நிறுவனத்தின் தயாரிப்பான Chinook வகை உலங்குவானூர்தி அவ்வபறான மீட்பு மற்றும் வழங்கல் நடவடிக்கைகளுக்கெனச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓர் உலங்குவானூர்தியாகும். உலங்குவானூர்தி என்றதும் எமது மனக்கண்ணில் தோன்றும் வடிவம் அதன் உடற்பகுதியின் மேற்புறத்தில் கிடையான ஓர் சுழலியையும் (rotor) வாற்பகுதியில் ஓர் பக்கவாட்டுச் சுழலியையும் கொண்ட வடிவமாகும். இவ்வடிவத்திற்கு மாறாக இந்த Chinook வகை உலங்குவானூர்திகள் உடலின் மேற்புறத்தே முன்னும் பின்னுமாக எதிரெதிர்த் திசையில் சுழலும் இரண்டு சுழலிகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றன.
இவ்விரு சுழலிகளும் எதிரெதிர்த் திசையில் சுழல்வதன் மூலம் ஒரு சுழலியினால் வானூர்தியின் உடலில் ஏற்படுத்தப்படும் கிடைச்சுழற்சி விசை (yawing force) எதிர்த்திசையில் சுழலும் மற்றைய சுழலியினால் சமன்படுத்தப்படுகின்றது. இதன்காரணமாக ஏனைய உலங்குவானூர்திகளின் வாற்பகுதியிற் காணப்படுவதுபோன்று இவ்வகை உலங்குவானூர்திகளுக்கு பக்கவாட்டுச் சுழலி காணப்படுவதில்லை.
1960 களின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட இவ்வகை உலங்குவானூர்திகள் 170 நொட்ஸ்
வேகத்தில் பறக்கவல்லதாகக் காணப்பட்டன. இவ்வேகம், அப்போது பயன்பாட்டிலிருந்த ஏனைய தாக்குதல் உலங்குவானூர்திகளைவிட அதிகமானதாகும். அதுமட்டுமன்றி அக்காலத்திற் பயன்படுத்தப்பட்டு, தற்போதும் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் காணப்படும் ஒருசில வானூர்திகளில் இவ்வானூர்தியும் ஒன்றாகும்.
இவ்வகை வானூர்திகள், இராணுவப் பயன்பாட்டில் பிரதானமாக துருப்புக்களை இடம்நகர்த்துதல், முன்னணி நிலைகளுக்கான வழங்கல்களை மேற்கொள்ளல் மற்றும் கனரக ஆயுத, வாகனங்களை இடம்நகர்த்துதல் போன்ற செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
1956 இல் அமெரிக்க இராணுவம், அதுவரை அவர்கள் பயன்பாட்டிலிருந்த CH-37 Mojave வகை துருப்புக்காவி உலங்குவானூர்திகளை மீள்வடிவமைப்புச் செய்யும் திட்டம் ஒன்றைத் தொடங்கியிருந்தது. இந்தத் திட்டத்திற் பங்கெடுத்த பல்வேறு நிறுவனங்களின் வடிவங்களின் தொடர்ச்சியான மேம்படுத்தல்களின் (upgrade) இறுதியில் தெரிவுசெய்யப்பட்ட வடிவமே தற்போது பயன்பாட்டிலிருக்கும் Chinook வகை உலங்குவானூர்திகளின் ஆரம்ப வடிவமாகும். இந்த வடிவமைப்பு மாற்றத்தின் ஒரு பிரதான பகுதியாக CH-37 Mojave உலங்குவானூர்திகளில் பயன்படுத்தப்படும் தாட்பாழ் இயந்திரங்களுக்காக (piston engine) சுழலி இயந்திரங்கள் (turbine engine) பதிலீடு செய்யப்பட்டன. இவ்வகை வானூர்திகள் சேவையிலீடுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவற்றின வடிவமைப்பு மற்றும் வலு அன்பவற்றில் தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டவண்ணமுள்ளன.
அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் வெவ்வேறான குறியீட்டுத் தொடர் இலக்கங்களில் இவ்வகை உலங்குவானூர்திகளைத் பல்வேறு நவீன வசதிகளுடன் தனித்தனியே மேம்படுத்தி உற்பத்தி செய்கின்றன. அமெரிக்க விமானப்படை பல்வேறு சக்திமிக்க மேம்படுத்தப்பட்ட வடிவமான CH-47D இனை 1982 இல் சேவையில் இணைத்துக்கொண்டது. இவ்வடிவம் புதியவகை இயந்திரங்கள், நவீனமயப்படுத்தப்பட்ட விமானியறை எனப் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க விமானப்படை தனது சேவையில் இணைத்துக்கொண்ட வடிவமான CH-47F, மேலும் பல விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதிகளுடன் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டது.
வியட்னாமிய யுத்தகாலப் பகுதியில் இவ்வகை உலங்குவானூர்திகள் அமெரிக்கப்படைகளால் முதன்முதலில் யுத்தப் பிரதேசங்களில் பயன்படுத்தப்பட்டன. பிரித்தானியப் படைகளால் Falklands யுத்தத்தின்போது இவ்வகை விமானங்கள் முதன்முதலில் யுத்தப்பிரதேசங்களில் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, வளைகுடா யுத்தம், பல்கன் யுத்தம், ஆப்கான் யுத்தம் மற்றும் ஈராக் போர் என பல போர்கள நடவடிக்கைகளில் இவ்வகை உலங்குவானூர்திகள் பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கா, பிரித்தானியா மட்டுமன்றி அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட மேலும் பல நாடுகள் இவ்வகை உலங்குவானூர்திகளை தமது படைத்துறைப் பயன்பாட்டில் இணைத்துள்ளன.
இவ்வகை உலங்குவானூர்திகள் இராணுவப் பயன்பாட்டில் மட்டுமன்றி பொதுப் பயன்பாட்டிலும் பரந்தளவில் காணப்படுகின்றன.
No comments:
Post a Comment