பழமொழி.....

Wednesday, February 9, 2011

விமானங்கள்

பொதுவாக விமானங்கள் நிலையான இறக்கைகள் கொண்ட விமானங்களாகவே காணப்டுகின்றன. விமானங்களின் இரண்டு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த இறக்கைகளே விமானங்கள் பறக்கும்போது, அவற்றுக்கான தூக்கு விசையை வழங்குகின்றன. இவ்விறக்கைகளின் பரப்பளவானது, விமானத்தின் நிறை மற்றும் இவ்விமானத்தினால் காவவல்ல சுமை போன்றவற்றிற்கேற்ப மாறுபடுகின்றது. அதுமட்டுமன்றி, விமான இறக்கைகளின் அமைப்பானது, அவ்விமானத்தின் அதியுச்ச வேகத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது.
விமான இயந்திரங்களின் வினைத்திறன் கூடியதும் எரிபொருள் சிக்கனமானதுமான பயன்பாட்டிற்கு இறக்கைகளின் அமைப்பானது முக்கிய பங்காற்றுகின்றது. எனவே, தாரை இயந்திரங்களின் வருகைக்கு முன்னர், விமானங்களின் வினத்திறனை அதிகரிக்கும் முகமாக, பறப்பின்போது தேவைக்கேற்ப இறக்கைகளின் அமைப்பினை மாற்றவல்ல விமானங்களை வடிவமைப்பதற்கான முயற்சி இரண்டாம் உலகப் போர்க்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான சில விமான வடிவங்களை விஞ்ஞானிகள் உருவாக்கியிருந்தனர். இருப்பினும், இரண்டாம் உலகப் போரின் பின்னர் தாரை இயந்திரங்களின் வருகை, விமானங்களின் வேகத்தில் பல முன்னேறங்களைக் கொண்டுவந்ததன் தொடர்ச்சியாக இறக்கைகளின் அமைப்பினை மாற்றும் விமானங்களை வடிவமைப்பதற்கான முயற்சியின் வேகத்தில் சிறு தொய்வு ஏற்பட்டது.
இருப்பினும் வல்லரசு நாடுகளின் விமான உற்பத்திப் போட்டியின் காரணமாக வினைத்திறன்மிக்க போர்விமானங்களை உற்பத்தி செய்வதில் அனைத்து நாடுகளுமே போட்டி போட்டன. இப்போட்டியின் காரணமாக, மீண்டும் இறக்கை அமைப்புக்களை மாற்றவல்ல விமானங்களை வடிவமைப்பதற்கான ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டன. இனி, இவ்வகை விமானங்கள் எவ்வாறு செயற்படுகின்றன, அவற்றின் இறக்கைகளில் ஏற்படுத்தப்படும் மாற்றம் இன்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றது எனப் பார்ப்போம்.
முதலாம் உலகப்போர் காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட விமானங்களின் வடிவங்களை அவதானிப்போமானால், அவற்றின் இறக்கைகள், அவற்றின் உடற்பகுதியிலிருந்து பெரும்பாலும் செங்குத்தாகவே அமைந்திருப்பதோடு அவற்றின் அதியுச்ச வேகம் அண்ணளவாக மணிக்கு 375 கிலோமீற்றர்களாகவே காணப்பட்டது. குறைந்த வேகமுடைய அக்கால விமானங்களுக்கு, அவற்றின் இறக்கை வடிவமைப்பு பெரும் பிரச்சினையாகக் காணப்படவில்லை. ஆனால், தொடர்ச்சியாக அதிகரித்துவரும் தாரை இயந்திரங்களின் தொடர்ச்சியான வேக அதிகரிப்பு விமான வடிவமைப்பில் மாற்றித்தினை ஏற்படுத்தவேண்டிய தேவையை அவசியமாக்கியது.
விமானத்தின் நிறை மற்றும் அவ்விமானம் காவிச்செல்லும் சுமை போன்றவற்றிற்கேற்ப விமான இறக்கையின் வடிவமைப்பு மற்றும் மேற்பரப்பளவு அமைந்திருக்க வேண்டியது அவசியம் என்றபோதிலும், விமானத்தின் வேகத்திற்கேற்ப அவ்விமான இறக்கைகளினால் உருவாக்கப்படும் தூக்குவிசையின் அளவும் அதிகரிக்கின்றது. இவ்வாறு தூக்குவிசையின் அளவு அதிகரிப்பதன் காரணமாக, அதிக வேகத்தில் குறைந்தளவு இறக்கை மேற்பரப்பினாலேயே அதிக தூக்குவிசையை வழங்க முடியும். எனவே, உயர் வேகத்தில் பறக்கும் விமான இறக்கைகளின் மேற்பரப்பு குறைவானதாகவும், தாழ் வேகத்தில் பறக்கும் விமானங்களின் இறக்கை மேற்பரப்பு அதிகமானதாகவும் காணப்படுகின்றன.
அதிக மேற்பரப்புடைய இறக்கைகளைக் கொண்ட விமானங்களினால் அதிவேகத்தில் பறக்க முடியும் என்றபோதிலும், அவற்றினால் அதியுச்ச வினைத்திறனுடன் செயலாற்ற முடியாது. இதன் காரணமாகவே இறக்கைகளின் அமைப்பை மாற்றுவதன் மூலம் அதியுச்ச வினைத்திறனைப் பெறவல்ல விமானங்களை உருவாக்கும் ஆய்வுகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையான விமான வடிவமைப்பு முக்கியமாக போர்விமானங்களுக்கே தேவைப்படுகின்றன. போர்விமானங்கள் பொதுவாக தாக்குதல் நேரங்களிலேயே அதியுச்ச வேகத்தில் பறக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது. ஏனைய நேரத்தில் அவை சாதாரண வேகத்திலே பறக்க முடியும் எனும்போதிலும், அவற்றால் பெரும்பாலான போர்விமானங்களால் அவ்வாறு பறக்க முடிவதில்லை. அதற்கான காரணம் அவ்விமானங்களின் வடிவமைப்பேயாகும். பொரும்பாலான மிகையொலி வேகத்தாரை விமானங்கள் சாதாரண வேகப் பறப்புக்கேற்ப வடிவமைக்கப்படுவதில்லை. எனவே, இவ்வகை விமானங்களினால் அனைத்துச் சந்தர்ப்பத்திலும் வினைத்திறனுடனும் எரிபொருட் சிக்கனத்துடனும் செயலாற்ற முடியாது.
எனவே, வெவ்வேறான சூழ்நிலைகளுக்கேறப இறக்கைகளின் வடிவம் மற்றும் பரப்பளவை மாற்றியமைக்கும் வல்லமையுடைய விமானங்களால் அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வினைத்திறனுடனும் எரிபொருட் சிக்கனத்துடனும் செயலாற்ற முடியும். அமெரிக்க மற்றும் ரஷ்ய வான்படைகளில் இல்வகையான சிலவிமானங்கள் பரிசோதனைப் பயன்பாட்டில் காணப்படுகின்ற போதிலும், எதிர்காலத்தில் இவ்வகை விமானங்களைப் பெருமளவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நோக்கிலான ஆய்வுப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

No comments: