பழமொழி.....

Sunday, February 20, 2011

ஜெட் எஞ்சினுக்கும் ராக்கெட் எஞ்சினுக்கும் என்ன வேறுபாடு?


பயணிகளை ஏற்றிக்கொண்டு உலகின் பெரிய நகரங்களுக்கு இடையே பறக்கிற பெரிய விமானங்களில் ஜெட் எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜெட் எஞ்சின்கள் அனைத்திலும் கெரசின் போன்ற  எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின்கள் விமானத்தின் இறக்கைகளில் பொருந்தப்படுகிறது.
விமானத்தின் ஜெட் எஞ்ஜின்
விமானத்தின் ஜெட் எஞ்ஜின்
காற்றில் உள்ள ஆக்சிஜனை ஜெட் எஞ்சின் உறிஞ்சுகிறது. இதைப் பயன்படுத்தி  எரிபொருள் எரிந்து,  ஜெட் எஞ்சினின் பின்புறம் வழியே பயங்கர வேகத்தில் பீச்சப்படுகிறது. இந்த பீச்சு இயக்கம் காரணமாக விமானம் முன் நோக்கிப் பறக்கிறது. ஜெட் எஞ்சின் செயல்பட காற்று - ஆக்சிஜன் - தேவை என்பதால் ஜெட் எஞ்சினால் காற்று மண்டலத்துக்கு மேலே விண்வெளியில் செயல்பட முடியாது. எந்த விமானமும் ராக்கெட் போன்று விண்வெளிக்கு செல்ல முடியாது என்பதற்கு இது முக்கிய காரணம்.
விமானங்களின் வடிவமைப்பு காரணமாக இறக்கைகளுக்கு மேற்புறத்தில் வெற்றிடம் ஏற்பட்டு விமானம் மேலே செல்ல முடிகிறது. விண்வெளியில் காற்று இல்லை என்பதால் விமானங்கள் இவ்வகையில் மேலே செல்ல முடியாது என்பது மற்றொரு முக்கிய காரணமாகும். ஜெட் எஞ்சின் போர் விமானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
ராக்கெட்டின் நோக்கம் வேறு. தவிர, ராக்கெட்டுகளில் பல வகைகள் உள்ளன. நோக்கத்தையும் பயனையும் பொருத்து அதன் எடை, கொள்ளளவு ஆகியவை அமையும். செயற்கைக்கோள்களைச் செலுத்துகிற ராக்கெட்டுகளை எடுத்துக்கொண்டால் அவை வடிவில் பிரும்மாண்டமானவை. வேகம் தான் இதில் முக்கியம். அந்த அளவில் அவை  எரிபொருளை  நிறையப் பயன்படுத்துகின்றன. எரிபொருள் விஷயத்தில் அவை பகாசுர விழுங்கிகள். ஆகவே ஒரு ராக்கெட்டில் கிட்டத்தட்ட அதன் "உடம்பு" பூராவுமே  எரிபொருள் டாங்கியாக இருப்பதில் வியப்பில்லை.
Delta IV அமெரிக்க ராக்கெட்டில் பயன்படுத்திய எஞ்ஜின்
Delta IV அமெரிக்க ராக்கெட்டில் பயன்படுத்திய எஞ்ஜின்
ராக்கெட்டில் எந்த எரிபொருள் பயன்படுத்தப்பட்டாலும் சரி, அது எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. ஆனால் விண்ணில் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் சென்றால் காற்று - ஆகவே ஆக்சிஜன் - கிடையாது. அதனால்,  எரிபொருள் மட்டுமன்றி ஆக்சிஜனை அளிக்கிற பொருளையும்  ராக்கெட்டில் வைத்தாக வேண்டும்.  எரிபொருளும் ஆக்சிஜனும் சேர்ந்து பயங்கர வெப்பத்தில் எரிந்து ராக்கெட்டின் பின்புறம் வழியே பீச்சிடும். இந்த இயக்கத்தால் ராக்கெட் விண்ணை நோக்கி உயரே பாய்கிறது.
ராக்கெட் எஞ்சினிலிருந்து - ராக்கெட்டின் அடிப்புறத்திலிருந்து வெளிப்படும் தீப்பிழம்பு பயங்கர வெப்பம் கொண்டது என்பதால் அதைத் தாங்கி நிற்கும் வகையிலான உலோகங்களைப் பயன்படுத்தி எஞ்சின் உறுப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

No comments: