விமானப் போக்குவரத்துத் துறையில் மின்காந்தத் தொலையுணரிகளின் (radar) பயன்பாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. விமானக் கட்டுப்பாட்டாளர்கள் விமானங்களின் அமைவிடங்களைத் துள்லியமாக அவதானித்து, விமானிக்கு வேண்டிய தகவல்களை அளித்து விமானத்தைச் சரியாக வழிநடாத்துவதற்கு இத் தொலையுணரிகளின் பயன்பாடு பேருதவி புரிகின்றது.
இதே சமயத்தில் போர் நடவடிக்கைகளின் போது எதிரிப் படைகளின் விமானப் பறப்புக்களை அவதானித்து அவற்றின் தாக்குதல்களிலிருந்து இலக்குக்களைக் காப்பதற்கும் அவ்வெதிரி விமானங்களின்மீது தாக்குதல் மேற்கொள்வதற்கும்கூட இத்தொலையுணரிகளே துணைபுரிகின்றன. இவ்வாறாக மின்காந்தக் கண்களின் மூலம் வான்வெளியைக் கண்காணித்தவண்ணமுள்ள இத்தொலையுணரிகளின் கண்களில் மண்ணைத்தூவி அவற்றின் மின்காந்தக் கண்களுக்குப் புலப்படாது பறக்கவல்ல தொழிநுட்பங்களுடன் (stealth technology) உருவாக்கப்பட்ட விமானங்களே மறைவு நடவடிக்கை விமானங்கள் (stealth aircraft) ஆகும். மறைப்புத் தொழிநுட்பம் (stealth technology) என்றழைக்கப்படும் விமானங்களை மின்காந்தத் தொலையுணரிகளின் கண்களிலிருந்து மறைக்கும் தொழிநுட்பங்களை உருவாக்கும் முயற்சி இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. அமெரிக்க விமானப்படையின் F-117 Nighthawk, B-2 Sprit Stealth Bomber, F-22 Raptor மற்றும் F-35 Lightning II மற்றும் இரஸ்ய, இந்திய விமானப் படைகளின் Sukhoi PAK FA ஆகியன இந்த மறைப்புத் தொழிநுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரபல்யமான போர் விமானங்களாகும்.
விமானமொன்றை தொலையுணரிகளின் கண்களிலிருந்து முற்றுமுழுதாக மறைத்துவிடுவதென்பது இயலாத காரியமாகவே காணப்படுகின்ற போதிலும், மறைப்புத் தொழிநுட்பமானது தொலையுணரிகளால் விமானமொன்று தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதை தடுப்பதுடன் தொலையுணரிகளின் தெறிப்புக் கதிர்களில் (reflected magnatic waves) குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் விமானத்தின் துல்லியமான அமைவிடம் மற்றும் பிற தகவல்கள் தொலையுணரிக்குக் கிடைப்பதைத் தடுக்கின்றது. இவ்வாறு மின்காந்த அலைகள் தெறிப்படைந்து தொலையுணரிக்குத் தகவல்கள் சென்றடைவதைத் தடுப்பதற்காக விமான உடற்பகுதியின் சிறப்பான வடிவமைப்பு, தொலையுணரியின் மின்காந்த அலைகளைக் குழப்பமடையச் செய்வதற்காக போலியான மின்காந்த அலைகளை உருவாக்குதல், மின்காந்த அலைகளை உறிஞ்சவல்ல உடற்பூச்சு போன்ற பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. மின்காந்தத் தொலையுணரிகளால் மட்டுமன்றி, போர் விமானங்கள் அவற்றின் இயந்திரத்தின் வெப்பத்திலிருந்து வெளியேறும் அகச்சிவப்புக்கதிர், இயந்திர ஒலி போன்றவற்றை உணரும் கருவிகள் மூலமாகவும் கண்டறியப்படலாம். எனவே மறைப்புத் தொழிநுட்பமானது இவ்வாறான வழிகளில் விமானம் கண்டறியப்படுவதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் கையாள்கின்றது.
ஆரம்பத்திற் தயாரிக்கப்பட்ட மறைவு நடவடிக்கை விமானங்கள் முற்றுமுழுதாக மின்காந்தத் தொலையுணரிகளின் பார்வையிலிருந்து விமானத்தை மறைப்பதையே பிரதான நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதால், அவற்றின் காற்றியக்கவியற் செயற்பாடுகளில் பல குறைபாடுகள் காணப்பட்டன. இதன்காரணமாக F-117 மற்றும் B-2 Sprit ஆகிய விமானங்கள் பறப்பின்போது மூன்று நிலை அச்சுக்களிலும் உறுதியற்ற தன்மையுடனேயே (unstable in three axis) காணப்பட்டன. சாதாரண போர்விமானங்கள் பறப்பின்போது பொதுவான ஒன்று அல்லது இரண்டு அச்சுக்களிலேயே உறுதியற்றுக் காணப்படும். இருப்பினும் நவீன தொழிநுட்பங்களின் வருகை, 4ஆம் மற்றும் 5 ஆம் தலைமுறைப் போர் விமானங்களில் இக்குறைபாடுகளைக் களைந்துவிட்டது.
ஆரம்பகால மறைவு நடவடிக்கை விமானங்களான F-117 மற்றும் B-2 Sprit ஆகியவை இயந்திரத்திலிருந்து வெளியேறும் வெப்பத்தின் அளவைக் குறைக்குமுகமாக மீளெரியறை (afterburner) அற்ற இயந்திரங்களையே பயன்படுத்தின. இதன்காரணமாக இவ்விமானங்கள் வான்சண்டை (dogfight) நடவடிக்கைகளுக்கு ஏற்றவையாகக் காணப்படவில்லை. இவை தரையிலக்குகளைத் தாக்கும் நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து விருத்திசெய்யப்பட்ட விமான வடிவமைப்புத் தொழிநுட்பங்களின் வளர்ச்சி உறுதித்தன்மைவாய்ந்த பறப்புக்களை (stable flight) மேற்கொள்ளவல்லனவும் முன்னணி வான்சண்டைகளை (front-line dogfight) மேற்கொள்ள வல்லனவுமான F-22 மற்றும் F-35 போன்ற மறைவு நடவடிக்கை விமானங்களை வடிவமைப்பதற்கு வழிவகுத்தது.
பெருமளவான இலத்திரனியல் உபகரணங்களின் பயன்பாடு காரணமாக விமானத்திலிருந்து கணிசமானளவு மின்காந்தப் புலம் வெளியேறுகின்றது (electromagnetic emmission). இம்மின்காந்தப் புலத்தின் காரணமாக, மறைவு நடவடிக்கை விமானங்களைக் கண்டறிவதற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மின்காந்தத் தொலையுணரிகளின் மூலம் விமானம் கண்டறியப்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது. எனவே, இவ்வாறான மின்காந்தப்புலத்தினை இயலுமானளவிற்குக் குறைக்கத்தக்கவகையிலேயே இவ்விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சாதாரண போர்விமானங்களில் அவை காவிச்செல்லும் போர்த்தளவாடங்கள் விமான உடலின் புறப்பகுதியிலேயே பொருத்தப்பட்டிருக்கும். ஆகால் மறைவு நடவடிக்கை விமானங்களில் போர்த்தளவாடங்கள் அனைத்தும் விமானத்தின் உட்பகுதியிலேயே எடுத்துச்செல்லப்படும். தாக்குதற் சமயங்களில் போர்த்தளவாடங்களுக்கான பிரத்தியேக வழிகள் திறக்கப்பட்டுத் தாக்குதல் நடாத்தப்படும். இவ்வாறு இந்த வழிகள் திறக்கப்படும் சமயத்தில் அவற்றின் அமைப்புக் காரணமாக விமானங்கள் மின்காந்தத் தொலையுணரிகளினால் கண்டுகொள்ளப்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. இவ்வபாயத்தைத் தடுக்கும் அல்லது குறைக்கும் முகமாக, இவ்வழிகள் மிகவும் வேகமாகத் திறந்து மூடத்தக்க வகையில் அமைக்கப்பட்டிருக்கும். F-22 போன்ற நவீன மறைவு நடவடிக்கை விமானங்கள் ஏவுகணை மற்றும் குண்டுகளை வெளியேற்றும் வழிகளை ஒரு விளாடிக்கும் குறைவான நேரத்தில் திறந்து மூட வல்லவையாகக் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் சில வகையான ஏவுகணைகள் விமானத்திற் பொருத்தப்பட்டிருக்கும்போதே அவற்றின் இலக்கினைக் கண்டறிந்து இலக்கு தொடர்பான தகவல்களை நினைவகத்திற் பதிகின்றது. இவ்வகையான ஏவுகணைகளை மறைவு நடவடிக்கை விமானங்களில் பயன்படுத்தும்போது ஏவுகணை வெளியேற்றும் வழி கூடுதல் நேரத்திற்குத் திறந்திருக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இவ்வாறான தவிர்க்கவியலாத சந்தர்ப்பங்களில் பிற வழிமுறைகளைப் பின்பற்றியே விமானத்தை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
மறைவு நடவடிக்கை விமானங்களில் வெடிபொருட்கள் அனைத்தும் விமானத்தின் உட்பகுதியிலேயே காவிச் செல்லப்படுவதன் காரணமாக , இவ்விமானங்களால் ஏனைய போர்விமானங்களைப் போன்று பெருமளவான வெடிபொருட்களைக் காவிச்செல்ல முடியாது. எனவே இவ்வகை விமானங்கள் அதிசக்திவாய்ந்த போராயுதங்களை சிறியளவில் காவிச்செல்வதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை விமானங்களில் இது ஒரு குறைபாடாகவே காணப்படுகின்றது. அத்துடன் இவ்விமானங்களின் பராமரிப்புச் செலவும் மிகவும் அதிகம்.
No comments:
Post a Comment