பழமொழி.....

Sunday, February 13, 2011

இறக்கையில்லாத விமானம் இருக்க முடியுமா?

இறக்கை இல்லாத பறக்கும் வாகனம் ஒன்று உள்ளது. வாயு நிரப்பப்பட்ட அந்த வாகனம் ஆகாயக் கப்பல் என்று அழைக்கப்படுகிறது.
மற்றபடி, இறக்கையில்லாத விமானம் இருக்க முடியாது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலில், தத்துவார்த்த காரணத்தைக் கவனிப்போம். விமானம் அந்தரத்தில் பறக்கிறதென்றால் அதற்கு உதவுவது இறக்கைகளே. விமானம் பறக்கும்போது இறக்கையின் வடிவமைப்பு காரணமாக இறக்கைகளின் மேற்புறத்தில் வெற்றிடம் உருவாகிறது. அதே சமயத்தில் இறக்கைகளின் அடிப்புறத்தில் காற்றானது இறக்கையை மேல் நோக்கித் தள்ளுகிறது. இதன் விளைவாகவே விமானம் அந்தரத்தில் செயல்பட முடிகிறது. அதே நேரத்தில், விமானத்தின் எஞ்சின் முன்னே செல்ல உதவுகிறது.
இரண்டாவது காரணம் நடைமுறைப் பிரச்சனை சம்பந்தப்பட்டது.
Airbus A380 விமானத்தில் எரிபொருள் டாங்க் இருக்கும் இடங்கள்
Airbus A380 விமானத்தில் எரிபொருள் டாங்க் இருக்கும் இடங்கள் நீல நிறத்தில்
இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அல்லது அமெரிக்காவுக்கு குறைந்தது 300 பயணிகளை ஏற்றிச் செல்கிற பெரிய விமானங்களை சினிமாவிலாவது பார்த்திருக்கலாம். இவை பல ஆயிரம் கிலோமீட்டர் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை. இவ்வளவு பயணிகளையும் அவர்களது மூட்டை முடிச்சுகளையும் சுமந்து செல்ல இந்த விமானங்களுக்கு ஏராளமான எரிபொருள் தேவை.
விமானத்தின் இறக்கைகளில் அடுத்தடுத்து தனித் தனியாக சிறிய அறைகள் இருக்கும். நிரப்பப்படும் எரிபொருள் இவற்றில் போய்ச் சேரும். விமானத்தின் வால் புறத்தில் இரு புறங்களிலும் வால் இறக்கைகள் உள்ளன. நீண்ட தூரம் பறக்கிற பயணி விமானங்களில் இந்த வால்புற இறக்கைகளிலும் எரிபொருள் நிரப்பப்படுகிறது.
பெரிய பயணி விமானங்களின் இறக்கைகள் மிகப் பெரியவை. இவற்றுக்குள் சுமார் 40 கார்களை நிறுத்த முடியும் என்ற அளவுக்கு இவை நிறைய கொள்திறனைக் கொண்டவை. பெரியதொரு பயணி விமானம் சுமார் 2 லட்சம் லிட்டர் எரிபொருளை நிரப்பிச் செல்லக்கூடும். ஆகவே இறக்கைகள் - அதுவும் இவ்வளவு பெரிய இறக்கைகள் - இல்லாவிடில் விமானங்களால் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள முடியாது.
இவ்வளவு எரிபொருளை நிரப்பிக்கொண்டு வானில் கிளம்பிய சிறிது நேரத்தில் ஏதோ காரணத்தால், புறப்பட்ட இடத்துக்கே திரும்ப, அல்லது அருகில் உள்ள விமான நிலையத்தில் தரை இறங்க, அவசியம் ஏற்பட்டால் அதில் பிரச்சனை உண்டு. அதாவது மிகுந்த எரிபொருளுடன் விமானத்தை கட்டுப்படுத்தி தரை இறக்குவது கடினம்; சக்கரங்கள் சேதமாகலாம்; மேலும், தீ விபத்து ஏற்பட்டால் தேவைக்கு அதிகமான எரிபொருளினால் நிலைமை மோசமாகும். ஆகவே விமானம் வானில் கணிசமான எரிபொருளை இரைத்து நன்கு குறைத்துக்கொண்ட பிறகே தரை இறங்குவது வழக்கம்.

No comments: