பழமொழி.....

Wednesday, February 16, 2011

பாரிய விமானங்களில் சில வகைகள்..........



பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை வான்வெளியில் மனிதன் நடாத்திக் காட்டியிருக்கும் சாதனைகள் பிரமிக்கத்தக்கவை. அதேபோன்று, மனிதன் உருவாக்கியிருக்கும் விமானங்களும் பலரகங்கள். உலகில் பயன்படுத்தப்படும் பாரிய விமானங்களில் சில வகைகளைப் பற்றியே இங்கே பார்க்கவிருக்கின்றோம்.

Antonov An-225

220px-Buran_On_Antonov225உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான இது, 1980 களில் சோவியத் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்டது. 600 தொன் நிறையினைக் காவவல்ல இந்த விமானம் சோவியத்தின் உடைவிற்கு முன்னர், சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தில், விண்ணோடத்தினைக் காவும் பிரதான வானூர்தியாக இவ்விமானமே பயன்படுத்தப்பட்டது. இவ்விமானம் ஒன்றேயொன்று மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது காணப்படும் சரக்கு விமானங்களில் இதுவே மிகப்பெரிய விமானம் ஆகும்.
84 மீற்றர் நீளம், 18.1 மீற்றர் உயரம், இரு இறக்கைகளுடன் சேர்த்து 88.4 மீற்றர் அகலம் கொண்ட இவ்விமானம் ஆறு தாரை இயந்திரங்களைக் கொண்டது. இவ்விமானம், அதன் ஆகக்கூடிய சுமையுடன் 3500 மீற்றர் தூரம் ஓடுபாதையில் ஓடி மேலெழுகின்றது. இவ்விமானத்தின் அதிகூடிய மேலெழும் நிறை 640 000 கிலோகிராம் ஆகும்.

Boeing 314 Clipper

300px-Boeing_314_Clipper-croppedபோயிங் விமான நிறுவனத்தின் தயாரிப்பான, Boeing 314 Clipper விமானமே 1940 களில் காணப்பட்ட தொலைதூரப் பறப்புக்களை மேற்கொள்ளவல்ல கடல்விமானமாகும். 1939 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தவகை விமானங்கள் 1946 இல் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டன. இவ்வகை விமானங்கள் மொத்தம் பன்னிரெண்டே உற்பத்தி செய்யப்பட்டன. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளாலும் இவ்விமானங்கள் இராணுவ மற்றும் பொது தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.
32.36 மீற்றர் நீளம், 6.22 மீற்றர் உயரம் மற்றும் இறக்கைகளுடன் சேர்த்து 46.36 மீற்றர் அகலம் உடைய இவ்விமானம் நான்கு இயந்திரங்களைக் கொண்டது. இவ்விமானம் 68 பயணிகளையோ அல்லது 4500 கிலோகிராம் சுமையையோ காவிச்செல்லவல்லது.

Junkers G.38

300px-Junkers_Grossflugzeug_LA2-Blitz-0128_5ஜேர்மனி நாட்டின் தயாரிப்பான இந்த Junkers G.38 போக்குவரத்து விமானம் 1929 இல் தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது. போக்குவரத்து பயன்பாட்டிற்கென உற்பத்தி செய்யப்பட்ட இவ்விமானங்கள் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்பட்டன. இவ்விருவகை விமானங்களும் இரண்டாம் உலகயுத்தம் தொடங்கும்வரை ஐரோப்பாவினுள் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இவ்வகையைச் சார்ந்த முதலாவது விமானம் 1929 நவம்பர் 6 ஆம் திகதி தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது. இவ்வகை விமானத்தின் மூலமான முதலாவது விமான சேவை, 1931 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
23.21 மீற்றர் நீளம், 7.2 மீற்றர் உயரம் மற்றும் இறக்கைகளுடன் சேர்த்து 44 மீற்றர் அகலம் கொண்ட இவ்விமானம், ஆறு சிலிண்டர்களுடனான நான்கு இயந்திரங்களைக் கொண்டது. இவ்விமானம் 34 பயணிகளையோ அல்லது 5000 கிலோகிராம் சுமையேயோ காவிச்செல்லவல்லது.

Martin JMR Mars

220px-Martin_Marsஇவ்வகை கடல் விமானங்கள் அமெரிக்கக் கடற்படைக்காக 1940 களின் ஆரம்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. 1941 இல் தனது முதலாவது பறப்பை மேற்கொண்ட இவ்வகை விமானங்கள் 1956 இல் சேவையிலிருச்து ஓய்வுபெற்றன. அமெரிக்கக் கடற்படையால் கரையோர ரோந்துப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட இவ்வகை விமானங்கள் ஐந்து வெவ்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்பட்டன. அமெரிக்க விமானப்படையைத் தொடர்ந்து, இவ்வகை விமானங்கள் தீயணைப்புப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.
35.74 மீற்றர் நீளம், 11.71 மீற்றர் உயரம் மற்றும் இறக்கைகளுடன் சேர்த்து 60.96 மீற்றர் அகலமுடைய இவ்விமானம் நான்கு 18 சிலிண்டர்களுடைய நான்கு இயந்திரங்களை கொண்டுள்ளது. இவ்விமானம் 133 துருப்புக்களையோ அல்லது 15000 கிலோகிராம் சுமையேயோ காவிச்செல்லவல்லது. இவ்விமானத்தின் உட்பகுதி ஏழு ஜீப் வண்டிகளை ஏற்றிச்செல்லத்தக்களவு விசாலமானது.

No comments: