பழமொழி.....

Wednesday, February 16, 2011

Boeing 747 Laerge Cargo Freighter.......



300px-Boeing_747-409LCF_Dreamlifterவிமான உற்பத்தித் துறையில் பிரபல்யமாக விளங்கும் போயிங் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இவ்விமானம் பொருட்கள் ஏற்றும் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. 2003 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் போயிங் நிறுவனம் தனது சரக்கு விமான உற்பத்தித் திட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. இத்திட்டத்திற்கமைவாக, ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த போயிங் 747-400 வகை விமானத்தை மீள் வடிவமைப்புச் செய்து தனது சரக்கு விமானத்தை உருவாக்கியது.
இந்தச் சரக்கு விமானமே தற்போது உலகில் பயன்பாட்டிலுள்ள சரக்கு விமானங்களுள் நீண்ட துாரத்திற்கு தொடர்ச்சியாகப் பயணிக்கவல்ல விமானமாகும்.
இவ்விமானத்தின் பொருளேற்றும் பகுதி 1840 கனமீற்றர் கொள்ளளவு உடையது. இந்த விமானம் 71.68 மீற்றர் நீளம், 21.54 மீற்றர் உயரம் மற்றும் இறக்கைகள் உள்ளடங்கலாக 64.4 மீற்றர் அகலம் உடையது. முழுமையான சுமையுடன் 7800 கிலோமீற்றர் தூரத்திற்குப் பறக்கவல்லது.
2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தனது முதலாவது பறப்பை மேற்கொண்ட இந்தவகை விமானங்கள், நான்கு மட்டுமே உலகில் பயன்பாட்டில் உள்ளன.

Aero Spacelines Super Guppy

220px-SuperGuppy-F-BPPAபாரியளவில் சுமைகளைக் காவிச்செல்ல வல்ல இன்னொரு வகை விமானமே இந்த Aero Spacelines Super Guppy ஆகும். இந்த வகை விமானம் முதலில், அமெரிக்க இராணுவத்தின் சேவையிலிருந்து ஓய்விற்கு கொண்டுவரப்பட்டிருந்த C-97J Turbo Stratocruiser விமானத்தின் உடற்பகுதியிலிருந்து தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. இவ்வகை விமானத்தின் உடலமைப்பு, அளவில் (size) பெரியதாகக் காணப்படும் பொருட்களை ஏற்றுவதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விமானம் 43 மீற்றர் நீளமும் 7.6 மீற்றர் விட்டமும் உடைய ஒரு பலூன் போன்று காணப்படுகின்றது. இரு இறக்கைகளுடன் சேர்த்து 47.6 மீற்றர் அகலம் மற்றும் 14.1 மீற்றர் உயரம் கொண்ட இவ்விமானம் 77110 கிலோக்கிராம் சுமையைக் காவிச்செல்லவல்லது.
1965 இல் இவ்விமானம் தனது முதற் பறப்பை மேற்கொண்டது. 1970 களில் Airbus விமான உற்பத்தி நிறுவனத்தினால் இவ்வகை விமானங்கள் இரண்டு அவர்களுடைய விமான உற்பத்திக்குத் தேவையான விமானப் பாகங்களை காவும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டது. அதுதவிர, நாசா மற்றும் Aero Spaceline போன்ற நிறுவனங்களும் இவ்விமானத்தை பயன்படுத்துகின்றன. மொத்தம் ஐந்து விமானங்களே பயன்பாட்டில் இருக்கினறன.

Airbus Beluga

300px-A300-600ST_1_New_Colourஇது Airbus நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சரக்குவிமானமாகும். இவ்விமானம், Airbus நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மற்றைய விமானங்களுக்கான பாகங்களைக் காவிச்செல்லத் தக்கவாறு உருவாக்கப்பட்டது. Airbus நிறுவனம் தொடங்கப்பட்ட காலப்பகுதியில் பெரும்பாலான விமானப்பாகங்கள் தரைமார்க்கமாகவே இடம் மாற்றப்பட்டன. அக்குறையை நிவர்த்திசெய்யும் நோக்கிலேயே இவ்விமானம் உற்பத்தி செய்யப்பட்டது. 7.7 மீற்றர் உடற்பகுதி விட்டமுடைய இந்த விமானத்தினுள் 1210 கனமீற்றர் கனவளவுடைய பொருட்களை ஏற்றிச்செல்ல முடியும்.
1992 இல் உற்பத்தி தொடங்கப்பட்டு, 1994 செப்ரெம்பரில் முதலாவது பரிசோதனைப் பறப்பை மேற்கொண்ட இவ்விமானம், 1995 செப்ரெம்பரில் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 56.15 மீற்றர் நீளம், 17.24 மீற்றர் உயரமுடைய இவ்விமானம் இரு இறக்கைகளுடன் சேர்த்து 44.84 மீற்றர் அகலம் உடையது. இவ்விமானம் 40 தொன் நிறையுடன் 2779 கிலோமீற்றர் தூரத்திற்கு தொடர்ச்சியாகப் பறக்கவல்லது.
Airbus நிறுவனத்தால் மட்டுமே பயன்படுத்தப்படும் இவ்விமானம், மொத்தம் ஐந்து மட்டுமே சேவையிலுள்ளது.

No comments: