தாரை இயந்திரங்கள் விமானங்கள் தவிர்ந்த வேறு தேவைகளிற்காகவும் பயன்படுத்தப்பட்ட போதிலும், இக்கட்டுரையில் நாம் விமானங்களிற்குப் பயன்படுத்தப்படும் தாரை இயந்திரங்களையும் அவற்றின் செயற்பாடுகளைப் பற்றியுமே பார்க்கின்றோம். அடிப்படையில் தாரை இயந்திரங்கள் ஆறு பிரதான பகுதிகளைக் கொண்டிருக்கின்றன.
- வளி உள்ளிளுக்கும் காற்றாடி (Intake Fan)
- தாழ் அழுத்த வளியமுக்கி (Low-pressure compressor)
- உயரழுத்த வளியமுக்கி (High-pressure compressor)
- எரிக்கும் அறை (Combustion Chamber)
- சுழற்றி (Turbine)
- நுனிக்குழாய் (Nozzle)
இந்த ஆறு பகுதிளுடன், சில சிறப்பான தேவைகளுக்காக இயந்திரங்களின் செயற்றிறனை அதிகரிப்பதற்காக வேறு சில பகுதிகளும் காணப்படுகின்றன.
வளி உள்ளிளுக்கும் காற்றாடியானது இயந்திரத்தின் முன்பகுதியிற் காணப்படுகின்றது. இக்காற்றாடியே இயந்திரத்தில் எரிபொருள் எரிவதற்குத் தேவையான வளியினை உள்ளிளுக்கும் பணியினைச் செய்கின்றது. தாரை இயந்திரத்தினைப் பொறுத்தளவில் வளியானது தனியாக எரிபொருளை எரிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக உயரழுத்தத்தில் எரியூட்டப்பட்ட வளியே இங்கு உந்துசக்தியை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இதன்காரணமாக, உன்ளிளுக்கப்பட்ட வளியானது உயர் மற்றும் தாழ் அழுத்த வளியமுக்கிகளின் துணையுடன் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. இவ்வாறு அழுத்தப்பட்ட வளி உயரழுத்தத்துடன் எரிக்கும் அறைக்குட் செலுத்தப்பட்டு - எரிக்கும் அறையினுட் செலுத்தப்படும் எரிபொருளுடன் சேர்த்து - எரிக்கப்படுகின்றது. இவ்வாறு உயரழுத்தத்துடன் எரிக்கப்படும் வளியானது எரிக்கும் அறையின் பின்பகுதியிலுள்ள திறந்தவழியினூடு பின்நோக்கி வெளித்தள்ளப்படுகின்றது. அவ்வாறு வெளித்தள்ளப்படும் உயரழுத்த வெப்பச் சுவாலை பின்பகுதியிலுள்ள சுழற்றியின் (Turbine) தகடுகளில் (Fin) மோதுவதன் காரணமாக சுழற்றி சுழற்றப்படுகின்றது. வளி உள்ளிளுக்கும் காற்றாடி, வளியமுக்கிகள் மற்றும் சுழற்றி என்பன ஒரே சுழலும் அச்சில் பொருத்தப்பட்டிருப்பதனால் இவற்றின் இயக்கம் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. சுழற்றியின் தகடுகளில் மோதி வெளியேறும் உயரழுத்த வெப்பச் சுவாலை இயந்திரத்தின் கடைப்பகுதியிலுள்ள நுனிக்குழாயூடாக (Nozzle) வெளியேறுவதன் காரணமாக உந்துவிசை உருவாக்கப்படுகின்றது. இவ்வுந்துவிசை இயந்திரத்தை (இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள விமானத்தை) முன்நோக்கி நகர்த்துகின்றது.
தாரை இயந்திரமொன்றின் அடிப்படைத் தொழிற்பாடு மேற்கூறப்பட்டவாறே காணப்பட்டபோதிலும் இயந்திரத் தயாரிப்பாளர்கள் சிறப்பான சில அமைப்புக்களை உருவாக்குவதன் மூலம் தமது இயந்திரங்களின் செயற்றிறனை அதிகரிக்கின்றனர். தற்கால விமானங்களிற் பொருத்தப்பட்டிருக்கும் தாரை இயந்திரங்கள் மேற்கூறப்பட்ட அமைப்பிலிருந்து சற்று வித்தியாசப்பட்டே காணப்படும். தற்கால இயந்திரங்களில் காணப்படும் உயர் மற்றும் தாழ் அழுத்த வளியமுக்கிகள் வெவ்வேறான சுழலும் அச்சுக்களிற் பொருத்தப்பட்டுக் காணப்படுவதுடன் அவையிரண்டும் வெவ்வேறு வேகத்திற் சுழலக்கூடியவாறு வெவ்வேறு சுழற்றிகளுடனும் பொருத்தப்பட்டிருக்கும். இவ்வாறு வெவ்வேறு வேகத்திற் சுழலும் வளியமுக்கிகளின் மூலம் அமுக்கப்படுவதன் காரணமாக இயந்திரத்தின் உந்துசக்திச் செயற்றிறன் மேலும் அதிகரிக்கப்படுகின்றது.
இருப்பினும் Ramjet வகை இயந்திரங்களில் நகரக்கூடிய பாகங்கள் எவையும் காணப்படமாட்டா. இவ்வகை இயந்திரங்களில் வளியை உள்ளிளுத்தல், அழுத்துதல் போன்ற செயற்பாடுகள் நகராத மாற்றீடான அமைப்புக்களின் மூலம் மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment