பழமொழி.....

Sunday, February 13, 2011

விமானம் ரிவர்ஸில் போகுமா?

விமானங்கள் முன்னே செல்ல தமது சொந்த சக்தியில் செல்ல முடியுமே தவிர பின்னால் செல்ல முடியாது. அதனால்தான் விமான நிலையங்களில் பயணிகளும் சரக்கும் ஏற்றப்பட்ட நிலையில் ஓடுதளத்திற்கு செல்ல tow trucks எனப்படும் ட்ராக்ட்டர்கள் தேவைப் படுகின்றன. இந்த ட்ராக்ட்டர்களினால் பின் தள்ளப் பட்டு மெதுவாக திரும்பி செல்ல வேண்டிய திசையை பார்த்து விமானங்கள் நின்ற பிறகு இந்த ட்ராக்ட்டர்களில் இருந்து விடுபட்டு, தனது உந்து சக்தியால் ஒடுகளத்தில் ஓடி, அதன் பின் மேலெழும்பி வானில் பறந்து செல்கின்றன.

இங்கு விமானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் என்ஜின்களைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டியதாய் இருக்கிறது. விமானத்தில் நிரப்பப்பட்டிருக்கும் எரிபொருள் எரிக்கப்பட்டு வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்வாயு மிகுந்த அழுத்தமான நிலையில் வைக்கப்படுகிறது. இவ்வாறு வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து ஒரு சிறிய துளை மூலம் இந்த வாயு வெளிப்படுத்தப்படும் பொழுது அவ்வழுத்தத்தினால் ஏற்படும் உந்து சக்தியால் இவ்வாயு வெளிப்படும் திசைக்கு எதிர் திசையில் விமானம் தள்ளப்படுகிறது. இச்சக்தியை ஆங்கிலத்தில் Thrust என அழைக்கிறார்கள். ஒரு பலூனை ஊதி அதன் வாயைக் கட்டாமல் விட்டால் எப்படி பறந்து செல்கிறதோ அது போன்றுதான்.

இப்பொழுது வேறு ஒரு எடுத்துக்காட்டு ஒன்றை பார்க்கலாம். நம் முகத்தின் நேராக உள்ளங்கையை குழிவாக வைத்துக் கொண்டு ஊதினால், அவ்வாறு வெளியேரும் காற்று, மீண்டும் நம் முகத்தை நோக்கியே வருகிறது அல்லவா? அதைப் போன்று விமானங்களில் ஒரு அமைப்பு இருக்கின்றது. அதனை Reverse Thrusters என அழைக்கிறார்கள். நம் கை காற்றை மீண்டும் நம் முகத்திற்கே திருப்புவது போல், இந்த அமைப்பு எஞ்சினிலிருந்து வெளியேறும் வாயுவை அது பொதுவாக வெளியேறும் திசைக்கு எதிர் திசைக்கு தள்ளிவிடுகிறது. அதனால் விமானம் முன்னே செல்வதற்குப் பதிலாக பின்னால் செல்ல ஏதுவாகிறது.

பொதுவாக விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் விரைவாக ஓடும் பொழுது இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்களை பாவித்து விமானத்தின் வேகத்தை வெகுவிரைவில் குறைப்பார்கள். ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கட்டும். இங்கு ரிவர்ஸ் த்ரஸ்டர்களை உபயோகிக்கும் போது ப்ரேக் பிடிப்பது போல் இஞ்சின் வேகத்தைக் குறைக்காமல், வேகத்தை அதிகப்படுத்ததான் செய்வார்கள். இதன் மூலம்தான் தரையிறங்கிய விமானத்தை அவ்வளவு விரைவாக ஓடுகளத்தில் ஓட ஆரம்பித்தாலும் மிகச் சிறிய தூரமே ஓடிய பின் நிறுத்த முடிகிறது. இவ்வசதி இல்லாவிட்டால், ஓடுகளங்களின் நீளம் இன்று இருப்பதை விட பல மடங்கு நீளமாவதாகத் தேவைப்படும். சரி இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானங்களை பின்னால் செல்ல வைக்க முடியாதா? ஏன் செய்வதில்லை?

இதற்கு இரு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் பணம்! ஆமாம். விமானங்களின் இஞ்சின்களை இயக்கி அதன் மூலம் விமானத்தை பின் செல்ல வைப்பதை விட, ஒரு ட்ராக்ட்டரின் மூலம் பின்னால் தள்ளுவதனால் செலவு குறைகிறது. விமான எரிபொருட்களின் விலையும், எஞ்சின்களின் தேய்மானமும் ட்ராக்ட்டரின் செலவை விட பலமடங்கு அதிகமாகிவிடும். எனவே டெக்னிக்கலாக விமானங்கள் தனது சொந்த உந்து விசையால் பின்னால் செல்ல முடிந்தால் கூட அது எங்கும் செய்யப்படுவதில்லை.

இரண்டாவது காரணம் என்ன? அதையும் பார்க்கலாம். விமானங்களில் பிரயாணிகளும் சரக்கும் ஏற்றப்படும் பொழுது விமானங்கள் விமானநிலையத்தைப் பார்த்தவாறு நிறுத்தப்படுகின்றன. இப்பொழுது ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் உபயோகிக்கப்பட்டால் இஞ்சினில் இருந்து வெளியேற்றப்படும் வாயுவானது அதிவேகத்தில் விமான நிலையத்தை நோக்கிதான் வரும். அதனால் விமான நிலைய கட்டடங்கள் பாதிப்படையும். அப்போது உடையும் கண்ணாடி ஜன்னல்களுக்கு யார் பதில் சொல்வது? அதனால்தான் ட்ராக்ட்டர்களை உபயோகிக்கிறார்கள்.

2 comments: