர்த்தியிருந்தது.
இரண்டு தாரை இயந்திரங்களால் இயக்கப்படும் இதன் பிரதான சுழலியானது (rotor) நான்கு சுழலித் தகடுகளையும் (rotor blade) வாற்சுழலியானது (tail rotor) மூன்று சுழலித் தகடுகளையும் கொண்டுள்ளன. துப்பாக்கி இயக்குபவரும் விமானியும் ஒருவர்பின் ஒருவராக தனித்தனி அறைகளில் (cockpit) அமர்ந்திருப்பர். இருபக்கங்களிலுமுள்ள இறக்கைகள் பலவகையான தாக்குதல் ஆயுதங்களைக் காவவல்லதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடவடிக்கையின் தன்மைக்கேற்ப இவ் உலங்குவானூர்தி ஆயுதங்களைக் காவிச்செல்லவல்லது.
இவ் உலங்குவானூர்தியின் உடற்பகுதி மற்றும் சுழலித் தகடுகள் 50 கலிபர் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கக் கூடியவாறு காப்பிடப்பட்டுள்ள அதேவேளை அதன் விமானியறைகள் 37 மில்லிமீற்றர் கனரக துப்பாக்கித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கவல்லது. வேகமான பறப்பின்போது இதன் சிறப்பான வடிவமைப்பையுடைய இறக்கை உலங்குவானூர்திக்குத் தேவையான மொத்தத் தூக்குசக்தியின் (lift) 25 வீதமான பங்கை வழங்குகின்றது.
1977 – 1978 காலப்பகுதியில் எதியோப்பியப் படைகள் சோமாலியர்களுக்கு எதிராக நடாத்தியயுத்தத்தில் இவ் உலங்குவானூர்திகள் முதன்முதலாக எதியோப்பியப் படைகளுக்கு ஆதரவாகக் களமிறக்கப்பட்டன. அதன் பின்னர் கம்போடிய-வியட்னாமிய யுத்தம், லிபிய யுத்தம் மற்றும் சோவியத்துடனான ஆப்கானிஸ்தான் யுத்தம் என்பவற்றில் இவ் உலங்குவானூர்திகளின் பங்கு கணிசமாகதாக இருந்தது. சிறிலங்கா போரைப் பொறுத்தளவில், இந்தியப் படைகள் இவ்வகை உலங்குவானூர்திகளை 1987 – 1990 காலப்பகுதியில் பயன்படுத்தியிருந்தனர். 1995 ஆம் ஆண்டு இவ்வகை உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப் படையிலும் இணைத்துக்கொள்ளப்பட்டன.
1979 ஏப்ரல் மாதத்தில் ஆப்கான் படைகளுக்கு Mi-24 வகை உலங்குவானூர்திகள் சோவியத்தால் வழங்கப்பட்டது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் படைகளால் பயன்படுத்தப்படும் இவ்வகை உலங்குவானூர்திகள் சமர்க்களங்களில் அவற்றின் திறனை நிருபித்துள்ளன.
No comments:
Post a Comment