யுத்தங்களின்போது விமானப்படையின் பணி பிரதானமானதாகக் காணப்படுகின்றது. எதிரி நாடுகளின் உட்கட்டுமானங்களைச் சிதைப்பதில் விமானப்படையின் பங்கே மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது. தொலைவிலுள்ள நாடுகளுடனான யுத்தங்களின் போது விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் வெடிபொருள் நிரப்புதலுக்கான தளங்களைத் தெரிவுசெய்வதிலுள்ள சிரமங்களைத் தவிர்ப்பதன் பொருட்டே விமானந்தாங்கிக் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நவீன யுத்த விமானங்களுக்கு வானிற் பறப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி காணப்பட்ட போதிலும் வெடிபொருள் மீள் நிரப்புகைக்காகத் தளங்கள் தேவையாகவேயுள்ளன.
விமானந்தாங்கிக் கப்பல்களின் வரலாறு வளிக்கூடு தாங்கிகளின் (Balloon Carrier) உருவாக்கத்திலிருந்தே ஆரம்பமாகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கடற்கண்காணிப்புப் பயன்பாட்டிற்கான வளிக்கூடுகளைத் (Balloon) தாங்கிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட கடற்கலங்களே விமானந்தாங்கிக் கப்பல்களின் எண்ணக்கருவிற்கு அடித்தளமிட்டது. 1910 ஆம் ஆண்டளவில் அமெரிக்கக் கடற்படையின் குருஸ் வகை கப்பலில் இருந்தே உலகின் முதலாவது விமானந் தாங்கிக் கப்பலில் இருந்தான வான்பறப்புமேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலக யுத்தக் காலப்பகுதியில் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஜப்பானியக் கடற்படைகளால் Escort வகை விமானந்தாங்கிக் கப்பல்கள் பெருமளவிற் பயன்படுத்தப்பட்டன. இவ்வகை விமானந்தாங்கிக் கப்பல்களின் உற்பத்திச்செலவு குறைவாகக் காணப்பட்ட படியால் அவை அதிகளவிற் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் கண்டறிபப்பட்ட இவ்வகை விமானந்தாங்கிக் கப்பல்களின் வினைத்திறன் குறையாடு விமானந்தாங்கிக் கப்பல்களின் தொழினுட்ப மேம்பாட்டுக்கான தேவையை உணர்த்தின. இரண்டாம் உலகப்போரின் பின்னர் விமானந்தாங்கிக் கப்பல்கள் தொழினுட்ப மற்கும் வினைத்திறனில் பாரிய வளர்ச்சியைக் கண்டன.
பொதுவாக விமானந் தாங்கிக் கப்பல்கள் ஏனைய போர்க்கப்பல்களுடன் ஒப்பிடும்போது குறைந்தளவு போராயுதங்களையே கொண்டிருப்பதுடன் தாக்குதல் வலுக் குறைந்ததாகவும் காணப்படுகின்றன. இதன் காரணமாக விமானந்தாங்கிக் கப்பல்கள் அவற்றுடன் விரைவு தாக்குதற்கலங்கள், நாசகாரிக்கப்பல்கள் போன்றவற்றைக்கொண்ட அணியாகவே செயற்படுகின்றன.
நவீன விமானந்தாங்கிக் கப்பல்கள் விமானங்கள் மேலெழுதல் (Take-off) மற்றும் தரையிறங்கல் (Landing) போன்ற செயற்பாடுகளைச் செய்யக்கூடியவாறு தட்டையான மேற்பரப்பை உடையவையாகக் காணப்படுகின்றன. விமானங்கள் கப்பலிலிருந்து கப்பலின் முன்புறக்தால் மேலெழுந்து தரையிறங்கும்போது கப்பலின் பின்புறத்தால் தரையிறங்குகின்றன. சில விமானந்தாங்கிக் கப்பல்கள், விமானங்கள் அவற்றிலிருந்து மேலெழும்போது, குறிப்பிட்டதோர் வேகத்தில் முன்நோக்கி நகர்ந்து விமானத்தின் சார்புவேகத்தை அதிகரிக்கின்றன. இதன்காரணமாக விமானம் கப்பலின் மேற்பரப்பில் குறைந்தளவு வேகத்தில் ஓடி மேலெழ முடிகின்றது. ஆயினும் நவீன விமானந்தாங்கிக் கப்பல்களில் விமானம் மேலெழும்போதான வேகத்தை அதிகரிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு விசைப்பொறி (Catapult) பயன்படுத்தப்படுகின்றது. விமானத்தின் முன் சக்கரத்துடன் பொருத்தப்படும் இவ் விசைப்பொறியானது விமானத்தை உந்தித் தள்ளுவதன் மூலம் விமானம் மேலெழுவதற்குத் தேவையான வேகத்தை அதிகரிப்பதோடு மிகக் குறுகிய தூர ஓட்டத்துடன் விமானம் மேலெழுவதற்கும் உதவுகின்றது.
விமானந்தாங்கிக் கப்பல் ஒன்றில் விமானம் ஒன்று தரையிறங்கும்போது விமானத்தின் வாற்பகுதியிலுள்ள கொழுவியமைப்பானது (Tailhook) கப்பலின் மேற்தளத்திலுள்ள வடம் (Arrestor wire) ஒன்றினை பற்றிப்பிடிப்பதன் மூலம் விமானத்தின் வேகம் மிகக்குறுகிய தூரத்தினுள் சடுதியாக ஓய்விற்குக் கொண்டுவரப்படுகின்றது.
விமானந்தாங்கிக் கப்பல்களின் மேற்தளத்தில், இடதுபக்கமாக Island என்றழைக்கப்படும் கப்பலின் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைந்திருக்கும். மிகச்சில கப்பல்கள் இக்கட்டுப்பாட்டுக் கோபுரம் இல்லாது வடிவமைக்கப்படுகின்றன. அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் அவர்களின் பணிகளிற்கேற்ப வெவ்வேறான நிறக்களினாலான உடைகளை அணிந்திருப்பர்.
பிரித்தானிய றோயல் கடற்படையால் முதலாவதாக வடிவமைக்கப்பட்டு பின்னர் பலநாட்டுக் கடற்படைகளாலும் பயன்படுத்தப்படும் அண்மைக்கால விமானந்தாங்கிக் கப்பல்களின் வடிவம் அவற்றின் முன்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து காணப்படும். இவ்வகையான கப்பல்கள் குறுந்தூர ஓட்டத்துடன் மேலெழவல்ல Sea Harrier வகை விமானங்களை கருத்திற்கொண்டே வடிவமைக்கப்பட்ட போதிலும் சாதாரண விமானங்களுக்கும் இவை ஏற்றவையாகவே காணப்படுகின்றன. இவ்வகைக் கப்பல்களின் சிறப்பான மேற்தள வடிவமைப்புக் காரணமாக இவ்வகைக் கப்பல்களில் விமானத்தை உந்தித்தள்ளும் விசையமைப்போ (Catapult) அல்லது தடுப்புவடமோ (Arrestor wire) தேவையில்லை. இருந்தபோதிலும் அதிக சுமையினைக் காவவல்ல விமானங்களான Super Hornet மற்றும் Sukhoi Su-33 வகை விமானங்களுக்கும் E-2 Hawkeye வகை வேகம்குறைந்த விமானங்களுக்கும் இவ்வடிவமைப்புப் பொருத்தமற்றே காணப்படுகின்றது. இதன்காரணமாக, அமெரிக்க வடிவமைப்பாளர்கள் இவ்வடிவமைப்பை வரவேற்கவில்லை.
அமெரிக்கக் கடற்படை அணுசக்தியில் இயங்கும் பாரிய விமானந்தாங்கிக் கப்பல்கள் பதினொன்றை தமது கடற்படைச் சேவையில் ஈடுபடுத்துகின்றது. அமெரிக்கக் கடற்படையே உலகில் அதிகளவான விமானந்தாங்கிக் கப்பல்களைப் பயன்படுத்தும் கடற்படையாகும். அமெரிக்கக் கடற்படை இருபத்திநாலு மணிநேரத்தினுள் உலகின் எப்பாகத்திற்கும் செல்லக்கூடியவாறு தனது விமானந்தாங்கிக் கப்பலணியைத் தயார்நிலையில் வைத்திருக்கின்றது. அமெரிக்கா தவிர்ந்து பிரான்ஸ், சீனா, இந்தியா, ரஸ்யா போன்ற நாடுகள் தமக்கான நவீன விமானந்தாங்கிக் கப்பல்களை உருவாக்குகின்றன. ரஸ்யா 2050 ஆம் ஆண்டளவில் 60000 மெற்றிக் தொன் காவுதிறன் கொண்ட உலகின் மிகப்பொரும் விமானந்தாங்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்துடன் செயலாற்றி வருகின்றது.
No comments:
Post a Comment