உலங்கு வானூர்திகள் வான்வழிப் போக்குவரத்தின் இன்னொரு பரிமாணமாகவே காணப்படுகின்றன. உலங்குவானூர்திகள் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கிடைச்சுழலிகள் (horizontal rotor) கொண்டிருப்பதோடு ஒவ்வொரு சுழலியும் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சுழலித்தகடுகளைக் (rotor blades) கொண்டிருக்கக் காணப்படுகின்றன. உலங்குவானூர்திகள் நிலையான இறக்கைகளைக்கொண்ட வானூர்திகளிலிருந்து அவற்றின் நிலைக்குத்தான தூக்குசக்தியை (vertical lift) உருவாக்கும் விதத்தினால் வேறுபடுகின்றன.
உலங்குவானூர்திகளின் பிரதான அனுகூலமானது அவற்றின் நிலையான இடத்திலிருந்து மேலெழவோ கீழிறங்கவோ கூடிய தன்மையேயாகும். ஓடுபாதையின்றி சிறிய பகுதியில் தரையிறங்கவோ அல்லது மேலெழவோ கூடிய இத்தன்மையின் காரணமாக விமானங்களைப் பயன்படுத்த முடியாத பகுதிகளில் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்த முடிகின்றது.
Helicopter எனும் உலங்குவானூர்தியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை 1861 களிலேயேபயன்பாட்டிற்கு வந்தபோதிலும், நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சீனப் புத்தகம் ஒன்றில், உலங்குவானூர்திகளின் அடிப்படைப் பறப்புத் தத்துவத்திலமைந்த சீனச் சிறுவர்களின் விளையாட்டுப்பொருள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. இருந்தபோதிலும், 1480 களின் ஆரம்பத்தில் புகழ்பெற்ற ஓவியரான லியனாடோ டா வின்சியால் நிலைக்குத்தாகப் பறக்கக்கூடிய ஓர் இயந்திரத்தின் ஓவியம் வரையப்படும்வரை, நிலைக்குத்தாக பறப்பிற்கான (vertical flight) எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பல்வேறு விஞ்ஞானிகளால் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
1906 ஆம் ஆண்டு பிரான்சைச் சேர்ந்த சகோதரர்களானJacques and Louis Breguet ஆகியோர் ஆரம்பித்த பரிசோதனை முயற்சி 1907 ஆம் ஆண்டிலேயே வெற்றியடைந்தது. ஆம் உலகின் முதலாவது உலங்குவானூர்தி அதன் விமானியை ஒரு நிமிட நேதர்திற்கு இரண்டடி உயரத்தில் உயர்த்தி வைத்திருந்தது. மனிதர்களின் முதலாவது நிலைக்குத்தான பறப்பு முயற்சி வெற்றியடைந்த போதிலும், இவ்வுலங்குவானூர்தியின் வடிவமைப்பிலிருந்த குறைபாடுகள் காரணமாக தொடர்ச்சியான மற்றும் சுமுகமான பறப்பிற்கு ஏற்ற வடிவமாக இது இருக்கவில்லை. பறப்பின்போதான சமநிலையைப் பேணுவதற்காக தேவையான சுமைகளை ஏற்றவேண்டிய தேவை இதன் வடிவமைப்பில் காணப்பட்ட குறையாகும்.
அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் பிரான்சைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான Paul Cornu என்பவர் 20 அடி நீளமான இரண்டு எதிரெதிர்த் திசையில் சுற்றும் சழலிகளைக் கொண்ட உலங்குவானூர்தியை உருவாக்கினார். இவ்வுலங்கு வானூர்தி ஓரு அடி உயரத்திற்கு 20 செக்கன்கள் மட்டுமே பறக்கக்கூடியதாக இருந்தபோதிலும் அதன் வடிவமைப்பு சுமுகமான பறப்பிற்கு ஏற்றதாகக் காணப்பட்டது. பறப்பின்போதான சமநிலையினைப் பேணுவதற்கு மேலதிக சுமை ஏற்றவேண்டிய தேவை இவ்வடிவமைப்பில் காணப்படவில்லை. தொடர்ச்சியான பரிசோதனைகளின் மூலம் இரண்டு மீற்றர்கள்வரை பறக்கக்கூடியவாறு இது மேம்படுத்தப்பட்டது. இவ்வடிவமைப்பானது தொடர்ந்துவந்த உலங்குவானூர்திகளின் சிறப்பான வடிவமைப்பிற்கு அடிகோலியது எனலாம்.
உலங்குவானூர்திகளின் மேம்பாட்டிற்கான பரிசோதனைகள் தொடர்ச்சியாகப் பலராலும் மேற்கொள்ளப்பட்டுவந்த போதிலும், பிரான்சைச் சேர்ந்த Etienne Oehmichen என்பவர் 1924 ஆம் ஆண்டு 360 மீற்றர் தூரத்திற்கு அவர் உருவாக்கிய உலங்குவானூர்தியில் பறந்து முதலாவது உலக சாதனையை நிலைநாட்டினார். அதைத்தொடர்ந்து அதே ஆண்டு ஆஜென்ரீனாவைச் சேர்ந்த Pescara என்பவரால் Oehmichen இன் சாதனை 4 நிமிடங்கள் 11 செக்கன்களில் 736 மீற்றர்களுக்குப் பறந்ததன் முலம் முறியடிக்கப்பட்டது. அவ்விருவரது உலங்குவானூர்திகளாலும் ஆகக்கூடியது இரண்டு மீற்றர் உயரத்திற்கே பறக்க முடிந்தது. இருந்தபோதிலும் Oehmichen இன் விடாமுயற்சியின் காரணமாக, அதே ஆண்டிலேயே அவர் 5550 அடி தூரத்தை 50 அடி உயரத்தில் 14 நிமிடங்களில் பறந்து கடந்து புதிய சாதனையை நிலைநாட்டினார்.
இக்காலப்பகுதியில் Spain நாட்டைச்சேர்ந்த Juan de la Cierva என்பவரால் ஓர் உலங்குவானூர்தி வடிவமைக்கப்பட்டது. இவ்வுலங்கு வானூர்தியின் வடிவமைப்பே நவீன உலங்குவானூர்திகளின் வடிவத்திற்கு அடிப்படையாக விளங்கியது. இதனைத் தொடர்ந்து உலங்குவானூர்திகளின் வடிவமைப்பில பல முன்னேற்றங்கள் ஏற்பட்டதுடன் அவற்றின் பயன்பாடும் பலவழிகளிலும் விருத்தியடைந்தது.
இரண்டாம் உலக யுத்தக் காலப்பகுதியில் ஜெர்மனியப் படைகள் உலங்குவானூர்திகளைச் சிறியளவில் அவதானிப்பு, போக்குவரத்து மற்றும் மருத்துவ சேவை போன்றவற்றிற்காகப் பயன்படுத்தினர்.
ஆரம்பகால உலங்குவானூர்திகள் சாதாரண தாழ்ப்பாள் இயந்திரங்களையே (piston engines) பயன்படுத்தியதால் அவற்றின் செயற்றிறன் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்பட்டது. சுழலி இயந்திரங்களின் (turbine engine) வருகை உலங்குவானூர்தி வடிவமைப்பில் ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்ததுடன் அவற்றின் செயற்றிறனையும் கணிசமாக அதிகரித்தது. அதிகரித்த செயற்றிறன் காரணமாக அவற்றின் பயன்பாட்டு எல்லைகளும் விருத்தியடைந்தன.
அமெரிக்காவைச் சேர்ந்த விமானப் பொறியியலாளரான Charles Kaman என்பவரே முதலாவது சுழலி இயந்திரம் பொருத்தப்பட்ட உலங்குவானூர்தியை அமெரிக்கக் கடற்படைக்காக வடிவமைத்தார். 1951 டிசம்பர் 11 ஆம் திகதி Kaman இனால் வடிவமைக்கப்பட்ட K-225 உலங்குவானூர்தி உலகின் முதலாவது சுழலி இயந்திரத்துடனான உலங்குவானூர்தியாக உருவானது.
இராணுவப் பயன்பாட்டில் உலங்குவானூர்திகளின் பயன்பாடு பெருமளவில் விரிவடைந்தது. பறக்கும் டாங்கிகள் (flying tanks) என்றழைக்கப்படுமளவிற்கு உலங்குவானூர்திகள் சமர்க்களங்களிற் பயன்படுத்தப்பட்டன. சோவியத் ஒன்றியத் தயாரிப்பான MI-24, அமெரிக்கத் தயாரிப்பான AH-64 Apache போன்றன பலநாட்டுப் படைகளாலும் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற தாக்குதல் உலங்குவானூர்திகளாகும்.
அமெரிக்கத் தயாரிப்பான Bell வகை உலங்குவானூர்திகள் மீட்புப்பணி, படைகளின் தரையிறக்கம், அவசரகால உதவிப்பணி, தரைத்தாக்குதல் எனப் பல்வேறுபட்ட பயன்களைக் கொண்டவை. அதிகரித்துவிட்ட போக்குவரவு நெரிசலைத் தவிர்ப்பதற்காக பல மருத்துவமனைகள் உலங்குவானூர்திகளை நோயாளர் காவுவாகனமாகப் (Ambulance) பயன்படுத்துகின்றன. பாரிய கொள்கலன்களை (huge containers) நீண்ட தூரத்திற்கு நகர்த்துவதற்கான பாரம் தூக்கிகளாகவும் (crane) உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
தொழிநுட்ப ரீதியிலும் பயன்பாட்டு ரீதியிலும் நாளாந்தம் வளர்ச்சியடைந்துவரும் உலங்குவானூர்திகளை மனிதகுலம் ஆக்கப்பாதைக்கு மட்டுமன்றி அழிவுப்பாதைக்கும் பயன்படுத்துகின்றது என்பது வேதனை தரக்கூடிய விடயமே.
No comments:
Post a Comment